ஈழப்போராட்டம் தொடர்பாக, அதில் முக்கிய பங்காளிகளான விடுதலைப்புலிகளின் யாருமறியாத உள் தகவல்களை விலாவாரியாக தமிழ்பக்கத்தின் “இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?“ தொடரில் குறிப்பிட்டு வருகிறோம். அந்த தொடரில் கிழக்கு மாகாண பிளவு பற்றிய தகவல்களை குறிப்பிட்டு வருகிறோம். புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாகவிருந்த கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு ஏன் பிரிந்தார், தனிமனித பிரச்சனைகளிற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பிப்பதில் ஊடகவியலாளர் தராகி சிவராம் போன்றவர்கள் ஆற்றிய பங்கு, புலிகள்- கருணா மோதலில் நடந்த உள் விசயங்கள் என பல விசயங்களை அறிந்திருப்பீர்கள். மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம் தொடர் 02
1984ம் ஆண்டு புளொட் அமைப்பிடம் இருந்த ஏ.கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அந்த சமயத்தில் எல்லா இயக்கங்களின் ஆயுத பலமும் மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் மற்றைய இயக்கங்களை விட புளொட் இன்னும் கொஞ்சம் பலவீனமாக இருந்தது. மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம்- தொடர் 03
விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து காடுகளில் ஒளிந்திருந்த புளொட் போராளிகள் மீது இந்திய படைகளும் தாக்குதலை ஆரம்பித்தனர் என்பதையும், இரண்டு பக்கமும் தாக்குதல் நடக்க, தப்பிக்க மார்க்கமில்லாமல் புளொட் போராளிகள் திண்டாடினார்கள் என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம்- தொடர் 04
புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொலையில் சிவராமின் பங்கு என்னவென்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதெனில், இந்தியாவின் உதவி தேவை யென்ற நிலையில் உமா மகேஸ்வரன் இந்திய உதவியை பெற தயாராக இருக்கவில்லை. மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம்- தொடர் 05
தமிழ்நெற் இணையத்தளம் அதிதீவிர தமிழ் தேசியம் பேசும் இணை யத்தளம், அது விடுதலைப்புலிகளின் பின்னணியில் உருவானது என்றுதான் பலரும் நினைக்கிறா ர்கள். தமிழ்பக்கத்தில் கடந்த பாக த்தை படித்த பின்னர்தான் பலருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த இணைய குழாமை சேர்ந்த ஊடகவியலாளர்களிற்கு தமிழ்பக்கத்தில் ஒரு காய்ச்சலும் ஏற்பட்டு விட்டது. மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம் தொடர் 06
கருணா பிரிவில் தராகி சிவராமின் பங்கு என்னவென்பதை மேலோ ட்டமாக கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம். இந்த விவகாரத் தில் நாம் வெளிப்படுத்தியது நூறில் ஒரு பகுதிதான். அவரது பங்கு இதில் இன்னும் பெரியது. பகிரங்கமாக பேசக்கூடியவற்றை பேசி யுள்ளோம். அவ்வளவுதான். கருணாவுடன் சிவராம் இணைந்து செய ற்படுகிறார் என்பதை உறுதிசெய்ததன் பின்னர்தான், புலிகள் தமது பாணியில் சிவராமிற்கு எச்சரிக்கை கொடுத்து, அவரை வெளியே ற்றினார்கள். புலிகளின் எச்சரிக்கை கிடைத்ததும், மட்டக்களப்பிலி ருந்து புறப்பட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானச் சாலையில் சிவராமும் சில நண்பர்களும் 28 ஏப்ரல் 2005 அன்று மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் விடுதியில் இருந்துள்ளனர். மது அருந்தி முடித்து வெளியேறிய சமயத்தில், வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார். பின் னர் மறுநாள் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாக சடலமாக மீட்கப்பட்டார். மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம்- தொடர் 08
பத்திரிகையாளர் சிவராம் கொலை தொடர்பான நமது மினி தொடர் சிறிது இடைவெளி எடுத்து விட்டதற்கு, முதலில் வாசகர்களிடம் மன் னிப்பு கேட்டு கொள்கிறோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது. வாசகர்கள் பொருத்தருள்வா ர்களாக. மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
சிவராம் கொலை இரகசியம்- தொடர்- 09
புளொட் மோகன் தொடர்பான தகவல்களை கடந்த பாகத்தில் குறிப் பிட்டிருந்தோம். மட்டக்களப்பில் புலிகளின் பகுதியில் முதலாவது தாக்குதலை புளொட் மோகன்தான் வெற்றிகரமாக நடத்தியிருந்தார், அதன் பின்னர், இராணுவ புலனாய்வுத்துறை வட்டாரத்திற்குள் அவரது புகழ் கிடுகிடுவென ஏறியிருந்தது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். புளொட் மோகன் பற்றி மேலும் சில தகவல் களை வாசகர்களிற்கு சொல்ல வேண்டும்.
சிவராம் கொலை பற்றிய இந்த தொடரில், புளொட் மோகன் பற் றிய சில தகவல்களையும் கடந்த இரண்டு பாகங்களில் அவ்வப் போது தந்தோம். சிவராம் விவகாரத்துடன் புளொட் மோகனிற்கு எந்த தொடர்பும் இல்லை- காரணம், சிவராமிற்கு முன்னரே மோகன் உயிரிழந்து விட்டார்- என்ற போதும், இரண்டு விவகாரத் திற்குமிடையில் பின்னணியாக சில இழைகள் இணைந்திருந் தன என்ற அடிப்படையில் அவவ்ப்போது புளொட் மோகன் பற்றியும் குறிப்பிட்டு வந்தோம்.மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 62 மணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்-
மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த பாகத்தில் மாணலாற்று காட்டை கலக்கிய தளபதிகளை பற்றிய சில தகவல்களை தருகிறோம். இந்தியப்படைகள் வெளியேறிய சமயத்தில் துரதிஷ்டவசமாக நவம் மரணமாகி விட்டார். இல்லாவிட்டால் மணலாறு சிறப்பு தளபதியாக அவர்தான் நியமிக்கப்பட்டிருப்பார். நவம் மரணமான பின்னர், அவரது பெயரில் கல்விக்கூடம் ஒன்றை ஆரம்பித்து யுத்தத்தில் காயமடைந்த, அங்கங்களை இழந்த போராளிகளை கல்விகற்க வைத்தார் பிரபாகரன். இந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் 1990 இல் முதன்முறையாக முல்லை- மணலாறு மாவட்ட தளபதி என்ற பொறுப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அதற்கு முன்னர் வரை முல்லைத்தீவு மாவட்ட தளபதிகளே இருந்தனர். முல்லை- மணலாறு மாவட்ட தளபதியாக அன்பு நியமிக்கப்பட்டார். விக்டர், பசீலனின் கீழ் வளர்ந்த போராளிகளில் அன்புவும் முக்கியமானவர். இவர் மன்னாரை சேர்ந்தவர். 1990களில் முல்லை- மணலாறு மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றார். 1990 மார்ச் மாதத்தில் இந்தியப்படைகள் இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறின. இதன்பின் பிரமேதாசாவுடன் புலிகள் பேச்சில் ஈடுபட்டனர். இது தோல்வியில் முடிய, 1ம் கட்ட ஈழமப்போர் வெடித்தது. இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் மண்கிண்டிமலை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவம் மணலாற்று காட்டில் ஆதிக்கம் செலுத்தியது. அன்பு அதனை முறியடித்தார். இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் நடத்தி மணலாற்று காட்டை முழுமையாக புலிகளின் பிடியில் வைத்திருந்தார். அப்போது முல்லைத்தீவு மக்களை கொண்டு துணைப்படை என்ற துணை இராணுவப்பிரிவையும் உருவாக்கினார். மணலாற்று காட்டுக்குள் வழிகாட்டிகளாக செயற்பட வேட்டைக்காரர்களின் உதவி தேவைப்பட்டது. அப்படி இணைக்கப்பட்டவர்கள் சிலரது பங்களிப்பு அதிகரித்து, துணைப்படை உருவாக காரணமானது. மணலாறு காட்டுக்குள் வழிகாட்டியாக செயற்பட்ட துணைப்படை வீரர்களுள் மயில்குஞ்சு என்பவர் முக்கியமானவர். போராளிகளால் அதிகமாக நேசிக்கப்பட்டவர். மயில்குஞ்சு கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர். காட்டின் ஒவ்வொரு அடியையும் தெரிந்தவர். புலிகளின் காட்டு நடவடிக்கைகளிற்கு பெரும் துணையாக இருந்தவர். பின்னாளில், மணலாற்று அணிக்கு மட்டுமல்ல, விசேட வேவு அணிக்கும் பாதை வழிகாட்டியாக இருந்தார். 1998 இல் மணலாற்று காட்டில் தவறுதலான துப்பாக்கி சூட்டில் மரணமானார். அவருக்கு புலிகள் மேஜர் தர நிலை வழங்கினார்கள். இப்படியானவர்களை இணைத்து துணைப்படையை உருவாக்கி, இருந்த சொற்ப போராளிகளுடன் மணலாற்று காட்டை அன்பு பாதுகாத்தார். மணலாற்று காட்டுக்குள் புலிகளின் முகாம்களை விஸ்தரித்து, அங்கு பெரும் படையணிகள் தங்கியிருக்கும் வசதியை அவர்தான் ஏற்படுத்தினார். அப்போது மணலாற்று காட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவர படையினர் மேற்கொண்ட மின்னல் படைநடவடிக்கையையும் புலிகள் முறியடித்தனர். முறியடிப்பு தளபதியாக சொர்ணம் செயற்பட்டாலும், அன்புவும் முக்கிய பங்காற்றினார். அப்போதுதான் மணலாற்று காட்டிற்குள் இரண்டு துயிலுமில்லங்கள் கட்டப்பட்டன. ஜீவன், கமல் முகாம்களில் இந்தியப்படைகளுடனான மோதலில் மரணமான போராளிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதி முறையான துயிலுமில்லங்களாக அமைக்கப்பட்டன. 1993 இல் மண்கிண்டிமலை படைமுகாம் மீது இதயபூமி 1 என பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 100 இற்கும் அதிக படையினர் கொல்லப்பட்டு, பெருமளவு ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர். பால்ராஜ், அன்பு ஆகியோர் இந்த தாக்குதலை வழிநடத்தினர். 1993 இல் பூநகரி இராணுவ முகாம் மீதான புலிகளின் தவளை இராணுவ நடவடிக்கையில் அன்பு மரணமானார். அன்புவின் இழப்பு புலிகளிற்கு மட்டுமல்ல, மணலாற்றின் அவர்களின் ஆளுகைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. அன்பை தொடர்ந்து வெள்ளை/றொபேர்ட் மணலாறு தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நெடுங்கேணியை சேர்ந்தவர். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்தவர் வெள்ளை. சொர்ணத்திற்கு அடுத்த நிலையில் கடாபியும், வெள்ளையும் இருந்தனர். வெள்ளை நிர்வாக பொறுப்பாளராக இருந்தார். சிறப்பான நிர்வாகத்தின் மூலம் பெயரெடுத்தவர். அன்புவின் வெற்றிடத்திற்கு, தனது கண்முண் இருந்த திறமைசாலியை பிரபாகரன் நியமித்தார். 1995 இல் மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்தினார்கள். இது பெருந்தோல்வியில் முடிந்தது. பெண்புலிகளின் சடலங்களை இராணுவம் கைப்பற்றி பெண்ணுறுப்புகளில் மரக்கட்டைகளை செருகி அட்டூழியம் செய்து, சடலங்களை புலிகள் ஒப்படைத்தனர். சுமார் 150 பேர்வரையில் புலிகள் இழந்தனர். இது பிரபாகரனை கோபங்கொள்ள வைத்தது. இராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதற்கு முன்னர், தமது தரப்பில் தோல்விக்கு காரணமானவர்களிற்கு வழக்கம் போல “காற்று இறக்கி“ தண்டித்தார். தளபதி அன்புஇந்த தோல்விக்கு முக்கிய காரணம்- துணைப்படையினர். துணைப்படையினர் மூலமே திட்டம் கசிந்தது. இராணுவத்துடன் தொடர்பில் இருந்ததாக சில துணைப்படையினர் கைதாகினர். பின்னர் அவர்களிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. துணைப்படையே கலைக்கப்பட்டது. வெள்ளையும் சிறப்பு தளபதி பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் 1995 இல் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்ற இராணுவம் மேற்கொண்ட இடிமுழக்கம் இராணுவ நடவடிக்கையில் புத்தூர் பகுதியில் 150 பேர் கொண்ட அணியுடன் இருந்த வெள்ளை, மீண்டும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கினார். அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு அவர்களால் வெளிவர முடியவில்லை. அந்த சமரில் சுமார் 160 போராளிகள் மரணமானார்கள். வெள்ளையும் மரணமானார். வெள்ளை சிறந்த நிர்வாகி. சிறந்த போர்த்தளபதியா இல்லையா என்பதை அறுதியிட முடியாதபடி இரண்டு களங்களிலும் வேறுவேறு காரணங்களால் தோல்வியடைய வேண்டியதாகி விட்டது. அவருக்கு லெப்.கேணல் தரநிலை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும், மேஜர் தரநிலையே அறிவிக்கப்பட்டது. இது மணலாறு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்கள் பகிரங்கமாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்பட்டபோதும், அதை உறுதி செய்ய முடியவில்லை. அதேவேளை, வெள்ளையின் காலத்தில் மணலாற்று காட்டின் ஆதிக்கத்தை இராணுவம் அதிகரித்திருந்தது. இராணுவத்தின் வேவு அணிகள் புலிகளின் முகாம்களிற்கு வந்து வேவு பார்த்தனர். தனிமையிலிருந்த சில போராளிகள் கழுத்து வெட்டப்பட்டனர். புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை தளபதி லெப்.கேணல் மல்லி நெடுங்கேணியில் வைத்து இந்த காலப்பகுதியிலேயே கழுத்து வெட்டி கொல்லப்பட்டார். அன்புவை போன்ற ஒருவர் தளபதியானால்தான் மணலாற்று காட்டை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாமென்ற நிலைமை. வெள்ளையின் பின்னர் மணலாறு தளபதியாக யார் நியமிக்கப்படுவதென்ற கேள்வி எழுந்தபோது, பிரபாகரன் எடுத்தது அதிரடி முடிவு. 20 வயதான இளைஞனிடம் அந்த பெரும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த இளைஞனும் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்தவர்தான். பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியின் தலைவராக, 20 வயதிற்குள் முன்னேறியவர். அவரது பெயர் குமரன். இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களில் பட்டியலில் இருக்கிறார். தளபதி பால்ராஜின் நெருங்கிய உறவினர். கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர்.தளபதிகள் வெள்ளை- பால்ராஜ் (1990)குமரன் தளபதி பொறுப்பை ஏற்றபோது மணலாறு அணியிலிருந்த மூத்தவர்கள் பலர் அவரை பொருட்படுத்தியிருக்கவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே, மணலாற்று காட்டை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அன்புவை போன்ற திறமைசாலியென எல்லோரது பாராட்டையும் பெற்றார். குமரன் சிறந்த போர்த்தளபதியாக வளர்ந்தார். இளவயதிலேயே தன் முன்னாலிருந்த எல்லா சவால்களையும் வெற்றிகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக ஓயாதஅலைகள் 1 நடவடிக்கையில்- அவர் தளபதியாகி இரண்டு வருடங்களில்- வயிற்றில் ஏற்பட்ட பெருங்காயத்தால் அடுத்த பத்து வருடங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது. களத்திற்கு அவரால் திரும்ப முடியவில்லை. பெருமளவு காலத்தை வைத்தியசாலையிலும், பின்னர் வைத்திய சிகிச்சைகளுடனும் கழிக்க வேண்டியதானது. பின்னர் இறுதி யுத்த சமயத்தில்தான் களத்திற்கு திரும்பினார்.
அதன் பின்னர் அன்ரன் மணலாறு தளபதியானார். அதன் பின்னர், இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ராஜேஷ் மணலாறு (மணலாறு தனியாகப்பட்டது) தளபதியாக நியமிக்கப்பட்டார். இருவரும் அந்தப் பொறுப்பிலிருந்து ஏன் விலக்கப்பட்டார்கள் என்பதை சில வாரங்களின் முன் குறிப்பிட்டிருந்தோம். கிழக்கை புலிகள் கைவிட்ட பின்னர் மணலாறு போர்முனை கட்டளை தளபதியாக சொர்ணம் பதவியேற்றார். 2008 இறுதியில் மணலாற்று காட்டை இராணுவம் முழுமையாக கைப்பற்றியது. (தொடரும்)
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 61 , நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன். நெகிழ்ந்த பிரபாகரன்!-
கடந்த பாகங்களில் தளபதி சொர்ணம் குறித்த தகவல்களை பார்த்தோம். அப்பொழுதே குறிப்பிட்டிருந்தோம், சொர்ணத்தை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் பெருந்தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் தொடர்பான தகவல்களை தரப்போவதாக. ஆனால் அதற்கு முன்னர் ஒரு இடையீட்டு நிகழ்வை குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொடரில் அதை பேச பொருத்தமான சமயம் இதுவாகத்தான் இருக்கும். மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஒரு வரியில் கடந்து செல்லும் காடு அல்ல அது. விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒரு காடு அது. இந்த வாரம் காடு, அதில் செல்வாக்கு செலுத்திய தளபதிகள், காட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி பேசலாம். மணலாறு காடு எனப்படுவது முல்லைத்தீவின் செம்மலைக்கு அப்பால் நாயாற்று பாலத்தின் முடிவிலிருந்து ஆரம்பிக்கிறது. கடற்ரையோரமாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கிராமங்கள் மண்கிண்டிமலை, தண்ணிமுறிப்பு காடு என்பவற்றை எல்லையாக கொண்டது. வடக்கில் உள்ள இயற்கையான பெருங்காடுகளில் முதன்மையானது மணலாறு. 1985 களிலேயே மணலாற்று காட்டில் விடுதலைப்புலிகள் தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்து விட்டனர். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்தவர் பசீலன். அவரது அணியில் பால்ராஜ், நவம், வெள்ளை முதலான சுறுசுறுப்பான போராளிகள் இருந்தனர். பால்ராஜ், நவம் இருவரும் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காடு பற்றிய பரிச்சயம் அதிகமாக இருந்தது. இதில் நவம்தான் பிரதானமானவர். திசையறி கருவி இல்லாமல் காட்டின் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் நினைவில் வைத்திருந்தார். அப்போது இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்று முல்லைத்தீவில் இருந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க மணலாற்று காட்டுக்குள் சில தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். அதுபோல தண்ணிமுறிப்பு காட்டிலும் தங்கியிருந்தனர். இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. இந்திய இராணுவம் வந்ததுமே, புலிகள் செய்தது- மணலாற்று காட்டுக்குள் மறைவிடங்களை உருவாக்கியதுதான். இந்திய இராணுவம் எதிர்பார்க்காத இடமாக இருக்க வேண்டுமென சிந்தித்ததில் முல்லைத்தீவை பிரபாகரன் தேர்வு செய்தார். முல்லைத்தீவில் மணலாற்று காட்டை பசீலன் தேர்வு செய்தார்.மணலாற்று காட்டில் பிரபாகரன்உடனடியாக காட்டுக்குள் சீமெந்தாலான முகாம்கள் அமைக்கப்பட்டன. இப்படி இரண்டு முகாம்கள் காட்டின் மையத்தில் உருவாக்கப்பட்டன. அதில் முதன்மையான முகாமில் சீமெந்தாலான பதுங்குகுழியும் அமைக்கப்பட்டது. இந்தியா- புலிகள் மோதல் ஆரம்பித்தபோது பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். பிரபாகரனின் இருப்பிடத்தை குறிவைத்து 1987 இல் சீக்கியபடைகள் கொக்குவிலில் ஹெலிகொப்ரரில் ஒரு தரையிறக்கம் செய்தன. பிரபாகரனை உயிருடன் அல்லது பிணமாக பிடிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் அவர்கள் தரையிறங்கியபோது பிரபாகரன் வேறு இடத்திற்கு மாறிவிட்டார். தரையிறங்கிய அணியையும் புலிகள் அழித்தார்கள். இதன்பின் பிரபாகரன் வன்னிக்கு சென்று மணலாற்று காட்டுக்கு சென்றுவிட்டார். பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்ற குழப்பம் இந்திய இராணுவத்துக்கு. யாழ்ப்பாணத்திலா, கிழக்கிலா, வன்னியிலா என தலையை பிய்த்து கொண்டிருந்தனர். பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய ஒரு சூழ்ச்சிகரமான திட்டம் போட்டனர். புலிகளுடன் ஒரு இரகசிய பேச்சை ஆரம்பித்தனர். இந்தியாவின் சூழ்ச்சியை புலிகள் அறியவில்லை. பேச தொடங்கினார்கள். இந்தியா ஒரு சமரச திட்ட வரைபை கொடுத்தது. அதை தலைவருடன் ஆலோசித்துதான் பதிலளிக்கலாமென புலிகளின் பிரதிநிதிகள் சொல்லிவிட்டனர். இந்திய இராணுவமும் “ஆஹா… தாராளமாக ஆராய்ந்து வாருங்கள்“ என சொன்னார்கள்.ஜொனிஅந்த திட்டத்துடன் புலிகளின் தளபதி லெப்.கேணல் ஜொனி புறப்பட்டார். (இவர் வடமராட்சியின் 1ம் கட்டை பகுதியை சேர்ந்தவர். நல்ல தொழில்நுட்ப அறிவுள்ளவர். வெடிபொருள் தயாரிப்பிலும் வல்லவர். பின்னாளில் புலிகள் தயாரித்த அதிசக்தி வாய்ந்த மிதிவெடிக்கு ஜொனி என இவரது பெயரையே இட்டனர்) ஜொனி கிளிநொச்சிக்கு வந்து, பரந்தன் வீதியால் முல்லைத்தீவை நோக்கி திரும்பினார். ஜொனியின் பயணத்தை இந்திய உளவாளிகள் அவரே அறியாமல் பின்தொடர்ந்தனர். ஜொனி விசுவமடுவை நெருங்க, பிரபாகரன் வன்னிக்காட்டுக்குள்தான் இருக்கிறார் என்பதை இந்திய இராணுவம் புரிந்து கொண்டது. இனி ஜொனி தேவையில்லை. விசுவமடுவில் ஜொனியை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது. மணலாற்று காட்டுக்குள் புலிகளை அழிக்க ஒப்ரேசன் செக்மேற் 1,2,3 என இந்தியா பெருமெடுப்பில் படைநடவடிக்கை செய்தது. இலங்கையில் இந்தியப்படைகளை வழிநடத்தின லெப்.ஜெனரல் கல்கட் நேரடியாக இந்த நடவடிக்கைகளை வழிநடத்தினார். ஒருமுறை அவருக்கே புலிகள் மரணபயம் காட்டினர். நித்திகைகுளத்தில் கல்கட் ஹெலிகொப்ரர் மூலம் வந்திறங்கியபோது, புலிகள் பதுங்கித் தாக்குதல் மூலம் ஹெலியை அழிக்க முயன்றனர். ஆர்.பி.ஜி தாக்குதலில் ஹெலி மயிரிழையில் தப்பியது. கல்கட் பதுங்குகுழிக்குள் பாய்ந்து விட்டார். இந்த ஆர்.பி.ஜி தாக்குதலிற்கு சென்றவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சொர்ணம். அவர்தான் ஆர்.பி.ஜியை அடித்தார். மற்றவர் தேவன். கடற்புலிகளில் இருந்தவர். கிட்டு பாவித்த ரிவோல்வரை இறுதிவரை வைத்திருந்தவர். இந்திய படைகளில் கூர்கா ரெஜிமென்ற் விசேட பயிற்சிபெற்ற கொமாண்டோக்கள். மணலாற்று காட்டுக்குள் அவர்கள்தான் இறக்கப்பட்டனர். கூர்க்காகள் கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்க மாட்டார்கள் எனப்படுவதுண்டு. மணலாற்றில் கூர்க்காக்கள் கத்தியை போட்டுவிட்டு தப்பியோடினார்கள்.நவம்உணவு, மருந்து, வெடிபொருள் தடையை சமாளித்து புலிகள் போரிட்டனர். அப்போது புலிகளின் களஞ்சியம் மர உச்சிகள்தான். சிறிய சிறிய பொதிகளாக்கி, மரஉச்சியில் கட்டி தொங்கவிட்டுவிடுவார்கள். பின்னர் உணவுத்தேவைக்கு அவற்றை எடுப்பார்கள். சில சமயங்களில் மரத்தினடியில் இராணுவம் இருக்கும். இரவில் கயிறு கட்டி இராணுவத்திற்கு தெரியாமல் உணவை இறக்குவார்கள். சமைக்க முடியாது. புகை எழுந்தால் புலிகளின் இருப்பிடத்தை வானத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்திய ஹெலிகொப்ரர் கண்டுபிடித்துவிடும். இப்படி பெரும் சவாலின் மத்தியிலேயே காட்டுக்குள் புலிகள் போரிட்டனர். உணவு, தண்ணீர் பிரச்சனைகளை சமாளித்து புலிகள் தாக்கு பிடித்ததற்கு முக்கிய காரணம்- காட்டை அறிந்த சில போராளிகள் இருந்தது. அந்த சில போராளிகளில் முதன்மையானவர் லெப்.கேணல் நவம். நெடுங்கேணி பாடசாலையில் இருந்த இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து பின்னர் மரணமானவர். ஏற்கனவே வெடிவிபத்தொன்றில் ஒரு கையை மணிக்கட்டுடன் இழந்தவர். ஒற்றைக்கையுடன்தான் மணலாற்று காட்டுக்குள் நின்று இந்தியர்களிற்கு தண்ணி காட்டினார். நவம், மலையக பின்னணியை உடையவர்.மணலாற்று காட்டுக்குள் வைகோஇந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள்ளால் அவர்களே அறியாமல் சென்று உணவு, தண்ணீர் எடுத்து வருவார். மணலாற்று காட்டில் பிரபாகரனுடன் நிலை கொண்டிருந்த அணிகளிற்கு நவம்தான் கட்டளையதிகாரி. பால்ராஜூம் ஒரு அணியை வழிநடத்தினார். அது காட்டோரமாக இராணுவத்துடன் மோதிக்கொண்டிருந்தது.
யுத்தத்தில் அங்கங்களை இழந்த புலிகளிற்கு ஒரு கல்விக்கூடம் அமைத்து அதற்கு லெப்.கேணல் நவம் அறிவுக்கூடம் என பிரபாகரன் பெயர் சூட்டினார். மணலாற்று காட்டில் இந்தியர்களின் முற்றுகையை உடைத்ததில் நவத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பிரபாகரனே சொன்னார். 2000 ஆம் ஆண்டு, நவம் அறிவுக்கூட ஆண்டு நிறைவு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டார் பிரபாகரன். மேடையில் பிரபாகரன் உரையாற்ற ஆரம்பிப்பதற்கு முன்னர், பின்பக்கமாக திரும்பி நவத்தின் உருவப்படத்தை நன்றாக பார்த்தார். பின், ஒரு வரியில் நவத்தின் முக்கியத்துவத்தை சொன்னார். “நவம் மட்டும் இல்லாவிட்டால் நான் இப்போது இந்த மேடையில் நின்றிருக்க மாட்டேன்“. (தொடரும்)
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 60 தளபதி சொர்ணத்தின் இறுதிக்கணங்கள்:
மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு வந்து சேர்வதற்குள் கிழக்கு படையணிக்கு போதும்போதுமென்றாகி விட்டது. கிழக்கை கைவிட்ட அழுத்தத்திற்கு அப்பால் வழியெல்லாம் இராணுவம் கொடுத்த தொல்லை, கொலரா பாதிப்பென போராளிகள் மரணத்தின் எல்லைவரை சென்றுவிட்டனர். பத்திற்கும் அதிகமானவர்கள் கொலராவினால் மரணமடைந்தார்கள். அவர்களை வழியில் புதைத்துவிட்டு அணிகள் நகர்ந்தன. வன்னிக்கு வந்து சேர்ந்ததும் கிழக்கிலிருந்து வந்த அணிகளிற்கு விசேட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அந்த சமயத்தில் போராளிகள் மத்தியில் சொர்ணத்தின் நகர்வுகள் குறித்த நிறைய நகைச்சுவைகள் உலாவ ஆரம்பித்தன. மாவிலாற்றை பூட்டி யுத்தத்தை ஆரம்பித்து கைவசமிருந்த கிழக்கையும் கைவிட்டாயிற்று என்ற ரீதியில் அந்த நகைச்சுவைகள் இருந்தன. இதன்பின்னர் மணலாறு கட்டளை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். வன்னிமீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தபோது இராணுவம் புதிய உத்தியொன்றை கையாண்டது. இதுவரையான நடவடிக்கைகளில் பிரதான வீதியை மையமாக கொண்டு நடவடிக்கையை செய்த இராணுவம், இம்முறை முதலில் காடுகளை கைப்பற்றியது. காடுகளை கைப்பற்றினாலே புலிகளை தப்பிக்க முடியாமல் வளைக்கலாமென்பது இராணுவத்தின் திட்டம்.மேஜர் பசீலன்மன்னாரில் நடவடிக்கையை ஆரம்பித்த படையினர், புலிகளின் ஆளணியை சேதமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், மணலாற்று நடவடிக்கையை ஆரம்பித்து விட்டனர். மணலாறு பெருங்காடு. புலிகளின் இதயம் ஒருகாலத்தில் அங்குதான் பேணப்பட்டது. இந்தியப்படைகளுடனான மோதல் ஆரம்பிக்கவிருந்த சமயத்தில் பிரபாகரனை பாதுகாக்க மணலாற்று காட்டை புலிகள் தேர்வு செய்தனர். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்த மேஜர் பசீலன் மணலாற்று காட்டுக்குள் முகாம்களை அமைத்தார். பெண்புலிகளிற்கு செஞ்சோலை என்ற முகாமும், ஆண்களிற்கு ஜீவன், உதயபீடம் என பல முகாம்களும் அங்கு அமைக்கப்பட்டன. இந்தியப்படைகளின் வெளியேற்றத்தின் பின் அங்கு இன்னும் நிறைய முகாம்கள் அமைக்கப்பட்டன. காட்டுக்குள் ஒரு குடியிருப்பு தொகுதியை போல அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட வலைப்பின்னலுடன் இருந்தன. மணலாற்று காட்டுக்கு அப்பால் மண்கிண்டிமலை இராணுவ முகாமிருந்தது. அங்கிருந்து மணலாற்றின் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணி தாராளமாக வரத் தொடங்கியது. மணலாற்றின் காடு ஆழஊடுருவும் படையணியின் நகர்வுகளிற்கு வாய்ப்பாக அமைந்தது. மணலாற்றிற்குள் அடிக்கடி கிளைமோர் தாக்குதல்களை நடத்தி புலிகளிற்கு பேரிழப்பை ஏற்படுத்த தொடங்கினார்கள். மணலாறு காடு புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் ஆழ ஊடுருவும் படையணியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் இரண்டு பகுதியின் ஆதிக்கமும் நிறைந்த பகுதியென்றே அதை சொல்ல வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் முழு வன்னியும் ஆழ ஊடுருவும் படையணியின் நெருக்கடியையும் உணர்ந்தது. மணலாறு மட்டும் தனித்து என்ன செய்ய முடியும்? ஆழஊடுருவும் படையணி, அது ஏற்படுத்திய நெருக்கடிகளை அடுத்து வரும் வாரங்களில் விரிவாக பார்க்கலாம். சொர்ணத்தாலும் மணலாற்றை பாதுகாக்க முடியாமல் போனது. மணலாற்றை விரைவிலேயே இராணுவம் முழுமையாக கைப்பற்றிக் கொண்டது. சொர்ணத்தின் சறுக்கிய இரண்டு தாக்குதல்கள் பற்றி சொல்வதாக குறிப்பிட்டோம். சம்பூரை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அடுத்தது மாங்குளம். இறுதி யுத்த சமயத்தில், மாங்குளத்தை கைப்பற்ற இராணுணுவத்தின் 57வது படையணி கடுமையான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. ஏ9 வீதி மற்றும் மல்லாவி வீதி, இரண்டுக்கும் இடையிலான காட்டுப்பகுதியென பலமுனை நகர்வை மேற்கொண்டது. அப்போது கிளிநொச்சியிலிருந்து ஏ9 வீதியூடான விநியோகத்திலும் புலிகள் சிக்கலை எதிர்கொண்டபடியிருந்தனர். மாங்குளத்திற்கு பின்பக்கமாக ஏ9 வீதியையும் இராணுவ அணிகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதிதான் புலிகளிடம் ஓரளவு பாதுகாப்பாக இருந்தது. அதை தவிர்ந்தால், சில சிறிய வீதிகள். மாங்குளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியென்பதால் அந்த பகுதி கட்டளை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். நீண்டகாலத்தின் பின்னர் உக்கிர மோதல் களமொன்றில் சொர்ணம் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது தளபதிகளை களமுனைக்கு கொண்டு செல்ல பவள் கவச வாகனங்களைத்தான் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த ஏற்பாடு. சொர்ணம் பதவியேற்றதும் அந்த பகுதியில் நிறைய அதிரடி மாற்றங்களை செய்தார். வரையறுக்கப்பட்ட அணிகளே இருந்ததால் அவசியமில்லாத பகுதிகள் என கருதிய இடங்களிலிருந்து அணிகளை எடுத்து, சில இடங்களில் நிலைகளை பலப்படுத்தினார். அது பலனளிக்கவில்லை. மாங்குளம் நகரத்திற்குள் ஒரு விடிகாலை இராணுவம் நுழைந்து விட்டது. இராணுவத்தின் இரகசிய நகர்வால் மாங்குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகளால் சுதாகரிக்க முடியவில்லை. கணிசமான பொருட்களை கைவிட்டு பின்வாங்க வேண்டியதாகிவிட்டது. அப்படி கைவிடப்பட்டவற்றில் ஒன்றுதான், சொர்ணத்தின் பயணத்திற்கு வழங்கப்பட்டிருந்த பவள் கவசவாகனம். வாகனத்தையும் கொண்டுவர முடியாத நெருக்கடி நிலை புலிகளிற்கு. வாகனத்தில் போய், நடந்து திரும்பி வந்தார் என போராளிகள் மட்டத்தில் சொர்ணம் குறித்த ஒரு நகைச்சுவை உலாவ ஆரம்பித்தது. எவ்வளவு நெருக்கடியென்றாலும் நகைச்சுவைதானே போராளிகளை உயிர்ப்போடு வைத்திருந்தது. இப்படியான நகைச்சுவைகள் தமது தளபதிகள் குறித்த எதிர்மறை உணர்வுடன் பரவுபவை அல்ல. ஒரு சுவாரஸ்யமான “கலாய்ப்பு“ என்று எடுத்துக் கொள்ளலாம். யாழ்ப்பாண தாக்குதலின் பின்னர் சொர்ணம் இரண்டு தாக்குதலில்தான் கலந்து கொண்டார் என முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அவை இரண்டையும் மேலே குறிப்பிட்டு விட்டோம். ஆனால் இன்னொரு தாக்குதலும் உள்ளது. இதிலும் சொர்ணத்தின் முக்கிய பாத்திரம் உள்ளது. இந்த தாக்குதலை பற்றி இந்த பகுதியில் இன்னும் சற்று தாமதமாகத்தான் பேச வேண்டும். ஏனெனில், இதுதான் விடுதலைப்புலிகள் முழுமையாக ஒருங்கிணைத்து செய்த பெரிய தாக்குதல்களில் இறுதியானது.
1996 இன் பின்னர் களமுனையில் சொர்ணம் ஜொலிக்கவில்லை. மாறாக தீபன் பெருந்தளபதியாக வளர்ந்தார். அதைவிட லோரன்ஸ், குணம், ஆதவன், வேலவன், குமரன், கீர்த்தி, நாகேஸ், நகுலன் என இளநிலைத் தளபதிகள் பலர் வளர்ச்சியடைந்தனர். இதைவிட, பால்ராஜ் இருந்தார். யுத்தம் ஆரம்பித்த சமயத்திலேயே இவர் மரணமானார். இறுதிக்காலத்தில் பால்ராஜ் மற்றும் பிரபாகரன் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இருந்திருந்தால் பால்ராஜ் களமுனையில் பெரும் தளபதியாக இருந்திருப்பார். அவரது உடல்நிலையும் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் எல்லாம் இருந்தபோதும் சொர்ணத்தை முக்கிய களங்களிற்கு பிரபாகரன் அழைத்தார். சொர்ணம் மீது வைத்திருந்த நம்பிக்கை அவ்வளவு. பிரபாகரன் குடும்பத்தில் சொர்ணம் வைத்திருந்த விசுவாசமும் அப்படி. அதை நிரூபிப்பதை போலவே அவரது மரணமும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தேவிபுரத்தின் மீது புலிகள் நடத்திய வலிந்து தாக்குதலில் சொர்ணம் கால் தொடையில் காயமடைந்தார். அவரது தொடை எலும்பு உடைந்து நடக்க முடியாத நிலைமைக்கு வந்தார். போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலையிலும் முள்ளிவாய்க்காலில் பராமரிக்கப்பட்டு வந்தார். மே மாதம் 14ம் திகதி. அவரது முகாமில் எறிகணையொன்று வீழ்ந்தது. அதில் மீண்டும் சிறிய காயமடைந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முடிவு அந்த திகதிகளில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பேராச்சரியங்கள் நடந்தாலும் புலிகளை யாரும் காப்பாற்ற முடியாதென்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நடமாட கூடியவனாக இருந்தால் இறுதிவரை சண்டையிட்டு பிரபாகரனிற்கு முன்னதாக மரணமடைபவராக சொர்ணம் இருந்தார். அது முடியவில்லை. “அண்ணைக்கு ஒன்று நடக்கும்வரை உயிரோட இருந்து பார்த்துக் கொள்ள விரும்பவில்லை“ இதுதான் தன்னுடனிருந்த போராளிகளிற்கு சொர்ணம் சொன்ன இறுதி வசனம். மே 14ம் திகதியன்று சயனைட் குப்பியை அருந்தி சொர்ணம் மரணமானார். அவரது உடலை அந்த முகாமிலேயே போராளிகள் புதைத்தார்கள். (தொடரும்)
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 59 2000 ஆட்லறி செல் கேட்ட சொர்ணம்
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருகாலத்தில் கோலோச்சிய சொர்ணத்தின் அத்தியாயம் இத்துடன் முடிகிறது. இதன் பின்னர் இன்னும் இரண்டு தாக்குதல்களை சொர்ணம் வழிநடத்தினார். காலஒழுங்கில் அதனை பின்னால் பார்க்கலாம். ஆனால், சொர்ணம் என்றால் களம் அதிரும் என்ற நிலை இருக்கவில்லை. கடற்புலிகளின் மன்னார் தளபதியாக பொறுப்பேற்ற சொர்ணத்திற்கு அங்கு பணிகள் அவ்வளவாக இருக்கவில்லை. கொஞ்ச போராளிகளின் நிர்வாகத்தை கவனித்தார் என்ற அளவிலேயே பணிகள் இருந்தன. 2004 இல் கருணா பிளவு நிகழ்ந்தபோதே சொர்ணம் மீண்டும் களத்திற்கு வந்தார். சொர்ணத்தின் மீது பிரபாகரன் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையினால் உருவான வாய்ப்பிது. திருகோணமலை தளபதியாக இருந்த பதுமனை கைது செய்ய சொர்ணம் அனுப்பிவைக்கப்பட்டதை ஏற்கனவே தமிழ்பக்கத்தின் இந்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். திருகோணமலை தளபதியாக சொர்ணம் இருந்த காலப்பகுதியில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று- மாவிலாற்று கதவு மூடப்பட்டது. இரண்டு- சம்பூர் வலிந்த தாக்குதல். மாவிலாற்று கதவுகள் பூட்டப்பட்டது ஒரு எதேச்சையான சம்பவம். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்க, மாவிலாற்று கதவை பூட்டியதாக பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், யுத்தத்தை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் அந்த கதவுகள் பூட்டப்படவில்லை. கதவு பூட்டிய விவகாரம் இருதரப்பு முறுகலாக உருவெடுக்க, யுத்தத்தை நோக்கி நகர விரும்பிய இருதரப்பும் முறுகலை வளர்த்து சென்றன என்பதே யதார்த்தம். அடுத்தது, சம்பூரை கைப்பற்றி திருகோணமலை துறைமுகம் மீதான அச்சுறுத்தலை அதிகரித்த நடவடிக்கை. மகிந்த ராஜபக்ச பதவியேற்றது விடுதலைப்புலிகளிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ரணில் விக்கிரமசிங்க கையாள சிரமமானவர், அவர் ஆட்சியில் நீடித்தால் போராட்டம் இக்கட்டான நிலையை அடையும் என புலிகள் நினைத்தனர். தலைமை தொடக்கம் தளபதிகள் வரை இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தனர். விதிவிலக்காக சில தளபதிகள் இருந்தார்கள். அது பற்றிய தகவல் உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை. இந்த தொடரின் பிற்பகுதியில் அவற்றை பார்க்கலாம். இதைவிட்டால், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் சற்று வித்தியாசமான நிலைப்பாட்டில் இருந்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றாக மகிந்த ராஜபக்சவை கொண்டு வரலாம் என்ற புலிகளின் தந்திரோபாயத்துடன் அன்ரன் பாலசிங்கத்திற்கும் உடன்பாடு இருந்தது. அது சரியானதென அவர் நினைத்தார். ஆனால் புலிகள் யுத்தத்தை நோக்கி நகர்ந்ததுதான் பாலசிங்கத்திற்கு உடன்பாடாக இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க போன்ற ராஜதந்திர முதிர்ச்சி இருக்காத மகிந்த விரைவிலேயே யுத்தத்தை நோக்கி செல்வார் என்றுதான் பாலசிங்கம் கணக்கு போட்டார். இதன்மூலம் சர்வதேச அனுதாபத்தை தமிழர்கள் பக்கம் திருப்பலாமென நினைத்தார். அவரது கணக்கும், பிரபாகரனின் கணக்கும் இந்த விடயத்தில் ஒத்துவரவில்லை. அதனால் பாலசிங்கத்திற்கும் பிரபாகரனிற்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்தது. பேச்சுவார்த்தையின் இறுதிக்கால கட்டத்தில் அன்ரன் பாலசிங்கம் இணைக்கப்படவில்லை. அவரது உடல்நிலை காரணமாகவே கலந்து கொள்ளவில்லையென புலிகள் அறிவித்திருந்தாலும் உண்மை அதுவல்ல. பாலசிங்கம் பேச்சில் கலந்துகொள்ளாமல் விடுவதற்கு முன்னர் சில தடவைகள் வன்னிக்கு வந்து சென்றார். அப்போது பேச்சுக்கள் நெருக்கடியை நோக்கி நகர தொடங்கியிருந்தன. வன்னியில் தங்கியிருந்த காலத்தில் தனக்கு நெருக்கமான தளபதிகளிடம் பிரபாகரனின் விடாப்பிடியான இயல்பு குறித்த கவலையை வெளியிட்டுள்ளார். கோபம், நகைச்சுவை இந்த சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை “ராஜமார்த்தாண்டன்“ என்றுதான் பாலசிங்கம் குறிப்பிடுவார். அதாவது முழுக்க முழுக்க யுத்தத்தின் நம்பிக்கை கொண்ட ஒரு வீரன் என்ற அர்த்தத்திலேயே அப்படி குறிப்பிடுவார். “ராஜமார்த்தாண்டனிற்கு நிலைமை விளங்குதில்லை“ என நெருக்கமானவர்களிடம் பலமுறை கவலைப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் வரவு தமக்கு சாதமானதென நம்பியவர்களில் சொர்ணமும் முக்கியமானவர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற சமயத்தில் மணலாற்று காட்டுக்குள் நடந்த சந்திப்பொன்றில் சொர்ணம் இதை போராளிகளிடம் கூறியிருந்தார். சம்பூர் மீதான தாக்குதலை சுலபமானதாக சொர்ணம் கணக்கிட்டிருந்தார். சம்பூரில் மட்டுமல்ல, யாழ்ப்பாணம் மீதும் இலகுவாக தாக்கலாம் என தளபதிகளிடம் ஒரு கணக்கிருந்தது. ஆட்லறி செல் கொஞ்சம் அடித்தால் இராணுவம் ஓடிவிடும் என்ற அபிப்பிராயத்தை போராளிகள் சந்திப்பில் அடிக்கடி சொன்னார்கள். ஓயாதஅலைகள் 3,4 தாக்குல்களின் போது புலிகள் பாவித்த உத்திகளில் ஒன்று, இராணுவத்தின் காவலரணிண் எதிராக ஆட்லறியை நிறுத்தி, துப்பாக்கி சுடுவதை போல காலவரணை நோக்கி எறிகணையை செலுத்துவது. ஆட்லறி மட்டுமல்லாமல் வேறும் நவீன ஆயுதங்களை இதற்காக பாவித்தார்கள். கனோன்கள், உந்துகணை செலுத்திகளில் விதவிதமான மொடல்களை புலிகள் இறக்குமதி செய்திருந்தனர். இராணுவத்திடம் கூட அவை இருக்கவில்லை. அதன் பின்னர் சமாதான காலப்பகுதியில் இராணுவம் செய்த முக்கிய மாற்றம், நிலமேல் காவலரண்களை அகற்றி, நிலக்கீழ் காலவரண்களை உருவாக்கியது. தரை உயரத்திலும் சற்று உயரமாக காவலண் இருந்தது. இது புலிகளின் பழைய உத்திக்கு வாய்ப்பில்லாமல் செய்தது. சமாதான காலப்பகுதியில் இப்படி ஒவ்வொரு விடயத்தையும் இராணுவம் மாற்றி, தன்னை மெருகேற்றியது. அது புலிகளில் நடக்கவில்லை. ஆட்லறி அடிக்க, இராணுவம் ஓடும் என்ற அளவில் இருந்த கணக்கை, மாற்றாமல் வைத்திருந்தனர். சம்பூரை கைப்பற்றி திருகோணமலை துறைமுகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்தை பிரபாகரனிடம் சமர்ப்பித்தார் சொர்ணம். உண்மையில் இது சவாலான தாக்குதல் திட்டமென்பது பிரபாகரனிற்கும் தெரியும். ஏனெனில் கிழக்கில் இராணுவ முகாமை தகர்த்து, நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த சம்பவங்கள் ஏற்கனவே அவ்வளவாக நடந்திருக்கவில்லை. ஆனால், பிரபாகரனின் கவலையை சொர்ணம் போக்கினார். தனக்கு 2,000 ஆட்லறி எறிகணைகள் தந்தால் சம்பூரை கட்டுப்பாட்டில் கொண்டு வருவேன் என வாக்களித்தார். அப்போது புலிகளின் ஆயுதக் களஞ்சியங்களில் ஆட்லறி எறிகணைகள் தட்டுப்பாடாக இருந்தது. ஆயுதக்கப்பல்களின் வரத்து இருக்கவில்லை. அதனால் தாக்குதல்களின் முன்னர் தேவையான ஆட்லறி எற்கணைகளை கணக்கு பார்த்தே திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். ஒவ்வொரு தளபதிக்குமான ஆட்லறி எறிகணை கணக்கை இறுதி செய்பவராக பிரபாகரனே இருந்தார். அவவ்ளவு நெருக்கடிக்குள்ளும், சொர்ணத்திற்கு 2,000 எறிகணைகள் வழங்கப்பட்டன. திருகோணமலையை கைப்பற்றுவதன் மூலம் கிடைக்கும் இராணுவ, அரசியல் பலம் என்பது, தட்டுப்பாடான சொர்ணம் தனது அணிகளிற்கு தாக்குதல் கட்டளையை இட்டார். சம்பூரை விரைவில் புலிகளின் அணிகள் கைப்பறினாலும், திருகோணமலையிலிருந்து சிறிய படகுகளில் வநது தரையிறங்கிய கொமாண்டோக்கள் புலிகளிடமிருந்து சம்பூரை மீண்டும் கைப்பற்றின. இறுதியில் திருகோணமலையை விட்டே புலிகளின் அணிகள் பின்வாங்கி, வாகரை பகுதியில் நிலைகொண்டனர்.
இதன்பின்னர், மட்டக்களப்பில் பெருமெடுப்பிலான படைநடவடிக்கை செய்த இராணுவம், தொப்பிக்கல காட்டுப்பகுதியை முழுமையாக கைப்பற்றியது. பின்னர், வாகரையில் ஒரு பெரும் முற்றுகை செய்தது. வன்னியின் முள்ளிவாய்க்காலை போன்ற ஒரு மனிதஅவலம் அங்கும் நிகழ்ந்தது. ஆனால் கிழக்கில் நடந்ததால் அவ்வளவாக தமிழர்களாலேயே கவனிக்கப்படாமல் விடப்பட்டது. கிழக்கில் நிலைகொண்ட புலிகளின் அணிகள் பானு தலைமையில் முற்றுகையிலிருந்து வெளியேறி வன்னியை நோக்கி நடக்க தொடங்கினார்கள். அடர்ந்த காட்டு பாதைதான் கிழக்கிற்கும் வன்னிக்குமிடையிலான தொடர்பு பாதை. அதில் இராணுவம் அடிக்கடி பதுங்கித் தாக்குதலும் செய்வார்கள். கிழக்கிலிருந்து வன்னிக்கு செல்வது உயிர் உத்தரவாதம் இல்லாதது. இம்முறை பயணத்தில் புலிகளிற்கு புதிய எதிரியாக கொலராவும் சேர்ந்தது. (தொடரும்)
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 58 புலிகளில் காற்றுப்போன தளபதிகளிற்கு வழங்கப்பட்ட தண்டனைகள்!:
யாழ்ப்பாணத்திற்குள் இனி புலிகள் ஒரு அடியும் முன்னகர கூடாதென இந்தியா கறாரான நிலைப்பாட்டையெடுத்தது. மேலதிகமாக இன்னொரு செய்தியையும் சொன்னது. இலங்கைக்கும் அழுத்தம் கொடுக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதே அந்த தகவல். 1991 இல் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து இந்தியா- புலிகள் உறவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. புலிகளை கவிழ்ப்பதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது இந்தியா. இது புலிகளிற்கும் தெரியும். ஆனால் இந்தியாவின் விருப்பங்கள், முயற்சிகளை கடந்து புலிகள் உலகத்திலேயே பலமான இயக்கமாக உருவெடுத்திருந்தனர். புலிகளின் வளர்ச்சி இந்தியாவிற்கு விருப்பமானதாக இல்லை. ஆனால் தவிர்க்க முடியாமல் மூன்றாம் நபர்களினூடாக உறவை வைத்திருந்தது. இப்படியான சமயத்தில்தான் புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்வதை இந்தியா தடுத்தது. இந்தியாவிற்கு தெரியும், புலிகளின் நகர்வை தடுத்தால் இரண்டு தரப்பும் இன்னும் எதிர்நிலைக்கே செல்வோம் என்பது. அடுத்தது, பிரபாகரனை மிரட்டி பணிய வைக்க முடியாதென்பதை இந்தியாவிற்கு காலம் நன்றாகவே புரிய வைத்திருந்தது. 1987 இல் இந்திய- இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் புலிகளின் சம்மதத்தையும் இந்தியா பெற விரும்பியது. இந்த சமயத்தில் இந்தியாவின் நடத்தை எஜமானைப் போலிருந்தது. இலங்கை அரசு இதை சகித்து கொண்டது. ஆனால் புலிகள் அதை சகிக்கவில்லை. பிரபாகரனை விருந்தினர் போல அசோகா ஹோட்டலிற்கு அழைத்து சென்று, தடுத்து வைத்து மிரட்டல் பாணியில் அழுத்தம் கொடுத்தபோதும் பிரபாகரன் அதை ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து திரும்பி யாழ்ப்பாணம் சுதுமலையில் பிரபாகரன் பேசியபோது இதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதை நாங்கள் ஏற்கவில்லையென்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். புலிகளின் இந்த மனப்போக்கு தெரிந்துதான் இந்தியா தீர்வு பற்றி பேசியது. இந்தியாவின் விருப்பத்தையும் சொல்லியதாயிற்று, புலிகளையும் சமாளித்தாயிற்று என இந்தியா நினைத்தது.
இந்த சமயத்தில் புலிகள் வலிந்த தாக்குதல்களை நிறுத்தி, கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைப்பதென முடிவு செய்தனர். புலிகளின் தொடர் தாக்குதல்களால் இராணுவம் நிலைகுலைந்து போயிருந்தது. இராணுவத்தை சுதாகரிக்க அவகாசமே கொடுக்காத அதிரடித் தாக்குதலைத்தான் புலிகள் செய்தார்கள். நிலைகுலைந்து போயிருந்த கட்டுமானத்தை சரி செய்ய ஒருசில நாள் அவகாசம் கிடைத்தாலாவது பரவாயில்லையென இராணுவம் இரத்த கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த சமயம் அது. புலிகளின் தாக்குதல் நிறுத்தப்பட்டது இராணுவத்திற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஜனக பெரேரா, சரத் பொன்சேகா இருவரும் பலாலியில் இருந்து இராணுவத்தை மீள ஒருங்கிணைத்தார்கள். களத்தில் அடி வாங்கிய இராணுவத்திற்கு ஓய்வுகொடுத்து, யாழ்ப்பாணத்தின் மற்ற பகுதிகளில் இருந்த இராணுவத்தை முன்னணிக்கு நகர்த்தினார்கள். அவர்களின் மூலம் புலிகள் மீது தாக்குதலை ஆரம்பித்தனர். செம்மணி வளைவு, அரியாலை பகுதிகளை இரண்டு, மூன்று நாட்களிலேயே புலிகள் கைவிட வேண்டியதாகிவிட்டது. அங்கு சிறியளவிலான புலிகளின் அணியே நிலைகொண்டிருந்தது. இவையெல்லாவற்றையும் விட, 1999 இறுதியில் ஆரம்பித்த புலிகளின் வலிந்த தாக்குதல் இது. பல மாதங்களாக நடந்தது. புலிகளும் கடுமையான ஆளணி பற்றாக்குறையை சந்தித்தனர். புலிகளின் மருத்துவமனைகள் காயமடைந்த போராளிகளால் நிரம்பி வழிந்தன. களத்தைவிட்டு அகற்றப்பட்டவர்களின் இடத்தை நிரப்ப ஆட்கள் கிடைக்கவில்லை. தொடர் சண்டையால் புலிகளின் படையணிகளும் களைப்படைந்து விட்டன. வெற்றி உற்சாகம் என்பது வேறு, இழப்புக்கள், களைப்பால் ஏற்படும் வெற்றிடம் என்பது வேறு. முன்னேறி செல்லும் அணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி, அணிகளிற்கு ஓய்வு கொடுப்பதை ஆரம்பத்தில் புலிகள் செய்தனர். பின்னர் மரணம், காயம் அதிகரித்து செல்ல மாற்று அணிகள் இல்லாமல் போய்விட்டன. ஆகவே அரியாலை, செம்மணி உள்ளிட்ட பகுதிகளை கைவிட புலிகள் முடிவு செய்தனர். ஆனால் சாவகச்சேரி, தனங்கிளப்பு, மட்டுவில், கனகம்புளியடி சந்தி பகுதிகளை கைவிடும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை. அந்த பகுதிகளை உள்ளடக்கியதாக நிலைகொள்வோம், பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில்- அந்த இடத்தில் இருந்தபடி, யாழ்ப்பாணத்தின் எஞ்சிய பகுதிகளை கவனிப்போம் என புலிகள் நினைத்தனர். யாழ் களமுனை, தளபதி சொர்ணத்திடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அந்த களம் புலிகளிற்கு பெரும் சோதனைக்களமானது. பெட்டியடித்தல் (BOX) முறையை பயன்படுத்திதான் யாழ்ப்பாண களமுனையின் வாசலை புலிகள் திறந்தார்கள். ஆனையிறவிற்கு பின்னால் குடாரப்பில் 2000.03.26 அன்று பால்ராஜ் தலைமையிலான அணியினர் தரையிறங்கி இத்தாவிலில் பெட்டியடித்ததே ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காரணம். அந்த உத்தியை தென்மராட்சி களமுனையில் இராணுவம் பயன்படுத்த ஆரம்பித்தது. புலிகளின் அணிகளை கூறாக்கி, அடிக்கடி சிறிய சிறிய பெட்டிகள் அடித்தார்கள். அதற்குள் சிக்கும் புலிகளின் அணிகள் அழிவை சந்தித்தன. அடிக்கடி நடந்த பெட்டியடிப்பில் நூற்றுக்கணக்கில் புலிகள் மரணிக்க தொடங்கினார்கள். அத்துடன் கைப்பற்றப்பட்ட இடங்களும் பறிபோக ஆரம்பித்தன.80களின் தொடக்கத்தில் பிரபாகரனின் நம்பிக்கையான மெய்ப்பாதுகாவலராக சொர்ணம்இராணுவத்தின் பெட்டியடிப்பு தந்திரோபாயத்தை எதிர்கொள்ள சொர்ணத்தால் முடியவில்லையென்பதே உண்மை. இராணுவத்தின் தந்திரோபாயத்திற்கு சவாலளிக்கத்தக்க எந்தவொரு உத்தியையும் புலிகள் அப்போது வெளிப்படுத்தவில்லை. இது சொர்ணத்தின் பலவீனம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அதாவது, முன்னர் புலிகள் செய்ததைபோல. புலிகளிற்கு அவகாசம் வழங்காமல் தொடர்ச்சியாக தாக்குவதென்ற இராணுவத்தின் உத்தி பலித்தது. சொர்ணத்தின் திட்டமிடல் குறைப்பாடும் இராணுவத்திற்கு சாதகமாகியது. சொர்ணம் சற்று சுதாகரித்து தனது பாணியில் சில நகர்வுகளை செய்ய எத்தனித்த சமயத்தில் காலம் கடந்துவிட்டது. ஏற்கனவே ஆளணி பிரச்சனையால் திண்டாடிய புலிகள், அண்மைய இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்ட கணிசமான இழப்புக்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். சாவகச்சேரியை எப்படியாவது காப்பாற்றிவிட புலிகள் முயற்சித்தனர். அப்போது கனகம்புளியடி சந்திக்கு அப்பால் களமுனையிருந்தது. கனகம்புளியடி சந்தி ஒரு கேந்திர நிலையமாக இருந்தது. கனகம்புளியடி சந்தியை இராணுவம் கைப்பற்ற வாய்ப்பாக அமைந்தது- புலிகளின் ஆளணி பிரச்சனை. அந்த பகுதியில் அணிகளை நிறுத்த அவர்களிடம் ஆளணி இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி இராணுவம் சாவகச்சேரிக்குள் நுழைந்தது. சாவகச்சேரி, தனங்கிளப்பு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் தொடர்ச்சியாக பெட்டியடித்து புலிகளிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. தென்மராட்சியில் நிலைகொண்டிருப்பது பெரும் உயிர்விலை கொடுப்பதிலேயே முடியும் என்பதை உணர்ந்த பிரபாகரன் தென்மராட்சியை விட்டு பின்வாங்க முடிவெடுத்தார். தொடர் தாக்குதல்களால் புலிகளின் அணிகள் தென்மராட்சியை விட்டு பின்னகர்ந்து முகமாலையில் நிலை கொண்டன. சொர்ணம் உடனடியாக திருப்பி அழைக்கப்பட்டார். தீபன் அந்த களமுனைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். சொர்ணத்தின் செயற்பாட்டில் பிரபாகரன் பயங்கர அதிருப்தியில் இருந்தார். தரைத்தாக்குதல்களில் அவர் லாயக்கற்றவர் என்ற உணர்வை ஏற்படுத்தவோ என்னவோ அவரை கடற்புலிகள் அணிக்கு அனுப்பினார். அப்போது கடற்புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்தவர் கங்கைஅமரன். அவரது பொறுப்பிற்கே சொர்ணம் அனுப்பப்பட்டார். தரைத்தாக்குதலில் பெரும் தளபதியாக விளங்கியவரை கடற்புலிகளின் மாவட்ட தளபதியாக அனுப்பி தண்டனை வழங்கினார் பிரபாகரன். இந்தபாணி தண்டனை வழங்கலை பிரபாகரன் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தாக்குதலில் சிறப்பாக செயற்படாத தளபதியை பதவி இறக்கி சாதாரண போர்வீரராக களத்திற்கு செல்ல பணிப்பார். மீண்டும் சண்டைமுறையை பயின்று கொள்ளுங்கள் என்பதே இதன் அர்த்தம். மணலாறு மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்தவர் வெள்ளை. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்து வளர்ந்தவர். நல்ல நிர்வாக ஆற்றல் மிகுந்தவர். 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலிலும் முக்கிய பங்கு வகித்தவர். மண்கிண்டிமலை முகாம் மீது 1995 இல் புலிகள் நடத்திய தாக்குதல் தோல்வியடைய, அதற்கு தண்டனையாக வெள்ளை பதவி இறக்கப்பட்டார். இறுதியில் சூரியகதிர் நடவடிக்கையில் புத்தூரில் 150 பேர் கொண்ட கொம்பனி லீடராக செயற்பட்டு மரணமானார். அவர் லெப்.கேணல் தரமுடையவர். ஆனால் இறப்பின்போது மேஜர் தரநிலையே வழங்கப்பட்டது. அதுபோல மணலாறு சிறப்பு தளபதியாக இருந்த இன்னொருவர் அன்ரன். 1996 இல் ஓயாதஅலைகள் 1 நடவடிக்கையில் அளம்பிலில், திரிவிடபஹர என்ற படைநடவடிக்கையை மேற்கொண்டு தரையிறங்கிய இராணுவத்தை புலிகள் சுற்றிவளைத்தனர். அந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவர் அன்ரன். தரையிறங்கி இராணுவம், கடற்கரையோர பற்றைகளில் நல்ல மறைப்பில் பதுங்கியிருந்தனர். பழைய அரசர் கால யுத்தங்களை போல, “ம்… அவர்களை தாக்குங்கள்“ என அரசர் உத்தரவிட்டு, எதிரிப்படைகளை நோக்கி பாய்ந்து செல்வதை போல, அன்ரன் தாக்குதல் செய்தார். இளநிலை தளபதிகள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், வெட்டவெளிக்குள்ளால், காலை 9 மணிக்கு இராணுவத்தை நோக்கி முன்னேறும்படி கட்டளையிட்டார். பதுங்கியிருந்த இராணுவம், வெட்டவெளியால் வந்த போராளிகளை குருவி சுடுவதை போல சுட்டு விழுத்தியது. பெரும் இழப்பு. அன்ரனிற்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர், இம்ரான் பாண்டியன் படையணி தளபதி ராஜேஷ். அன்ரனின் நகர்வுகளை அவரும் எதிர்த்தார். உடனே பொட்டம்மான் அங்கு சென்று களத்தில் நடந்தவற்றை விசாரித்தார். மாலையில் அன்ரனிற்கு காற்று போனது. அன்ரன் பின்னாளில, ஏழுபேர் கொண்ட சாதாரண அணியில், சாதாரண ஒருவராக நியமிக்கப்பட்டார்.சூசையின் பின்னால் நிற்பவர் ராஜேஷ். (உடனடியாக தெளிவான புகைப்படங்கள் கிடைக்கவில்லை. ராஜேஷின் தெளிவான புகைப்படம் உள்ளவர்கள் அனுப்பி வைக்கலாம்)அன்ரனின் இடத்திற்கு ராஜேஷ் உயர்ந்தார். ஓயாத அலைகள் 1 முடிய, மணலாறு மாவட்ட தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1997இல் ஆனையிறவு மீதான தாக்குதலில் அணிகள் உள்நுழைந்து ஆட்லறிகளை கைப்பற்றி விட்டன. கைப்பற்றிய ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை. இதனால், ஆனையிறவிற்குள்ளேயே அவற்றை தகர்த்து விட்டு, புலிகள் பின்வாங்கினார்கள். தளபதி ராஜேஷின் அணி திட்டமிட்டதை போல, செயற்படாமையே, ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியாமைக்கு காரணம். அவரது அணியின் பொறுப்பு, கொம்படியிலிருந்த இராணுவ முகாமை அழிப்பது. ஆனால் நள்ளிரவில் நகர தொடங்கிய அவரது அணி, குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையவில்லை. வழிகாட்டிகளும் குழப்பி விட்டனர். விடிகாலையில் அங்கு போய், முகாமை கைப்பற்ற முடியவில்லை. ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை. இதனால் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அதற்கு தண்டனையாக ராஜேஷ், ஏழு பேர் கொண்ட அணியில் ஒருவராக பதவியிறக்கப்பட்டார். பின்னாளில் ஆனந்தபுரம் சமரில் அவர் மரணமானார். கேணல் தர நிலை வழங்கப்பட்டது. (தொடரும்)
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 57 மரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம் மரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம்
காதல் கத்தரிக்காய் எல்லாம் சொர்ணத்திற்கு சரிப்பட்டு வராது. மிக இறுக்கமான இராணுவ ஒழுங்குள்ள மனிதராக அவர் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனிப்பட்ட வாழ்க்கை விவகார த்தில் கூட இந்த இமேஜை கடந்து அவரால் செயற்பட முடியாது.அப்போது மகளிர் படையணி தளபதியாக இருந்தவர் ஜனனி. சில தாக் குதல் திட்டமிடல்கள், கூட்டங்களில் இருவரும் சந்தித்திருந்தனர். சொர்ணம் என்றாலே ஜனனிக்கு பெரும் பயம்.ஜனனியை திருமணம் செய்யலாமென சொர்ணத்திற்கு விருப்பம் ஏற்ப ட்டது. இதை எப்படி கையாள்வதென்பதுதான் அவருக்கு தெரியவில்லை. பலதையும் யோசித்துவிட்டு தனது பாணியிலேயே காரியத்தை முடிக்க திட்டமிட்டார். ஒருநாள் ஜனனியின் முகாமிற்கு சென்றார். பெண்போராளிகளின் முகாம்களிற்குள் ஆண் போராளிகள் யாரும் நினைத்த மாதிரி செல்ல முடியாது. அது பிரபாகரனாக இருந்தாலும் கூட. பிரபாகரனை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அவர் அந்த சுய கட்டு ப்பாட்டை ஏற்படுத்தியதுடன், மற்ற போராளிகளிற்கும் வழிகாட்டினார்.பெண்களின் முகாம்களின் முன்பகுதியில் ஒரு வட்டக்கொட்டில் இருக்கும். அங்குதான் விருந்தினர்களாக வரும் ஆண் போராளிகள் உட்காரலாம். உள்ளே நுழைய முடியாது. ஜனனியின் முகாமிற்கு சென்ற சொர்ணம் வட்டக்கொட்டிலில் உட்காரவில்லை. அவசர அலுவலாக செல்பவர்கள் பதற்றமாக நின்று கொண்டிருப்பதை போல அந்தரமாக நின்று கொண் டிருந்தார். சொர்ணம் வந்துள்ள தகவலை அறிந்து ஜனனி அவசரமாக வந்தார். கூடவே ஒருசில பெண்போராளிகளும் வந்தனர். ஜனனி அரு கில் வந்ததும், சொர்ணம் இப்படி சொன்னார். “இயக்கம் என்னை கலியா ணம் கட்ட சொல்லியிருக்குது. உம்மைத்தான் கலியாணம் செய்யப் போறன். என்ன என்று யோசிச்சு சொல்லும்“ என்றுவிட்டு விறுவிறுவென வந்து வாகனத்தில் ஏறிவிட்டார். நேராக பிரபாகரனின் மனைவி மதிவதனியிடம் சென்று, நடந்ததை சொன்னார். மதிவதனி தனது கூட ப்பிறந்த சகோத ரனை போலத்தான் சொர்ணத்தை பாவித்தார். அதனா ல்தான் சொர்ணத் தின் திருமணத்தில் மதிவதனி தனிப்பட்ட ஆர்வம் காட்டினார். சொர்ணம் புறப்பட்ட பின்னர், நடந்ததை பிரபாகரனிடம் சொல்லியுள்ளார். சொர்ணத்தின் இயல்பை நினைத்து இருவரும் நகைச் சுவையாக சிரித்தனர். இறுதிவரை இந்த சம்பவத்தை மதிவதனி அடிக் கடி குறிப்பிட்டு சொர்ணத்தை கலாய்த்தே வந்தார். அப்போது அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல், யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகளுடன் தங்கியிருந்தார். ஜனனி உடனடியாக அடேலை சந்தித்து விசயத்தை சொல்லியிருக்கி றார். பின்னர் மதிவதனியை சந்தித்து சொன்னார். சிலநாட்களின் பின், மதிவதனி ஆறுதலாக உட்கார்ந்திருக்கும் சமயத்தில் ஜனனியை அழைத் தார். சொர்ணத்தை திருமணம் செய்ய தாங்கள் வற்புறுத்தியதிலிருந்து இறுதிவரை நடந்தது அனைத்தையும் சொன்னார். சொர்ணத்திற்கு பிரபாகரனும் தானும் பெண் பார்ப்பதையும் சொன்னார். சொர்ணத்தை திருமணம் செய்ய ஜனனிக்கு விருப்பமா என கேட்டார். அடுத்த சில வாரங்களில் சொர்ணம்-ஜனனி திருமணம் நடந்தது. திருமணத்தின் பின் பிரபாகரனின் பாதுகாப்பு அணி பிரதானி என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின் னர்தான் கூட்டுப்படை பிரதானியானார். 1995 இல் ஆரம்பிக்கப்பட்ட சூரியக்கதிர் படை நடிவடிக்கை, 1996 இல் சாவகச்சேரியை கைப்பற்றி யது. அப்போது கூட்டுப்படை தளபதியாக களத்தை வழிநடத்திய சொர்ணம், யாழ்ப்பாண களத்தை வழிநடத்திய ரவி இருவருக்கும் “காற்று போனது“.மீண்டும் 2000 ஆண்டில் சாவகச்சேரியில் ஒரு களமுனை. இதற்குள் ஈழப்போரில் நிறைய மாற்றங்கள். புலிகள் ஒரு மரபுவழி இராணுவமாக மேலெழுந்து விட்டனர். சொர்ணம், பால்ராஜ் என்ற மைய அச்சில் சுற்றிக்கொண்டி ருந்த புலிகளின் இராணுவ கட்டமைப்பு பால்ராஜ், கருணா, தீபன் இன் னும் ஏராளம் இரண்டாம் நிலை தளபதிகளுடன் புதிய அத்தியாயத்திற் குள் புக தொடங்கிவிட்டது. ஆனால் இந்த காலத்திற்குள் சொர்ணம் களத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கவில்லை. அவர் திருகோணமலை தளபதியாக செயற்பட்டார். திருகோணமலை அணியில் சுமார் 400- 500 பேர் வரையில் இருந்தனர். வன்னியில் சிறிய தொகையினர் நிலை கொண்டி ருக்க, ஏனையவர்கள் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடை ப்பட்ட காடுகளில் நிலைகொண்டிருந்தனர். சிறிய கெரில்லா தாக்குத ல்கள்தான் செய்துகொண்டிருந்தனர். எப்பொழுதாவது மினிமுகாம்கள் மீது சிறிய தாக்குதல்களை செய்தனர். 1997 இல் வன்னியில் ஜெயசிக்குறு என்ற பிரமாண்ட நடவடிக்கையை படையினர் ஆரம்பித்தனர். அப்போது படையிலிருந்த ஆளெண்ணிக்கையை வைத்து வடக்கு கிழக்கு முழுவதும் மேலாதிக்கம் செலுத்த படையினரால் முடியாது. வன்னி படைநடவடிக்கைக்காக கிழக்கின் பல பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. பெரும் நிலப்பரப்பின் கட்டுப்பாட்டை இராணுவம் இழந்தது.வன்னியில் படையினரின் கவனத்தை சிதறச்செய்து, படை நடவடிக்கையின் வீரியத்தை குறைக்க புலிகள் கையாண்ட உத்தி, வன்னிக்கு வெளியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, தென்னிலங்கையில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட தளபதிகளிற்கு தலைமை அப்பொழுது ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு தாக்குதலாவது நடத்தியிருக்க வேண்டும்.இப்படி கெரில்லா தாக்குதல் முயற்சிகளில் சொர்ணம் ஈடுபட்டு கொண்டிருக்க, வன்னியில் கருணா, பால்ராஜ், தீபன், ஜெயம், பானு உள்ளிட்டவர்கள் பெருமெடுப்பிலான மரபுச்சமரில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.இப்படித்தான் 1999 இன் இறுதியில் ஓயாத அலைகள் 3 ஆரம்பிக்கப்பட்டது. அது வன்னி முழுதும் வீச்சம்பெற்று பல பகுதிகளை கைப்பற்றியது. பின்னர் குடாநாட்டு பக்கம் திரும்பி ஆனையிறவை வீழ்த்தியது. ஆனையிறவு சமரில் பால்ராஜ், தீபன், பானு ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் நகர்ந்து, யாழ்நகர வாசல் வரை சென்றது. அப்பொழுதுதான் இந்தியாவின் உதவி இலங்கைக்கு கிடைத்தது.லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கத்திற்கு இந்திய வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கும் சௌத் புளக்கின் செய்தியொன்று சென்றது. நம்பிக்கையான இடைத்தரகர்கள் மூலம்தான் அந்த செய்தி அனுப்பப்பட்டது. “புலிகள் குடாநாட்டு சண்டையை தொடர்ந்தால், இன்னும் ஒரு அடி முன்னகர்ந்தால் இலங்கை இராணுவத்தை காப்பாற்ற இந்திய இராணுவம் தலையிடும்“. இதுதான் அந்த செய்தி.அப்போது பிரபாகரனின் இருப்பிடம் புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் இருந்தது. பின்னர் இந்த முகாமை பொதுமக்களின் பார்வைக்காக இராணுவம் திறந்து விட்டிருந்தது.
லண்டனில் இருந்து செய்மதி தொலைபேசியில் பிரபாகரனை அழைத்தார் பாலசிங்கம். விடயம் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்திய தலையீட்டை தவிர்க்க, யாழ்ப்பாணம் நோக்கிய படைநகர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமென பாலசிங்கம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அப்படியான முடிவையே பிரபாகரனும் எடுத்தார்.செம்மணி வளைவை கடந்து யாழ் நகருக்கு நெருக்கமாக நின்ற புலிகளின் அணிகளிற்கு தாக்குதலை நிறுத்தும் கட்டளை சென்றது. இம்ரான்- பாண்டியன், சாள்ஸ் அன்ரனி, மாலதி, ஜெயந்தன், புலனாய்வுத்துறை படையணிகள் அந்த களத்தில் இருந்தன.இதற்குள் யாழ்ப்பாண இராணுவ கட்டளைபீடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனக பெரேராவும், சரத் பொன்சேகாவும் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர். இலங்கை இராணுவத்தில் அப்போதிருந்த போர்க்கள நட்சத்திரங்கள் அவர்கள் இருவருமே.மறுவளமாக புலிகள் யாழ்ப்பாண களத்திற்கு தளபதியாக நியமித்தது, நீண்டகாலம் மரபுவழி இராணுவ நடவடிக்கைகளில் பரிச்சயமில்லாமலிருந்த சொர்ணத்தை!(தொடரும்)
சொர்ணத்தின் முதலாவது வீழ்ச்சி சாவகச்சேரியில் நிகழ்ந்ததை கடந்த வாரம் பார்த்தோம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டாவது வீழ்ச்சியும் சாவகச்சேரியில்தான் சொர்ணத்திற்கு நிகழ்ந்தது. அதை தொடரும் பகுதிகளில் பார்க்கலாம். சொர்ணம் குறித்த கடந்த பகுதியில், ஏற்கனவே தமிழ்பக்கத்தில் வெளியான சில பகுதிகளில் வெளியான சம்பவங்கள் இருந்ததால், கூறியது கூறல் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பல வாசகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். சொர்ணம் குறித்து, தமிழ்பக்கம் ஏற்கனவே ஒரு தொடரை வெளியிட்டிருந்தது. மினி தொடரிலும் சில சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். அதனால், “பழையதை போன்ற உணர்வு“ வாசகர்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இனி வரும் பகுதிகளில் அதை கவனத்தில் கொள்கிறோம். சுட்டிக்காட்டிய வாசகர்களிற்கு நன்றி. சொர்ணத்திற்கும் பிரபாகரனிற்குமிடையில் இருந்த பிணைப்பை கடந்த இதழ்களில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், சொர்ணத்தின் வாழ்வுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டிருந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தை ஏற்கனவே, சொர்ணம் குறித்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். புதிய வாசகர்களிற்காகவும், சம்பவ தொடர்ச்சிக்காகவும் குறிப்பிடுகிறோம். சொர்ணம் இம்ரான்- பாண்டியன் படையணியின் தளபதியாக செயற்பட்டார். பின்னாளில் அந்த பொறுப்பை வகித்த கடாபி (ஆதவன்) பிரபாகரனின் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தார். அவருக்கு அடுத்த நிலையில் செல்லக்கிளி என்பவர் இருந்தார். இவர் மட்டக்களப்பை சேர்ந்தவர். தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சொர்ணம் இம்ரான்- பாண்டியன் படையணியிலிருந்து மாற்றப்பட இருந்தார். அடுத்தநிலை தளபதிகளை வளர்க்க புதிய தளபதி அவசியம். அடுத்தது, மாத்தையா விவகாரம். மாத்தையா விவகாரத்தின் பின் புலிகள் முழுமையாக தங்களை மறுசீரமைத்தனர். சொர்ணத்தின் மாற்றம் சந்தேகத்தின் பாற்பட்டதல்ல. அந்த பொறுப்பிலிருப்பவரும் மாற்றப்பட வேண்டுமென்ற விதியை அப்போதுதான் உருவாக்கினார்கள். மாத்தையா விவகாரத்தின் போது பிரபாகரனின் பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்தவர் சொர்ணம். பிரபாகரனின் தொலைத்தொடர்பாளர் செங்கமலம் போன்றவர்கள் மாத்தையாவுடன் தொடர்பில் இருந்த தகவல் வந்ததும் சொர்ணம் ஆடிப்போய் விட்டார். பிரபாகரனின் பாதுகாப்பு உறுப்பினர்கள் வரை மாத்தையா ஊடுருவி விட்டார் என்றதை அறிந்ததும் சொர்ணம் ஆடிப்போய் விட்டார். பிரபாகரனை பாதுகாக்க முடியுமா என்ற சந்தேகமும், பயமும் அவரை ஆட்டுவித்தது. நேராக பொட்டம்மானின் முகாமிற்கு சென்றார். கதிரையில் உட்கார்ந்திருந்த பொட்டம்மானின் காலைப் பிடித்து அழத் தொடங்கிவிட்டார். பொட்டம்மான் ஆறுதல் சொல்லி அவரை தேற்றியது தனிக்கதை. இது சொர்ணத்தின் விசுவாசத்தின் சாட்சி. சொர்ணம் இடமாற்றம் செய்யப்பட்டால் அடுத்தது யார் என்ற கேள்வியிருந்தது. கடாபிதான் அடுத்த தெரிவு. கடாபிக்காகத்தான் சொர்ணத்தை மாற்றும் முடிவை பிரபாகரன் எடுத்தார். ஆனால் கடாபியுடன் போட்டியிட இன்னொருவர் விரும்பினார். அது செல்லக்கிளி. பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றால், இலகுவாக அந்தப்பொறுப்பை எடுக்கலாமென நம்பினார். செல்லக்கிளி 1986 இல் மட்டக்களப்பில் பயிற்சி பெற்றவர். இந்திய இராணுவ காலம் முதல் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தவர். பிரபாகரனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலராகவும் செயற்பட்டவர். போட்டியில் கடாபி தன்னைவிட முன்னிலையில் இருப்பது செல்லக்கிளிக்கும் தெரியும். அதனால் குறுக்குவழியில் அதனை அடைய முயன்றார். பிரபாகரனின் அன்றாட வழக்கங்களில் ஒன்று காலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி. அப்போது கொக்குவிலில் பிரபாகரனின் முகாம் இருந்தது. இது 1994 இல் நிகழ்ந்தது. காலை உடற்பயிற்சியின் பின்னர் நன்றாக நீரருந்துவார். அப்படித்தான் ஒருநாள் நடைப்பயிற்சியின் பின் நீரருந்த விரும்பினார். அவரது வீட்டில் நின்ற போராளியொருவரிடம் பிரபாகரன் நீர் கேட்டார். அப்போது, பிரபாகரனின் உணவுகள் கிரமமாக சோதனை செய்யப்படுவதில்லை. பாதுகாப்பு பொறுப்பாளர் இடையிடையே சோதனை செய்வார். அது பாதுகாப்பு பொறுப்பாளரின் முடிவு. பின்னாளில்தான் அது வழக்கமாக்கப்பட்டது. மருத்துவ போராளியொருவர் பாதுகாப்பு குழுவில் அங்கம் வகித்தார். பிரபாகரனிற்கு வழங்கப்படும் உணவுகளை அவர்தான் முதலில் உண்பார். அவர் உண்ட பன்னிரண்டு நிமிடங்களின் பின்னர்தான் பிரபாகரன் உணவருந்துவார். போராளிகள் சந்திப்பில், அனைவரும் உணவருந்துவார்கள். அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரே உணவுதான். ஆனால், பிரபாகரனின் சமையல்கூடத்திலிருந்து தனியாக தயார் செய்யப்பட்டு அந்த மருத்துவ போராளியிடம் கையளிக்கப்படும். அவர் உணவுமேசைக்கு அனைவரும் செல்லும்வரை டிபன் கரியருடன் இருப்பார். உடற்பயிற்சியின் பின் பிரபாகரன் நீர் கேட்டதும், அங்கு காவல்கடமையிலிருந்த போராளி உள்ளே சென்று நீர் எடுத்து வந்தார். அப்போது செல்லக்கிளி திடீரென வந்து நீரை வாங்கி சோதனை செய்தார். அந்த நீரை அருந்திய செல்லக்கிளி, அது ஒரு மாதிரி இருப்பதாக எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே வயிற்றைப்பொத்திக்கொண்டு உட்கார்ந்தார். வாந்தி எடுத்தார். வாயிலிருந்து நுரை தள்ளினார். ஏதோ விபரீதம் என முகாம் எச்சரிக்கப்பட்டது. உடனடியாக பிரபாகரன் அரியாலையிலிருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொக்குவில் முகாம் உயர்மட்ட விசாரணையாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. பிரபாகரன் அருந்தும் நீரில் யாரோ நஞ்சு கலந்திருக்க வேண்டுமென்பது முதல்கட்ட தகவல். அதை அருந்திய செல்லக்கிளி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது. பொட்டம்மானிற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அது செல்லக்கிளி மீதே! பிரபாகரனிடமும் அது பற்றி சொல்லியுள்ளார். எனினும், பிரபாகரன் அதை ஏற்கவில்லை. தனது உயிரை காப்பாற்றியவராகவே பிரபாகரன் நினைத்தார். ஆனால் புலன் விசாரணையை துரிதப்படுத்திய பொட்டம்மான், பிரபாகரனின் அதிருப்தியின் மத்தியிலும் செலலக்கிளியை கைது செய்தார். கடுமையான விசாரணையின் பின் செல்லக்கிளி உண்மையை ஒத்துக்கொண்டார். பிரபாகரனிற்கு தன்னில் அபிமானமும், பிடிப்பும் ஏற்படுவதற்காக அவர் அருந்தும் தண்ணீரில் சிறிதளவு சயனைட் நஞ்சை தானே கலந்ததாக ஒத்துக்கொண்டார். அந்த தண்ணீரை பிரபாகரன் குடித்துவிடக் கூடாதென்பதிலும் மிக கவனமாக இருந்ததாகவும் கூறினார். அதன் பின்னர் செல்லக்கிளி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறுமாதங்கள் தண்டனையின் பின் விடுவிக்கப்பட்டு, தென்மராட்சியின் அல்லாரையில் 1995 இல் ஆரம்பித்த பயிற்சி முகாமான கெனடி 1 இன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும், அங்கும் நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அமைப்பிலிருந்து விலகிய பின்னர் வன்னியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாகன சாரதியாக தொழில்புரிந்துவிட்டு, முகவர் ஊடாக பிரித்தானியாவிற்கு சென்று அகதி அந்தஸ்து பெற்றுக்கொண்டார். சொர்ணம், பிரபாகரன் உறவை புரிய வைக்க இன்னொரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறிவிட்டது. சொர்ணத்தின் திருமணமே அது. 1990 இல் இந்திய இராணுவத்துடனான யுத்தத்தின் பின் புலிகள் அமைப்பிற்குள் திருமணங்கள் நடந்தன. அப்போது புலிகளின் திருமண வயது ஆண்களிற்கு 29.
பிரபாகரன் குடும்பத்தின் மீதே பிரபாகரன் அதி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். பிரபாகரனை போலவே மதிவதனியும் சொர்ணத்தில் அன்பாக இருந்தவர். 1993 இல் சொர்ணம் திருமண வயதை எட்டியபோது, அவரை திருமணம் செய்யுமாறு பிரபாகரன் தம்பதியினர் வற்புறுத்தினர். திருமண பேச்சை எடுத்தாலே சொர்ணம் வெட்கப்பட்டு, அசூசைப்பட்டார். தனக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லையென்றும், இலட்சியத்தை அடைந்த பின்னரே எதுவென்றாலும் என சொன்னார். எனினும், பிரபாகரன் தம்பதி அதை ஏற்கவில்லை. குறிப்பாக மதிவதனி அதை ஏற்கவில்லை. சொர்ணத்திற்கு யாரிலும் விருப்பமிருந்தால் தானே நேரில் சென்று பேசுவதாகவும் கூறியிருந்தார். சொர்ணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லையென்றார். அந்த காலப்பகுதியில் சொர்ணம் என்றால் போராளிகளே நடுநடுங்குவார்கள் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். பெண் போராளிகளும் அப்படித்தான். சொர்ணத்துடன் முரண்பட்ட அப்போதைய மகளிர் படையணி தளபதியாக இருந்த ஜெனா அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார். (தொடரும்)
கருணா பிரிவு சமயத்தில், திருகோணமலை தளபதியாக இருந்த பதுமனை புலிகள் எப்படி வன்னிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை இந்த தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். தளபதி சொர்ணம்தான் இந்த நடவடிக்கையை கச்சிதமாக செய்தார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட இரண்டு குழப்பத்திலும் பிரபாகரனிற்கு நம்பிக்கையானவராக, அவருக்கு ஆபத்தில் உதவும் முதல் மனிதராக சொர்ணம் இருந்தார். சொர்ணத்தின் வரலாற்றை அறிந்தாலே இந்த பிணைப்பை புரிந்து கொள்ளலாம்.
1994 இல் மாத்தையா விவகாரம் புலிகளிற்குள் சிக்கலை தோற்றுவித்தது. வன்னிப் படையணி மாத்தையாவிடம் இருந்தது. மாத்தையாவின் தீவிர விசுவாசிகளாக, அறியப்பட்ட சண்டைக்காரர்களான சுரேஸ் போன்றவர்கள் இருந்தார்கள். மாத்தையாவை கைது செய்யும்போது நிச்சயம் பெரிய சண்டை மூளுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொர்ணம் அதனை வித்தியாசமாக கையாண்டார். அதனை விபரமாக பின்னர் பார்க்கலாம்.
1964 இல் பிறந்த சொர்ணத்தின் இயற்பெயர் யோசப் அன்ரனிதாஸ். யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்தபோதும் திருகோணமலையின் அரசடி வாழைத்தோட்டம் என்ற சிறிய கிராமம்தான் சொர்ணம் வளர்ந்த இடம். 1983 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, இந்தியாவின் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இதே பயிற்சி முகாமில்தான் கருணாவும் பயிற்சி பெற்றார்.
பயிற்சியின் பின்னர் இந்தியாவில் தங்கியிருந்த சொர்ணத்தின் நடவடிக்கைகள் பிரபாகரனிற்கு பிடித்து போய் விட்டது. அமைப்பிற்காக எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்ததுடன், தலைமை மீது அளவற்ற விசுவாசம் வைத்திருந்தார். அதனால், பிரபாகரனின் மெய்பாதுகாவலராகவும் செயற்பட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆரம்பகால போராளிகள் குறைந்தளவானவர்கள். அனைவரும் பிரபாகரனுடன் பரிச்சயமானவர்கள். அவர்கள் எல்லோரையும் விட சொர்ணத்தில் வித்தியாசமான பிணைப்பொன்றை பிரபாகரன் பேணினார். பின்னாளில் சொர்ணத்தின் நடவடிக்கைகள் சிலவற்றில் அதிருப்தியடைந்து அவரை தள்ளிவைத்த போதும், நெருக்கடியான சமயம் ஏற்படும்போது முதலாவது ஆளாக சொர்ணத்தைதான் பிரபாகரன் அழைத்தார். இருவருக்குமிடையிலான பிணைப்பிற்கு இதுதான் சாட்சி.
1990இல்தான் தேர்ச்சிமிக்க படையணியொன்றின் மூலம் பிரபாகரனின் பாதுகாப்பை உறுதி செய்வதென விடுதலைப்புலிகள் அமைப்பு முடிவுசெய்தது. அந்தப் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டது. இம்ரான்- பாண்டியன் படையணியென்ற பெயரில் ஒரு படையணியை உருவாக்கி பிரபாகரனின் பாதுகாப்பை சொர்ணம் கவனித்துக் கொண்டார். பின்னாளில் பிரபாகரனின் பாதுகாப்பை நேரடியாக கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கடாபியிடம் சென்றாலும், சொர்ணம் அந்த படையணியின் தளபதியாக 1995 வரை இருந்தார்.
இரண்டாம் ஈழப்போர் காலத்தில் யாழ்ப்பாண குடாநாடுதான் புலிகளின் பிரதான போர்த்தளம். வடக்கில் பலாலி தளமும், தென்கிழக்கு பகுதியில் ஆனையிறவுதளமும் இருந்தன. இந்தப்பகுதிகளை மையமாக வைத்தே பிரதான சண்டைகள் நடந்தன. இந்தக்களங்களில் சொர்ணம் ஈடு இணையற்ற தளபதியாக அப்போது விளங்கினார். அந்த சமயத்தில் புலிகளிடம் இரண்டு நட்சத்திர தளபதிகள் இருந்தனர். ஒருவர் பால்ராஜ். அவர் அதிகம் வன்னியை தளமாக கொண்டிருந்தார். மற்றையவர் சொர்ணம். இவர் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டிருந்தார். ஆனால் பெரும்பாலும் யாழில் நடந்த பெரும்பாலான களங்களை இருவருமே பங்குபோட்டனர்.
1990 களில் சொர்ணம் அச்சுறுத்தும் தளபதியாக இருந்தார். இராணுவம் சொர்ணத்தை பிரிகேடியர் என தொலைத்தொடர்பு கருவிகளில் அழைத்து கொள்வதாக அப்போது போராளிகளிடம் பேச்சிருந்தது. போராளிகளும் சொர்ணம் என்றால் சிறுநீர் கழிக்காத குறையாக பயப்பிடுவார்கள். அவ்வளவு சக்திமிக்கவராக, கோபக்காரராக வலம் வந்தார். அவரது கட்டளையில் நடந்த தாக்குதல்களும் வெற்றியடைய, பேராளுமையாக உருப்பெற்றார்.
சொர்ணம் என்பதும் குறிப்பிட வேண்டியது கட்டைக்காடு ஆயுதக்களஞ்சியம் மீதான தாக்குதல். ஆனையிறவு மீது புலிகள் நடத்திய ஆகாய கடல்வெளி சமரின் பின் புலிகளிற்கு ஆயுதப்பஞ்சம் ஏற்பட்டது. ஆயுத இருப்பை உறுதி செய்யாவிட்டால் அடுத்தடுத்து இராணுவம் மேற்கொள்ளும் பெரிய நடவடிக்கைகளை தாக்குப்பிடிக்க முடியாதென்ற இக்கட்டான நிலை புலிகளிற்கு உருவானது. இந்த சமயத்தில் சொர்ணம் தனது படையணியுடன் கட்டைக்காடு ஆயுதக்களஞ்சியத்தை கைப்பறினார். அந்த ஆயுதங்கள் புலிகளிற்கு பெரும் துணையாக இருந்தன.
1990களின் பின்னர் புலிகள் கூட்டுப்படை தலைமையகம் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள். இதன் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அப்போது வன்னியில் மாங்குளம், கொக்காவில் மற்றும் ஆனையிறவு தாக்குதல்களில் சிறப்பாக செயற்பட்டு, நட்சத்திரமாக உருவாகியிருந்தார் பால்ராஜ்.
பால்ராஜின் தாக்குதல் திட்டமுறை வேறு, சொர்ணத்தின் முறை வேறு. பால்ராஜ் எதையும் நுணுக்கமாக திட்டமிடுபவர். ஒரு திட்டம் சிக்கலானால் மாற்று, அதற்கு மாற்று என நிறைய உபாயங்களை தயார்படுத்திக் கொள்பவர். ஆளணி இழப்பை தவிர்த்து, தந்திரோபாய நகர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். ஆனால் சொர்ணம் வேறு மாதிரி. எல்லாமே அதிரடிதான் அவரது பாணி.
அவ்வளவு நுணுக்கமான திட்டமிடல் இருப்பதில்லை. ஆக்ரோசம்தான் மூலதனம். மண்டைதீவு தாக்குதல், கட்டைக்காடு முகாம் தாக்குதல் என்பவற்றில் புதிய போருத்திகளை சொர்ணம் கையாண்டார்தான். கட்டைக்காடு தாக்குதலில்தான் எதிரிகளின் நிலைக்கு பின்புறமாக வந்து, பிடறியில் அதிர்ச்சியடி அடிக்கும் உத்தியை கையாண்டார்கள். அது இறுதிவரை வெற்றிகரமான உத்தியாக இருந்தது.
எனினும், இப்படி ஓரிரண்டு தாக்குதல்கள்தான் சொர்ணத்தின் பெயர் சொல்பவையாக அமைந்தன. மற்றும்படி, “அதோ தெரிகிறது இலக்கு, தாக்கு“ உத்திதான். இது ஆரம்பத்தில் கைகொடுத்தாலும், பின்னர் கைகொடுக்கவில்லை.
கூட்டுப்படை தலைமைய தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்ட பின்னர் விமர்சனமொன்று கிளம்பியது. அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் சாள்ஸ் அன்ரனி படையணி தளபதியாக செயற்பட்டவர். அந்தப் பொறுப்பிலிருந்து கூட்டுப்படை தலைமையகத் தளபதியாக மாற்றப்பட்ட பின்னரும், அவர் படையணி தளபதியாகவே செயற்படுகிறார் என்ற விமர்சனம் கிளம்பியது. அனைத்து விடயங்களிலும் சாள்ஸ் அன்ரனி படையணியை முன்னிலைப்படுத்தியே அவர் செயற்பட்டதாக மற்றைய தளபதிகளிடம் அதிருப்தியேற்பட்டது.
இந்த விமர்சனங்களையடுத்து, கூட்டுப்படை தலைமை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். 1996 இல் யாழ்ப்பாண குடாநாட்டை இராணுவம் கைப்பற்றும்வரை அந்தப் பொறுப்பில் சொர்ணம் செயற்பட்டார். 1996 சூரியக்கதிர் நடவடிக்கைதான் சொர்ணத்திற்கு சரிவை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் தன்னை நிரூபிக்கவே முடியவில்லை. எல்லா களங்களிலும் சறுக்கினார்.
யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் 1995 இல் சூரியக்கதிர் நடவடிக்கை ஆரம்பமானது. அந்த பெருமெடுப்பிலான நடவடிக்கையை புலிகள் எதிர்கொள்ள முடியவில்லை. இயன்றவரை போரிட்டபடி பின்வாங்கினார்கள். இந்த சமரில் சொர்ணத்தின் திட்டங்கள் பயனளிக்கவில்லை. குறிப்பாக தென்மராட்சியை இராணுவம் கைப்பற்றிய விவகாரம்.
சொர்ணம்-பால்ராஜ்- தமிழ்ச்செல்வன்
அந்த சமயத்தில் ரவி என்பவர் யாழ்மாட்ட தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ரவி அறியப்பட்ட தளபதியல்ல. சூரியக்கதிர் நடவடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சிறப்பாக செயற்பட்டார் என, தென்மராட்சியில் யுத்தம் மையம் கொண்ட சமயத்தில் ரவி தளபதியாக்கப்பட்டார்.
ரவிக்கு வழங்கப்பட்டிருந்த படையணியை சரியான இடங்களில் நிறுத்தவில்லை. இதனால் இரவோடு இரவாக இராணுவம் சிக்கலில்லாமல் சாவகச்சேரிக்குள் நுழைந்தது. அனைவரும் வன்னிக்கு தப்பிச்செல்ல வேண்டியேற்பட்டது.
யாழ்ப்பாண தோல்விக்கான முழு பொறுப்பும் இரண்டுபேரின் தலையில் விழுந்தது. ஒருவர் ரவி. அவர் சாதாரண போராளியாக படையணியில் விடப்பட்டார். சிறிதுகாலத்தில் அமைப்பிலிருந்து விலகி சென்றுவிட்டார். அடுத்தவர் சொர்ணம். அவர் திருகோணமலை மாவட்ட தளபதியாக அனுப்பப்பட்டார்.
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 54 சாள்ஸ் அன்ரனிக்கும், பானுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம்… பெண் போராளிகளின் தலைமுடி வெட்ட விதுஷா எதிர்ப்பு!
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?
நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்திலேயே மாலதி படையணி சிறப்பு தளபதியாக இருந்த பிரிகேடியர் விதுஷா களைத்து விட்டார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் போர் உத்திதான் இதற்கு காரணம்.மேடான பகுதியை நோக்கி தண்ணீர் ஓடும் பாணியில் அமைந்த இராணுவத்தின் போருத்தியை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், மன்னார் களமுனையில் இன்னொரு போருத்தியை இராணுவம் பாவித்தது. அப்பொழுது நிலத்தை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமல்ல. நீண்ட போரை நடத்தி புலிகளின் ஆளணியை சேதமாக்குவதே திட்டம்.புலிகளின் ஆளணி பற்றிய கணக்கு துல்லியமாக இலங்கை பாதுகாப்புத்துறையிடம் இருக்கவில்லை. உண்மையை சொன்னால், வன்னியிலிருந்த மக்கள் தொகை பற்றிய சரியான கணக்கே அரசாங்கத்திற்கு தெரியாது. இந்த குழப்பத்தை புலிகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். வன்னி சனத்தொகை தெரிந்தால், அதற்கு அளவான உணவுப்பொருட்களைதான் அனுப்பி வைப்பார்கள். ஆளணியை அதிகரித்து காண்பித்து, உணவுப்பொருள்களை தமது பாவனைக்கு புலிகள் பாவித்தார்கள்.புலிகளின் ஆளணி தொடர்பாக இறுதிவரை இராணுவத்திடம் மிகை மதிப்பீடே இருந்தது. அண்ணளவாக 25,000 போராளிகள் இருக்கலாமென கணக்கிட்டார்கள். இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோத்பாய ராஜபக்ச ஆகியோர் அப்பொழுது இந்த தொகையைதான் பகிரங்கமாக சொன்னார்கள்.ஆனால் உண்மையில் புலிகளிடம் அவ்வளவு ஆள் பலம் இருக்கவில்லை. இவ்வளவு ஆட்பலம் இருந்தால், புலிகள் அந்த யுத்தத்தை சுலபமாக வென்றிருப்பார்கள்.புலிகளிடம் மொத்தமாக எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது தெரியுமா?யுத்தத்தின் இறுதியில் தகவல் கிடைத்து, 25,000 என சொன்னதற்காக கோத்தபாய ராஜபக்சவே இப்பொழுது வெட்கப்படுவார். யுத்தத்தின் இறுதி மாதங்களில், அரசியல்துறையினரிடம் பிரபாகரன் சொன்னது என்ன தெரியுமா?“என்னிடம் 25,000 போராளிகளை திரட்டித் தாருங்கள். நான் யுத்தத்தை வென்று தருவேன்“.கிழக்கை முழுமையாக இழந்து, வடக்கில் மட்டும் புலிகள் யுத்தத்தை எதிர்கொள்ள தொடங்கிய சமயத்தில், அவர்களிடம் 5,750- 6,250 வரையான போராளிகள்தான் இருந்தார்கள். நன்கு பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை இதுதான். கட்டாய ஆட்சேர்ப்பின் போது அதிகபட்சமாக 8,000 பேரை பிடித்து படையில் இணைத்திருந்தனர். இந்த 8,000 என்ற எண்ணிக்கை நிரந்தரமானதல்ல. ஒரு பக்கம் யுத்தத்தில் இவர்கள்தான் அதிகமாக இறந்தார்கள். மறுவளமாக, கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டவர்கள் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர்களை புலிகள் பிடித்துவர… ஓட என ஒரு சுற்றுவட்டத்தில் இவர்கள் இருந்தார்கள்.அதிலும், கட்டாயமாக பிடிக்கப்பட்ட பெண்கள் ஓர்மமாக போரிடமாட்டார்கள். மன்னாரில் பெண்புலிகளின் நிலையை BOX அடித்து, இராணுவத்தினர் அவர்களை உயிரோடு தூக்கிச்செல்ல ஆரம்பித்தனர். மன்னாரின் தள்ளாடியில் இருந்து 2007 செப்ரெம்பரில் படை நடவடிக்கையை ஆரம்பித்தபோதும், தள்ளாடிக்கு அடுத்த அடம்பன் நகரத்தை கைப்பற்ற படையினர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு மாதங்கள். யுத்தத்தின் இறுதிக்காலத்தில் புலிகளின் இறுக்கமான கோட்டைக்குள் இராணுவம் முன்னேறிய வேகத்தையும், இதனையும் ஒப்பிட்டு பார்த்தால் விடயத்தை புரிந்து கொள்வீர்கள்.2009 ஜனவரி 01ம் திகதி பரந்தன் சந்திக்கு 58வது டிவிசன் படையினர் வந்தனர். இதே படையணி ஜனவரி 15ம் திகதி தர்மபுரத்தை கைப்பற்றியது. ஜனவரி 28ம் திகதி விசுவமடுவை கைப்பற்றியது. புலிகளின் கோட்டைக்குள் எவ்வளவு விரைவாக முன்னேறியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.ஆனால் 2007 இல் மன்னாரில் 58வது டிவிசன் படை நடவடிக்கையை ஆரம்பித்த போது, நிலத்தை கைப்பற்றுவது முதலாவது நோக்கமாக இருக்கவில்லை. தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு புலிகளின் ஆளணியை சேதம் செய்வதே நோக்கம். முன்னரணில் இருந்து சிறிதுதூரம் நகர்ந்து, புலிகளின் முன்னரணை BOX அடித்து தாக்குதல் நடத்துவார்கள். பின்னர், பழைய நிலைகளிற்கே திரும்பி விடுவார்கள். பல மாதங்கள் நீடித்த இந்த தாக்குதலில் சுமார் 700 போராளிகள் மரணமானார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மாலதி படையணி பெண் போராளிகள்.2007 செப்ரெம்பரில் தள்ளாடியில் இருந்து நகர்வை தொடங்கிய 58வது டிவிசன் 2008 மே மாதம் அடம்பன் நகரத்தை கைப்பற்றியது. தள்ளாடியில் இருந்து வெறும் 9 கிலோமீற்றர் தொலைவிலேயே அடம்பன் உள்ளது. 9 கிலோமீற்றரிற்கு 9 மாதம்!இராணுவம் நிலத்தை பிடிக்க முயலவில்லை, தமது ஆளணியை சேதமாக்கவே முனைகிறதென்பதை சிறிது காலத்தின் பின்னரே புலிகள் புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் பின்வாங்கும் முடிவை எடுத்தனர்.தொடர்ந்து முன்னரணில் நிற்கும் பெண் போராளிகளும் களைத்திருந்தார்கள். முன்னரண் என்பது ஒரு காவலரண். அடுத்த காவலரணிற்கு செல்வதற்கு இடுப்பளவு ஆழத்தில் வெட்டப்பட்ட நீளமான பதுங்குகுழி பாதை. காவலரணிற்கு பின்னால் வெட்டப்பட்ட பதுங்குகுழிக்குள்தான் வாழ்க்கை. பெண்களிற்கு இயற்கை பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். சுகாதாரமாக இருக்க தண்ணீர் வசதிகள் எல்லாம் தேவை. ஆனால் முன்னரணில் நீண்டகாலம் நிற்கும் பெண் போராளிகளிற்கு இந்த வசதிகள் எல்லாம் கிடையாது. மூன்று நான்கு மாதங்களிற்கு ஒருமுறை அணிகள் மாற்றப்பட்டு ஒரு வாரமளவில் ஓய்வு வழங்கப்படும் வழக்கத்தை புலிகள் முன்னைய யுத்தங்களில் வைத்திருந்தார்கள். ஆனால் நான்காம் ஈழப்போரில் அது சாத்தியமில்லை. காரணம்- அதிக ஆளணி தேவையாக இருந்தது. மன்னாரிலிருந்து 58வது டிவிசன், வவுனியா பாலமோட்டையிலிருந்து 57வது டிவிசன், மண்கிண்டிமலையிலிருந்து 59வது டிவிசன் முன்னேற்றத்தை ஆரம்பித்திருந்தன. முகமாலை-நாகர்கோவில் முன்னரண் நிலையில் 55,53 டிவிசன்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தன.இலங்கை இராணுவம் இப்படி பிரமாண்ட தயாரிப்பில் பல முனை நகர்வை அதற்கு முன்னர் செய்தேயிருக்கவில்லை. இந்த நகர்வுகளை எதிர்கொள்ள அதிகமான போராளிகள் தேவை. அதனால் களமுனை அணிகளையும் மாற்றிவிட போதிய போராளிகள் இருக்கவில்லை. 2006 இல் மன்னாரில் முன்னரணிற்கு சென்ற மாலதி படையணி போராளிகள் காயம் அல்லது மரணம் அடையும்வரை களத்திலேயே நிற்க வேண்டும்.பள்ளமடு, ஆட்காட்டிவெளி களமுனைகள் கடுமையாக இருந்தன. வெட்டைவெளி. பகலில் எழுந்து நடமாடவே முடியாது. உடலில் தண்ணீர்பட வாரக்கணக்கில் செல்லும். இந்த முனையில் கணிசமானவர்கள் புதிய போராளிகள்.நான்காம் ஈழப்போரில் இராணுவம் பயன்படுத்திய சூட்டுவலு எப்படியானதென்பதை சொல்லத் தேவையில்லை. புலிகளை வீழ்த்துவதென்றால் சூட்டுவலுவை அதிகரிக்க வேண்டுமென்ற சாதாரண உத்தியைத்தான் கையாண்டது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அதென்ன சூட்டு வலு?இதை புரிய வைக்கிறோம். ஏழு பேர் கொண்ட அணி இருக்கிறதென வைப்போம். ஆளுக்கு 120 ரவையுடன் ஒரு ஏகே துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு இருக்கிறதென வைப்போம். இதே போன்ற இன்னொரு அணியில் ஐந்து பேரிடம் 120 ரவையுடன் ஏகே துப்பாக்கி, இரண்டு பேரிடம் ஆளுக்கு 600 ரவைகளுடன் எல்.எம்.ஜி, கையெறி குண்டுகள் இருந்தால்- இரண்டாவது அணிதான் சூட்டுவலுவில் வலிமையான அணி. இந்த சிம்பிள் உத்தியை இராணுவம் கையிலெடுத்தது.மூன்று பேரை கொண்ட கொமாண்டோ செக்சன் (commando section)- செக்சன் என்பது இராணுவ அணி பிரிவை குறிப்பது. கொமாண்டோ செக்சன், செக்சன், பிளாட்டுன், கொம்பனி, ரெஜிமென்ற் என விரிந்து செல்லும்- ஒவ்வொரு கொமாண்டோ செக்சனிற்கும் ஒவ்வொரு எல்.எம்.ஜி வழங்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் தேவைக்கும் அதிகமான கனரக ஆயுதங்கள் வழங்கப்பட்டது. வான்புலிகளிற்கு எதிராக பயன்படுத்த இந்தியா வழங்கிய Anti Aricraft Artillery ரக கனரக துப்பாக்கிகளையெல்லாம் தரைச்சண்டைக்கும் ஒவ்வொரு பிரதேசத்திலும் தாராளமாக பாவித்தார்கள். இதனால் எதிர்முனையில் இருந்த புலிகள் தலையை தூக்கவே முடியவில்லை.புலிகளின் ஓயாத அலைகள் 1,2,3 வெற்றிகளிற்கு காரணமும் சூட்டுவலுதான். அப்பொழுது 81,120mm மோட்டார்கள், 122,152 mm ஆட்றிகளாலும் புலிகளின் சூட்டுவலு அதிகரித்திருந்தது. அப்பொழுது புலிகள் 12.5,12.7,14.5 mm கனோன்களையெல்லாம் தாராளமாக பாவிக்க ரவை இருந்தது. கப்பல்கள் வர முடியாமல் போக, புலிகளின் சூட்டுவலு தாழ்ந்தது.ஆயுதங்கள் இல்லை, போராளிகள் இல்லை, இருப்பவர்கள் அனுபவமற்ற புதியவர்கள், அவர்களின் இழப்புக்கள் என மாலதி படையணி தளபதி விதுசா மிகவும் மனமுடைந்து போனார். கட்டாயமாக பிடிக்கப்பட்டு களத்திற்கு கொண்டுவரப்படும் பெண்களால் யுத்தத்தை வெல்ல முடியாது, மாறாக இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதே நடக்குமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் புலிகளின் உயர்மட்டத்தில் யாரும் விதுசாவின் கருத்தை கணக்கில் எடுக்கவில்லை.விதுசா கறாரான தளபதியாக இருந்தாலும், பெண்களை புரிந்து கொண்டவர். அதனால்தான் கட்டாயமாக பெண்களை களமுனைக்கு கொண்டு வருவதை எதிர்த்தார்.விதுசாவின் மனநிலையையும், புலிகளின் நெருக்கடியையும் புரியவைக்கும் சம்பவமொன்று நடந்தது. 2009 தொடக்கத்தில் தளபதிகளிற்கிடையிலான கூட்டம் நடந்தது. அப்பொழுது பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி அதிகாரமுடையவராக மாறிவிட்டார். சாள்ஸ் எப்படி விடுதலைப்புலிகளிற்குள் நுழைந்து, அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டார் என்பதை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது வாசகர்களிற்கு நினைவிருக்கலாம். அப்பொழுது குறிப்பிட்ட சம்பவம்தான். இப்பொழுது மீளவும் குறிப்பிடுகிறேன்.இனி புலிகளால் யுத்தத்தை வெல்ல முடியாதென்பது தெரிந்தோ என்னவோ, களமுனையில் இருந்து தப்பியோடும் போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. குறிப்பாக புதிதாக சேர்க்கப்படும் பெண் போராளிகள் களத்தில் நிற்க முடியாமல் தப்பியோடுவது அதிகரித்திருந்தது. இதை குறிப்பிட்டு தளபதி பானு பேசினார். அவர்கள் தப்பியோடுவதாலேயே இராணுவம் விரைவாக முன்னேறுகிறது என்றார். அந்த கூட்டம் சாள்ஸ் தமையிலேயே நடந்தது. தளபதி பானுவும், சாள்ஸ் அன்ரனியும் மிக நெருக்கமானவர்கள். சாள்ஸ் அன்ரனி என்ன செய்தாலும், அது நன்றாக இருக்கிறதென பானு பாராட்டுவார்.
புலிகளின் கனோன் ஒன்றுசாள்ஸ் அன்ரனி பிறப்பதற்கு முன்னரே பானு புலிகளில் இருக்கிறார். இருவரும் நெருக்கமான பின்னர் “பானு ஐயா“ என சாள்ஸ் அழைக்க தொடங்கி, சுருக்கமாக “பானுயா“ என ஐ உச்சரிப்பு வராமல், ஒரு செல்லப்பெயரில் அழைப்பார்.பெண் போராளிகள் பற்றிய பானுவின் குற்றச்சாட்டையடுத்து, மகளிர் தளபதிகளான விதுசா, துர்க்காவை குற்றம்சொல்லும் தோரணையில் சாள்ஸ் பேசிக்கொண்டிருந்தார். தப்பியோடுபவர்களை தடுக்க முடியாது என மகளிர் தளபதிகள் சொல்ல, அதை சாள்ஸ் கணக்கில் எடுக்கவில்லை. இந்த எதிரும் புதிருமான பேச்சு நீடிக்க, ஒரு கட்டத்தில் சாள்ஸ் ஒரு அதிரடியான உத்தரவை இட்டார்.“புதிதாக இயக்கத்திற்கு பிடிக்கும் பெண்கள் அனைவருக்கும் மொட்டை அடியுங்கள். அதன்பின்னர் யாரும் தப்பியோட முடியாது“சாள்ஸ் அன்ரனியின் உத்தரவுகள் கொஞ்சம் ஏடாகூடமாகத்தான் இருக்கும். தளபதிகள் மட்டத்திலேயே கொஞ்சம் அப்படி இப்படி அவரை இரகசியமாக நக்கலடிப்பார்கள். மேல்மட்ட போராளிகள் புலிகேசி (இம்சை அரசன் 23ம் புலிகேசி வெளியான சமயத்தில்தான் சாள்ஸ் அன்ரனியும் பொறுப்பான பதவிகளிற்கு வந்தார்) என தமக்குள் சாள்சிற்கு பட்டப்பெயர் வைத்திருந்தனர். ஆகவே, சாள்ஸ் இப்படி உத்தரவிட்டது கூட்டத்தில் இருந்தவர்களிற்கு ஆச்சரியம் அளித்திருக்காது!
சாள்ஸின் உத்தரவை விதுசா ஏற்கவில்லை. அந்த கூட்டத்தில் இருந்த மூத்த தளபதியொருவருடன் பின்னர் பேசும்போது ஒரு விடயத்தை சொன்னார். “வழக்கமாக இப்படியான கூட்டங்களில் தளபதி விதுசா சென்ரிமென்ராக பேசுபவர் கிடையாது. சில சமயங்களில் சின்னச்சின்ன யோசனைகள் சொல்வாரே தவிர, ஒரேயடியாக இப்படி எதிர்க்கமாட்டார். அன்று கடுமையாக எதிர்த்தார். சில சமயங்களில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தால், அந்தப் பெண்கள்தான் இராணுவத்திடம் சிக்குவார்கள் என நினைத்திருக்கலாம்“ என்றார்.
தளபதி விதுஷாதலைமுடி பெண்களின் வாழ்வில் அத்தியாவசியமானது, மொட்டையடிப்பது பெண்களை உளரீதியிலும் பாதிக்கும் என விதுசா அந்த கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார். சோதியா படையணி தளபதி துர்க்காவும் ஓரளவு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாக பானு பேசினார். மொட்டையடித்தால்தான் பெண்கள் ஓடமாட்டார்கள் என்றார். “பானுயாவே சொன்னால் பிறகென்ன… பிடிக்கிற ஆட்களுக்கெல்லாம் ஒட்ட மொட்டையடியுங்கள்“ என சாள்ஸ் அன்ரனி உத்தரவிட்டார்.அன்றைய கூட்டம் முடிய விதுசா அதிருப்தியுடன் எழுந்து சென்றார்.அடுத்ததாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா?(தொடரும்)