Friday, 22 February 2019

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 36 பொட்டம்மானின் காலில் விழுந்து கதறியழுத கருணாவின் தளபதிகள்

கருணாவின் பிடியிலிருந்து விடுதலைப்புலிகளின புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நீலன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலையாகுவார்கள் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தபோதும், கருணா தரப்பு அதை மீறியது.

அதாவது, தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் போராளிகளை விடுவிப்பேன் என வாய்மூல உத்தரவாதத்தை இடைத்தரகர்கள் ஊடாக விடுதலைப்புலிகளிற்கு கருணா வழங்கியதற்கு மறுநாள் காலையில், அவர்களின் பிடியிலிருந்து முக்கிய புலிகளின் தளபதி கொல்லப்பட்டார்.

கருணா தப்பியோடிய பின்னர், மருதம் முகாமிற்குள் நுழைந்து புலிகள் தேடுதல் நடத்தியபோது, சிறிய பதுங்குகுழியொன்றிற்குள் நீலனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கருணாவுடன் நெருக்கமாக இருந்து, கருணா தப்பியோடிய பின்னர் புலிகளுடன் இணைந்து கொண்ட போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நீதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கருணா குழுவுடன் எந்த இணக்கப்பாடும் சரியாக வராதென புலிகள் முடிவெடுத்த கணம் அது.

இதற்கு பின்னர் என்ன நடந்ததென்பதை நாம் எழுத வேண்டியதில்லை. இரு தரப்பும் மாறிமாறி சன்னதமாடியதில் கிழக்கில் தொடங்கிய இரத்த ஆறு, கொழும்புவரை ஓடியது. நாளொரு கொலை, கடத்தல் என நாடே அதிர்ந்தது.

மட்டக்களப்பில் இருந்து தனக்கு மிக நெருக்கமானவர்கள், முக்கிய தளபதிகளுடன் கொழும்பின் புறநகர் பகுதிக்கு கருணா தப்பிச்சென்றார். ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இதற்கான ஏற்பாடுகளை செய்தார். கொழும்பில் சில வாரங்கள் தங்கியிருந்த கருணா, பின்னர் எங்கிருக்கிறார் என்பதை புலிகளால் அறிய முடியாமல் போனது.

கருணாவுடன் தப்பிச் சென்றவர்களின் ஒரு தொகுதியினர்- சாதாரண போராளிகள்- மின்னேரியா இராணுவ முகாமில் தங்கியிருந்தனர்.

தமது உயர்மட்ட தொடர்புகளின் ஊடாக புலிகளின் புலனாய்வுத்துறை முழு மூச்சில் கருணாவை தேடியபோது, ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது.

கருணா இந்தியாவில் தங்கியிருக்கிறார் என்பதே அந்த செய்தி!

விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து வந்த தளபதியை இந்திய புலனாய்வு அமைப்பான றோ அதிகாரிகள் நேர்காணல் செய்ய விரும்பியிருந்தார்களாம். இதையடுத்து, தமிழகத்திலுள்ள றோவின் இரகசிய முகாம் ஒன்றில் கருணா தங்கவைக்கப்பட்டு, றோ அதிகாரிகளால் தகவல்கள் பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கிடைத்த செய்தி, புலிகளை உண்மையில் கொஞ்சம் பயமுறுத்தியது.

மட்டக்களப்பில் இருந்து வெளியேறிய பின்னர், எந்தவிதமான இராணுவ செயற்பாட்டிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட மாட்டேன், புலிகளுக்கு எதிராக செயற்படமாட்டேன், வெளிநாடு சென்றுவிடுவேன் என வாக்குறுதி வழங்கிவிட்டு சென்ற கருணா, எதற்காக இந்திய புலனாய்வு அமைப்பின் இரகசிய முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்?

கருணா தமக்கு வழங்கிய உத்தரவாதம், பாதுகாப்பாக தப்பிச்செல்வதற்கான சூழலை ஏற்படுத்த கையாண்ட உத்தியென்பதை புலிகள் புரிந்து கொண்டார்கள். இந்த சமயத்தில் இலண்டனில் இருந்த தமது தொடர்பாளர்கள் மூலம், இந்தியாவிற்கு தமது அதிருப்தியை புலிகள் தெரிவித்தனர். எனினும், கருணா தமது நாட்டில் இல்லையென இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதற்குள் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். கருணாவின் இளநிலை தளபதிகள் சிலர்- ஜிம்கெலி தாத்தா, ராபர்ட் உள்ளிட்டவர்கள்- விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இன்றும் வைக்கப்படுகிறது. அவர்கள் சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது உண்மைதான்.

ஆனால், மட்டக்களப்பு தளபதி ரமேஷால் சுட்டுக்கொல்லப்படவில்லை. கருணாவுடன் சதி முயற்சியில் ஈடுபட்ட பின்னர், விடுதலைப்புலிகளுடன் ரமேஷ் இணைந்தார், பிரிவில் ரமேஷின் பங்கும் உள்ளது, கருணாவின் தளபதிகளை உயிரோட விட்டால் தனது பங்கு வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே ரமேஷ் அவர்களை சுட்டுக் கொன்றார் என்ற அப்பிராயம் உள்ளது. உண்மையில் அது தவறானது.

அப்படியானால் என்ன நடந்தது?

கருணாவுடன் இருந்து தப்பித்து விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த போராளிகள் மட்டக்களப்பில் வைத்தே அவசரஅவசரமாக புலனாய்வுதுறை போராளிகளால் வாக்குமூலம் பெறப்பட்டனர். இதற்காக பெரியதொரு புலனாய்வுத்துறை அணி மட்டக்களப்பிற்கு சென்று இரவுபகலாக இயங்கியது. கருணா தப்பிச்செல்லும் வரை அவரது இளநிலை தளபதிகள் செயற்பட்ட விதம் குறித்து போராளிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர். நீதன் அணியை கைது செய்து, தடுத்து வைத்து, கொலை செய்தது, போராளிகளை சிதறடித்தது என்பவற்றில் இளநிலை தளபதிகளின் முக்கிய பங்கிருப்பது தெரியவந்தது.

ஆனால், அவர்கள் சரணடைய நடந்த பேச்சுவார்த்தையில் உயிர் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அது ரமேஷால் வழங்கப்பட்டிருந்தது. கருணாவுடன் இருக்க கொள்கைரீதியில் உடன்படாத, இனியும் இருக்க வாய்ப்பில்லாத தளபதிகள் அவரிலிருந்து வெளியேறியிருந்தனர். இடைத்தரகர்கள் மூலமும், தொலைத்தொடர்பு கருவிகள் ஊடாகவும் புலிகளுடன் அவர்கள் பேசி சரணடைந்தனர். இதில் ராபர்ட், ஜிம்கொலி தாத்தா உள்ளிட்ட பன்னிரண்டு இளநிலை தளபதிகள் புலிகளால் ஒரே சந்தர்ப்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் புலிகளிடம் சரணடைந்ததும் மருதம் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டு, சிறைக்கைதிகளாகவே அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுதே அவர்களிற்கு தமக்கு நடக்கவிருந்தது தெரிந்திருக்கும். மருதம் முகாமிற்கு பொட்டம்மான், சொர்ணம், பானு, ரமேஷ் உள்ளிட்ட தளபதிகள் ஒருமுறை சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுடன் பேசினார்கள்.

அந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை, அவர்கள் வேறுவிதமாக கையாளப்பட்டிருக்கலாமென்ற அபிப்பிராயம் இந்த கட்டுரை ஆசிரியருக்கு இருப்பதால், அந்த மரணங்கள் தொடர்பில் துல்லியமாக பேசவில்லை. அவர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்துடன் தம்மை அர்ப்பணித்து போராட வந்த, போராடியவர்கள். அந்த மரணங்கள் ஒரு விபத்துத்தான்.

கொல்லப்படப் போகிறோம் என்பதை தெரிந்ததும், கருணாவின் மூத்த தளபதிகளில் இருவர், அங்கு வந்த புலிகளின் தளபதிகளின் முன்னால் நிலத்தில் வீழ்ந்து கதறி அழுதனர். தாம் கொண்ட கறையை கழுவி, அமைப்பின் மீதான விசுவாசத்தை நிரூபிக்க சந்தர்ப்பமொன்றை தருமாறு கேட்டார்கள். ஆனால், அந்த சந்தர்ப்பம் அவர்களிற்கு வழங்கப்படவில்லை.

அவர்களிற்கு உயிருத்தரவாதம் வழங்கியது ரமேஷே தவிர, மரணதண்டணைக்கான உத்தரவிடும் அல்லது மன்னிக்கும் அதிகாரமுடன் கிழக்கிலிருந்த ஒரே ஆள் பொட்டம்மான்தான்!

இந்த சமயத்திலேயே கொழும்பில் தங்கியிருந்த கருணா அணியினரின் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர் புலிகள். கருணா அணியில் இருந்தவர்கள் அனைவருமே அங்கு விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல. சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அங்கு சிக்கிகொண்டவர்கள். சிலர் தப்பிவர வழியில்லாமல் அங்கிருந்தவர்கள். இன்னும் சிலர், விடுதலைப்புலிகளின் ஆட்கள். அவர்கள் இரகசியமாக கருணா குழுவிற்குள் ஊடுருவியிருந்தனர்!.

தப்பிவர வழியில்லாமல் கருணா குழுவிற்குள் சிக்கியிருந்தவர்களை புலிகள் இரகசியமாக தொடர்புகொண்டு, தமது பக்கம் இழுத்தெடுத்தனர். சும்மா இழுத்தெடுக்கவில்லை. நடுஇரவில் கருணா குழுவினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, புலிகளிடம் தப்பிவர தொடங்கினார்கள்.

கருணாவின் சகோதரரான றெஜி இப்படித்தான் கொல்லப்பட்டார். கொழும்பு கொட்டாவ பகுதியில் கருணா அணியின் இரகசிய மறைவிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவர்களின் நிதி பொறுப்பாளராக இருந்த குகனேசன் என்பவர் உள்ளிட்ட எட்டுப்பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் கருணா அணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்பத்தியது. நிம்மதியில்லாத நிலைமையை ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் கருணா இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, பொலன்னறுவ எல்லையிலுள்ள மின்னேரியா முகாமில் தங்கியிருக்கிறார் என்ற தகவல் புலிகளிற்கு சென்றது. இதன்பின்னரே, வெலிகந்த பகுதிகளில் இராணுவ முகாமிற்கு அருகில் கருணா அணி பிரமாண்ட முகாம்களை அமைத்து தங்கியிருக்க தொடங்கியது. இப்படி பிரமாண்ட முகாமாக இருந்தால், நடு இரவில் சுட்டுவிட்டு செல்வதை தவிர்க்கலாமென நினைத்தார்கள். இதுதான் கருணா பிரிவு, அதன்பின் நடந்த சம்பவங்களின் முழுமையான விபரம்.

இந்த கதையுடன் தொடர்புடைய இன்னொரு பெரிய பிளாஷ்பேக் உள்ளது. அதையும் சொன்னால்தான் கருணா விவகாரம் முழுமையடையும். இதற்காக உங்களை கருணாவின் ஆரம்ப காலத்திற்கு அழைத்து செல்கிறோம்.

1983ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தவர் கருணா. இந்தியாவின் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு, இலங்கைக்கு திரும்பினார். சிறிதுகாலத்தில் மட்டக்களப்பிலிருந்து பத்து வரையான போராளிகளை அழைத்து தன்னுடன் வைத்திருந்தார். அதில் கருணாவும் ஒருவர்.

தன்னுடைய மெய்க்காவலர் அணியில் உள்ள திறமையானவர்களிற்கு பெரிய பொறுப்புக்கள் வழங்குவது பிரபாகரனின் வழக்கம். கருணாவில் ஏற்பட்ட நம்பிக்கை, அவரின் செயற்பாடுகளில் உண்டான திருப்தியெல்லாம் சேர, அமைப்பில் சேர்ந்து வெறும் மூன்றரை வருடத்தில் அவரை மாவட்ட தளபதியாக்கினார். அந்த சமயத்தில் மட்டக்களப்பில் குமரப்பா, ராம், றீகன், அன்ரனி உள்ளிட்ட பல தளபதிகள் இருந்தனர். ஆனால், கருணாவை மட்டக்களப்புக்கு தளபதியாக நியமிக்க பிரபாகரன் முடிவெடுத்தார். 1986ஆம் ஆண்டின் பிற்பகுதி. தன்னுடன் நின்ற கருணாவை மட்டக்களப்பிற்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்- சும்மா அல்ல, தளபதியாக!

அனுப்பும்போதே, மட்டக்களப்பு தளபதியாக கருணா செயற்படுவார் என பிரபாகரன் அறிவித்திருந்தார். அப்போது குமரப்பா மட்டக்களப்பில் தளபதியாக இருந்தார். கருணாவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவர் சரியாக செயற்படுகிறாரா என்பதை அவதானிக்க சிறிதுகாலம் அங்கேயே தங்கியிருந்தார். ஏனெனில் கருணா புதியவர். பல சீனியர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் கருணாவிற்கு ஒத்துழைக்காமல் விடலாம். அல்லது, மாவட்ட தளபதியாக செயற்பட்டு அனுபவமில்லாத கருணா ஆரம்பத்தில் தடுமாறலாம். இதையெல்லாம் யோசித்துத்தான், குமரப்பாவை மட்டக்களப்பில் தங்கியிருக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். கருணா தனித்து செயற்படுவார் என குமரப்பா உறுதிசெய்த பின்னர்தான் யாழ்ப்பாணம் வந்தார்.

கருணா மட்டக்களப்பிற்கு தளபதியாக செயற்பட்ட காலத்தில் அம்பாறை தளபதியாக இருந்தவர் அன்ரனி. (இவரது பெற்றோர் கனகசூரியம்- சௌந்தரி தம்பதியினர் கல்முனை 1ம், 2ம் வார்ட் உறுப்பினர்களாக இருந்தவர்கள்) 5வது பயிற்சிமுகாமில் பயிற்சியெடுத்தவர். பயங்கர திறமைசாலி. கிழக்கு தளபதியாக அவர் வருவார் என அப்போது புலிகளின் தளபதிகள் பலரிடம் ஒரு அபிப்பிராயம் இருந்தது. கிட்டு அதை பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது துரதிஸ்டம்- அன்ரனியை விட கருணாவில் பிரபாகரனிற்கு சற்று கூடுதல் நம்பிக்கையிருந்தது. பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் கருணா இருந்தார். அன்ரனி அவ்வளவு நீண்டகாலம் பிரபாகரனுடன் நெருங்கியிருக்கவில்லை.

கிழக்கின் தளபதியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட, அன்ரனியின் அதிர்ஸ்டமின்மை, அவரை 1990 இல் யாழ்ப்பாணத்திற்கு அழைத்தார் பிரபாகரன். அன்ரனி யாழ்ப்பாணம் வந்தபின்னர், மட்டு-அம்பாறை தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவிற்கு அப்படியொரு பொறுப்பை வழங்குவதற்காகவே, அன்ரனி யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாம் ஈழப்போரில், வசாவிளான் முகாமிலிருந்த இராணுவம் மேலும் முன்னேறாமல் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அன்ரனி பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1990 ஒக்ரோபரில் அந்த பகுதியில் மரணமானார். அவருக்கு புலிகள் மேஜர் தரநிலை வழங்கினார்கள்.

அந்த பகுதி மக்களுடன் அவர் நெருக்கமாக பழகியதால், அங்குள்ள ஆஸ்பத்திரி வீதிக்கு அன்ரனி வீதியென மக்கள் பெயரும் சூட்டினர். அன்ரனி கிழக்கிலிருந்து வடக்கிற்கு வந்தது, கருணாவிற்கு சாதகமாகவே அமைந்தது.

(தொடரும்)

No comments:

Post a Comment