பொட்டம்மான் கிழக்கு தளபதியாக தற்காலிகமாக பணியாற்றிய சமயத்தில், மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக கருணா செயற்பட்டார், திருகோணமலை தளபதியாக சஞ்சய் செயற்பட்டார் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம்.
பொட்டம்மான் கிழக்கு தளபதியாக செயற்பட்ட காலத்தில், மட்டக்களப்பில் ஏற்கனவே செயற்பட்டு கொண்டிருந்த போராளி கண்ணனுடன் நெருக்கமாகி விட்டார். கிழக்கின் ஒரு முக்கிய போராளியாக கண்ணனும் இருந்தார். கண்ணனின் போர்க்கள திறமை பொட்டம்மானிற்கு பிடித்து விட்டது.
ஆனால், மட்டக்களப்பு தளபதியாக கருணாவை நியமிப்பதென பிரபாகரன் பல மாதங்களின் முன்னரே திட்டமிட்டு, அதற்கேற்ப கருணாவை தயார்படுத்தி வந்தார்.
புதியவர்களாக கருணா. சஞ்சையை கவனிக்கவே பொட்டம்மானை மட்டக்களப்பிற்கு அனுப்பினார் பிரபாகரன். யார் தளபதி என பிரபாகரன் எடுத்த முடிவை பொட்டம்மானால் மாற்றம் செய்ய முடியாது. ஆனால் கண்ணனை பொட்டம்மானிற்கு பிடித்திருந்ததால், கருணாவிற்கு தெரியாமலே கண்ணனின் மூலம் சில விசயங்களை பொட்டம்மான் செய்தார்.
கண்ணனின் சகோதரிமுறையானவருடன் அந்த காலத்தில்தான் பொட்டம்மானிற்கு காதல் உண்டானது.

கண்ணனை தளபதியாக்க பொட்டம்மான் விரும்புகிறார், முயற்சிக்கிறார் என்றுதான் கருணா நினைத்தார். அதனால் இயல்பாகவே கண்ணன் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.
பொட்டம்மான் யாழ்ப்பாணம் வந்த சிறிதுநாளின் பின்னர், மட்டக்களப்பிலிருந்து ஒரு அறிவித்தல் புலிகளின் தலைமைக்கு சென்றது. “இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலில் கண்ணன் மரணமடைந்து விட்டார்“ என்பதே அந்த தகவல்.
புலிகள் இதில் சந்தேகப்படவில்லை. உண்மையான பதுங்கித்தாக்குதல் என்றுதான் நினைத்தனர். ஆனால் பொட்டம்மான் மட்டும் இதில் ஏதோ சம்திங் இருப்பதாக நினைத்தார்.
இந்திப்படைகள் அப்பொழுது உள்ளூரில் சில முக்கிய சோஸ்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். புலிகளின் நடவடிக்கைகள், அறிவித்தல்களை மொனிட்டர் பண்ணி, அதை இந்தியப்படைக்கு சொல்வதெ அவர்களின் வேலை.

“இந்திப்படையின் பதுங்கித்தாக்குதல் வெற்றியளித்துள்ளது, நேற்றை உங்களின் தாக்குதலில் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரே மரணமாகியுள்ளார்“ என அவர்களிடம் இருந்து ஒர தகவல் வந்தது. இந்த தகவல் இந்தியப்படைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் அவர்கள் அப்படியொரு தாக்குதலையே செய்யவில்லையே!
அப்படியானால் யார் தாக்கியது?
அப்பொழுது மட்டக்களப்பில் ரெலோ, புளொட் இரண்டும் இந்தியப்படைகளுடன் நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தாக்கினார்களா என இந்தியப்படை கேட்க, அவர்களிற்கும் தலைசுற்றியது.

அதன்பின்னரே பொட்டம்மான் இந்த விசயத்தில் தீவிர அக்கறை காண்பித்தார். மட்டக்களப்பின் ஏனைய சில முக்கியஸ்தர்களை அழைத்து பேசியபோது, அவருக்கு கிடைத்ததெல்லாம் அதிர்ச்சி தகவல்கள்!
ஒரு தாக்குதல் ஏற்பாடு செய்து, கண்ணன் எதிர்பாராத நேரத்தில் பின்னாலிருந்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என கருணாவிற்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள். பொட்டம்மானின் சந்தேகம் சரிதான். கண்ணன் இந்தியப்படைகளுடனான மோதலில் இறக்கவில்லை, துரோகத்தால் அவர் வீழ்த்தப்பட்டிருந்தார்!

நேற்றைய பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்- திருகோணமலை தளபதியாக நியமிக்கப்பட்ட சஞ்செய் பற்றி. அவர் பற்றி சம்பந்தமில்லாவிட்டாலும் கொஞ்சம் அதிகமாக விபரம் தந்திருந்தோம். காரணம்- இப்பொழுது அவரைப்பற்றிய ஒரு தகவல் தருவதற்காக!
கருணா, சஞ்செய் ஆகிய இருவரையும் கண்காணிப்பவராக பொட்டம்மான் கிழக்கில் சிறிதுகாலம் செயற்பட்டுவிட்டு, அவர்கள் தனியாக செயற்படுவார்கள் என்ற நிலைமை உருவான பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்துவிட்டார். அப்பொழுது-1988 இல் ஒரு சம்பவம் நடந்தது.
இரண்டு மாவட்டங்களிற்கும் எல்லையோரமாக உள்ள இந்திய படைமுகாமொன்றை தாக்குதவற்கு சஞ்சய் திட்டமிட்டார். அதற்கான வேவு தரவுகளை திரட்ட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில், கருணாவும் இந்தியப்படை முகாமொன்றை தாக்க திட்டமிட்டார். அது எந்த முகாம் தெரியுமா?
திருகோணமலை மாவட்ட தளபதி சஞ்சய் வேவு பார்த்த அதே முகாம்தான்!
இந்த விளையாட்டில் முந்திக்கொண்டது கருணா. திடீரென ஒருநாள் முகாம் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றிவிட்டார். அது அவ்வளவாக பலப்படுத்தப்பட்டிருக்காத முகாம். இந்த தாக்குதல் வெற்றிகரமாக அமையுமென திருகோணமலை மாவட்டக்காரர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கருணா முந்தி விட்டார்.
தாங்கள் வேவு பார்த்த முகாமை கருணா தாக்கியது சஞ்சயை கடும் கோபமடைய வைத்தது. உடனடியாக கருணாவை தொடர்புகொண்டு, நேரில் சந்திக்க வேண்டுமென்றால். அடுத்த சிலநாட்களில் மட்டக்களப்பு எல்லைக்கிராமமொன்றில் இரண்டு தளபதிகளும் சந்தித்து கொண்டனர்.
நாங்கள் வேவு பார்த்த முகாம் மீது எப்படி தாக்குவீர்கள் என சஞ்சய் எகிறி விழுந்தார். கரணாவும் ஏதோ பேச- சஞ்சய், கருணா சந்திப்பு கடும் வாய்த்தர்க்கமாகியது. வாய்த்தர்க்கத்தின் உச்சத்தில் சஞ்சய் தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை உருவியெடுத்து, கருணாவின் தலையில் வைத்தார்.
கருணா ஆடாமல் அசையாமல் இருந்தார். பின்னர் தனது இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலை கழற்றினார்.
(தொடரும்)
No comments:
Post a Comment