Friday, 22 February 2019

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 56 சொர்ணத்தின் திருமணம்!

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 56 சொர்ணத்தின் திருமணம்!:

சொர்ணத்தின் முதலாவது வீழ்ச்சி சாவகச்சேரியில் நிகழ்ந்ததை கடந்த வாரம் பார்த்தோம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டாவது வீழ்ச்சியும் சாவகச்சேரியில்தான் சொர்ணத்திற்கு நிகழ்ந்தது. அதை தொடரும் பகுதிகளில் பார்க்கலாம். சொர்ணம் குறித்த கடந்த பகுதியில், ஏற்கனவே தமிழ்பக்கத்தில் வெளியான சில பகுதிகளில் வெளியான சம்பவங்கள் இருந்ததால், கூறியது கூறல் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பல வாசகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
சொர்ணம் குறித்து, தமிழ்பக்கம் ஏற்கனவே ஒரு தொடரை வெளியிட்டிருந்தது. மினி தொடரிலும் சில சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். அதனால், “பழையதை போன்ற உணர்வு“ வாசகர்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இனி வரும் பகுதிகளில் அதை கவனத்தில் கொள்கிறோம். சுட்டிக்காட்டிய வாசகர்களிற்கு நன்றி.
சொர்ணத்திற்கும் பிரபாகரனிற்குமிடையில் இருந்த பிணைப்பை கடந்த இதழ்களில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், சொர்ணத்தின் வாழ்வுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டிருந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தை ஏற்கனவே, சொர்ணம் குறித்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். புதிய வாசகர்களிற்காகவும், சம்பவ தொடர்ச்சிக்காகவும் குறிப்பிடுகிறோம்.
சொர்ணம் இம்ரான்- பாண்டியன் படையணியின் தளபதியாக செயற்பட்டார். பின்னாளில் அந்த பொறுப்பை வகித்த கடாபி (ஆதவன்) பிரபாகரனின் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தார். அவருக்கு அடுத்த நிலையில் செல்லக்கிளி என்பவர் இருந்தார். இவர் மட்டக்களப்பை சேர்ந்தவர். தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.
சொர்ணம் இம்ரான்- பாண்டியன் படையணியிலிருந்து மாற்றப்பட இருந்தார். அடுத்தநிலை தளபதிகளை வளர்க்க புதிய தளபதி அவசியம். அடுத்தது, மாத்தையா விவகாரம். மாத்தையா விவகாரத்தின் பின் புலிகள் முழுமையாக தங்களை மறுசீரமைத்தனர். சொர்ணத்தின் மாற்றம் சந்தேகத்தின் பாற்பட்டதல்ல. அந்த பொறுப்பிலிருப்பவரும் மாற்றப்பட வேண்டுமென்ற விதியை அப்போதுதான் உருவாக்கினார்கள்.
மாத்தையா விவகாரத்தின் போது பிரபாகரனின் பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்தவர் சொர்ணம். பிரபாகரனின் தொலைத்தொடர்பாளர் செங்கமலம் போன்றவர்கள் மாத்தையாவுடன் தொடர்பில் இருந்த தகவல் வந்ததும் சொர்ணம் ஆடிப்போய் விட்டார். பிரபாகரனின் பாதுகாப்பு உறுப்பினர்கள் வரை மாத்தையா ஊடுருவி விட்டார் என்றதை அறிந்ததும் சொர்ணம் ஆடிப்போய் விட்டார். பிரபாகரனை பாதுகாக்க முடியுமா என்ற சந்தேகமும், பயமும் அவரை ஆட்டுவித்தது. நேராக பொட்டம்மானின் முகாமிற்கு சென்றார். கதிரையில் உட்கார்ந்திருந்த பொட்டம்மானின் காலைப் பிடித்து அழத் தொடங்கிவிட்டார். பொட்டம்மான் ஆறுதல் சொல்லி அவரை தேற்றியது தனிக்கதை. இது சொர்ணத்தின் விசுவாசத்தின் சாட்சி.
சொர்ணம் இடமாற்றம் செய்யப்பட்டால் அடுத்தது யார் என்ற கேள்வியிருந்தது. கடாபிதான் அடுத்த தெரிவு. கடாபிக்காகத்தான் சொர்ணத்தை மாற்றும் முடிவை பிரபாகரன் எடுத்தார். ஆனால் கடாபியுடன் போட்டியிட இன்னொருவர் விரும்பினார். அது செல்லக்கிளி. பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றால், இலகுவாக அந்தப்பொறுப்பை எடுக்கலாமென நம்பினார்.
செல்லக்கிளி 1986 இல் மட்டக்களப்பில் பயிற்சி பெற்றவர். இந்திய இராணுவ காலம் முதல் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தவர். பிரபாகரனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலராகவும் செயற்பட்டவர்.
போட்டியில் கடாபி தன்னைவிட முன்னிலையில் இருப்பது செல்லக்கிளிக்கும் தெரியும். அதனால் குறுக்குவழியில் அதனை அடைய முயன்றார்.
பிரபாகரனின் அன்றாட வழக்கங்களில் ஒன்று காலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி. அப்போது கொக்குவிலில் பிரபாகரனின் முகாம் இருந்தது. இது 1994 இல் நிகழ்ந்தது.
காலை உடற்பயிற்சியின் பின்னர் நன்றாக நீரருந்துவார். அப்படித்தான் ஒருநாள் நடைப்பயிற்சியின் பின் நீரருந்த விரும்பினார். அவரது வீட்டில் நின்ற போராளியொருவரிடம் பிரபாகரன் நீர் கேட்டார்.
அப்போது, பிரபாகரனின் உணவுகள் கிரமமாக சோதனை செய்யப்படுவதில்லை. பாதுகாப்பு பொறுப்பாளர் இடையிடையே சோதனை செய்வார். அது பாதுகாப்பு பொறுப்பாளரின் முடிவு. பின்னாளில்தான் அது வழக்கமாக்கப்பட்டது. மருத்துவ போராளியொருவர் பாதுகாப்பு குழுவில் அங்கம் வகித்தார். பிரபாகரனிற்கு வழங்கப்படும் உணவுகளை அவர்தான் முதலில் உண்பார். அவர் உண்ட பன்னிரண்டு நிமிடங்களின் பின்னர்தான் பிரபாகரன் உணவருந்துவார். போராளிகள் சந்திப்பில், அனைவரும் உணவருந்துவார்கள். அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரே உணவுதான். ஆனால், பிரபாகரனின் சமையல்கூடத்திலிருந்து தனியாக தயார் செய்யப்பட்டு அந்த மருத்துவ போராளியிடம் கையளிக்கப்படும். அவர் உணவுமேசைக்கு அனைவரும் செல்லும்வரை டிபன் கரியருடன் இருப்பார்.
உடற்பயிற்சியின் பின் பிரபாகரன் நீர் கேட்டதும், அங்கு காவல்கடமையிலிருந்த போராளி உள்ளே சென்று நீர் எடுத்து வந்தார். அப்போது செல்லக்கிளி திடீரென வந்து நீரை வாங்கி சோதனை செய்தார். அந்த நீரை அருந்திய செல்லக்கிளி, அது ஒரு மாதிரி இருப்பதாக எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே வயிற்றைப்பொத்திக்கொண்டு உட்கார்ந்தார். வாந்தி எடுத்தார். வாயிலிருந்து நுரை தள்ளினார்.
ஏதோ விபரீதம் என முகாம் எச்சரிக்கப்பட்டது. உடனடியாக பிரபாகரன் அரியாலையிலிருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொக்குவில் முகாம் உயர்மட்ட விசாரணையாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. பிரபாகரன் அருந்தும் நீரில் யாரோ நஞ்சு கலந்திருக்க வேண்டுமென்பது முதல்கட்ட தகவல். அதை அருந்திய செல்லக்கிளி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விவகாரம் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது. பொட்டம்மானிற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அது செல்லக்கிளி மீதே!
பிரபாகரனிடமும் அது பற்றி சொல்லியுள்ளார். எனினும், பிரபாகரன் அதை ஏற்கவில்லை. தனது உயிரை காப்பாற்றியவராகவே பிரபாகரன் நினைத்தார்.
ஆனால் புலன் விசாரணையை துரிதப்படுத்திய பொட்டம்மான், பிரபாகரனின் அதிருப்தியின் மத்தியிலும் செலலக்கிளியை கைது செய்தார். கடுமையான விசாரணையின் பின் செல்லக்கிளி உண்மையை ஒத்துக்கொண்டார். பிரபாகரனிற்கு தன்னில் அபிமானமும், பிடிப்பும் ஏற்படுவதற்காக அவர் அருந்தும் தண்ணீரில் சிறிதளவு சயனைட் நஞ்சை தானே கலந்ததாக ஒத்துக்கொண்டார். அந்த தண்ணீரை பிரபாகரன் குடித்துவிடக் கூடாதென்பதிலும் மிக கவனமாக இருந்ததாகவும் கூறினார். அதன் பின்னர் செல்லக்கிளி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறுமாதங்கள் தண்டனையின் பின் விடுவிக்கப்பட்டு, தென்மராட்சியின் அல்லாரையில் 1995 இல் ஆரம்பித்த பயிற்சி முகாமான கெனடி 1 இன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும், அங்கும் நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அமைப்பிலிருந்து விலகிய பின்னர் வன்னியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாகன சாரதியாக தொழில்புரிந்துவிட்டு, முகவர் ஊடாக பிரித்தானியாவிற்கு சென்று அகதி அந்தஸ்து பெற்றுக்கொண்டார்.
சொர்ணம், பிரபாகரன் உறவை புரிய வைக்க இன்னொரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறிவிட்டது. சொர்ணத்தின் திருமணமே அது.
1990 இல் இந்திய இராணுவத்துடனான யுத்தத்தின் பின் புலிகள் அமைப்பிற்குள் திருமணங்கள் நடந்தன. அப்போது புலிகளின் திருமண வயது ஆண்களிற்கு 29. பிரபாகரன் குடும்பத்தின் மீதே பிரபாகரன் அதி விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். பிரபாகரனை போலவே மதிவதனியும் சொர்ணத்தில் அன்பாக இருந்தவர். 1993 இல் சொர்ணம் திருமண வயதை எட்டியபோது, அவரை திருமணம் செய்யுமாறு பிரபாகரன் தம்பதியினர் வற்புறுத்தினர். திருமண பேச்சை எடுத்தாலே சொர்ணம் வெட்கப்பட்டு, அசூசைப்பட்டார். தனக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லையென்றும், இலட்சியத்தை அடைந்த பின்னரே எதுவென்றாலும் என சொன்னார். எனினும், பிரபாகரன் தம்பதி அதை ஏற்கவில்லை. குறிப்பாக மதிவதனி அதை ஏற்கவில்லை. சொர்ணத்திற்கு யாரிலும் விருப்பமிருந்தால் தானே நேரில் சென்று பேசுவதாகவும் கூறியிருந்தார். சொர்ணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லையென்றார்.
அந்த காலப்பகுதியில் சொர்ணம் என்றால் போராளிகளே நடுநடுங்குவார்கள் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். பெண் போராளிகளும் அப்படித்தான். சொர்ணத்துடன் முரண்பட்ட அப்போதைய மகளிர் படையணி தளபதியாக இருந்த ஜெனா அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார்.
(தொடரும்)

No comments:

Post a Comment