இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 59 2000 ஆட்லறி செல் கேட்ட சொர்ணம்
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருகாலத்தில் கோலோச்சிய சொர்ணத்தின் அத்தியாயம் இத்துடன் முடிகிறது. இதன் பின்னர் இன்னும் இரண்டு தாக்குதல்களை சொர்ணம் வழிநடத்தினார். காலஒழுங்கில் அதனை பின்னால் பார்க்கலாம். ஆனால், சொர்ணம் என்றால் களம் அதிரும் என்ற நிலை இருக்கவில்லை.
கடற்புலிகளின் மன்னார் தளபதியாக பொறுப்பேற்ற சொர்ணத்திற்கு அங்கு பணிகள் அவ்வளவாக இருக்கவில்லை. கொஞ்ச போராளிகளின் நிர்வாகத்தை கவனித்தார் என்ற அளவிலேயே பணிகள் இருந்தன.
2004 இல் கருணா பிளவு நிகழ்ந்தபோதே சொர்ணம் மீண்டும் களத்திற்கு வந்தார். சொர்ணத்தின் மீது பிரபாகரன் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையினால் உருவான வாய்ப்பிது. திருகோணமலை தளபதியாக இருந்த பதுமனை கைது செய்ய சொர்ணம் அனுப்பிவைக்கப்பட்டதை ஏற்கனவே தமிழ்பக்கத்தின் இந்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம்.
திருகோணமலை தளபதியாக சொர்ணம் இருந்த காலப்பகுதியில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று- மாவிலாற்று கதவு மூடப்பட்டது. இரண்டு- சம்பூர் வலிந்த தாக்குதல்.
மாவிலாற்று கதவுகள் பூட்டப்பட்டது ஒரு எதேச்சையான சம்பவம். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்க, மாவிலாற்று கதவை பூட்டியதாக பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், யுத்தத்தை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் அந்த கதவுகள் பூட்டப்படவில்லை. கதவு பூட்டிய விவகாரம் இருதரப்பு முறுகலாக உருவெடுக்க, யுத்தத்தை நோக்கி நகர விரும்பிய இருதரப்பும் முறுகலை வளர்த்து சென்றன என்பதே யதார்த்தம்.
அடுத்தது, சம்பூரை கைப்பற்றி திருகோணமலை துறைமுகம் மீதான அச்சுறுத்தலை அதிகரித்த நடவடிக்கை.
மகிந்த ராஜபக்ச பதவியேற்றது விடுதலைப்புலிகளிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ரணில் விக்கிரமசிங்க கையாள சிரமமானவர், அவர் ஆட்சியில் நீடித்தால் போராட்டம் இக்கட்டான நிலையை அடையும் என புலிகள் நினைத்தனர். தலைமை தொடக்கம் தளபதிகள் வரை இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தனர். விதிவிலக்காக சில தளபதிகள் இருந்தார்கள். அது பற்றிய தகவல் உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை. இந்த தொடரின் பிற்பகுதியில் அவற்றை பார்க்கலாம். இதைவிட்டால், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் சற்று வித்தியாசமான நிலைப்பாட்டில் இருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றாக மகிந்த ராஜபக்சவை கொண்டு வரலாம் என்ற புலிகளின் தந்திரோபாயத்துடன் அன்ரன் பாலசிங்கத்திற்கும் உடன்பாடு இருந்தது. அது சரியானதென அவர் நினைத்தார். ஆனால் புலிகள் யுத்தத்தை நோக்கி நகர்ந்ததுதான் பாலசிங்கத்திற்கு உடன்பாடாக இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க போன்ற ராஜதந்திர முதிர்ச்சி இருக்காத மகிந்த விரைவிலேயே யுத்தத்தை நோக்கி செல்வார் என்றுதான் பாலசிங்கம் கணக்கு போட்டார். இதன்மூலம் சர்வதேச அனுதாபத்தை தமிழர்கள் பக்கம் திருப்பலாமென நினைத்தார்.
அவரது கணக்கும், பிரபாகரனின் கணக்கும் இந்த விடயத்தில் ஒத்துவரவில்லை. அதனால் பாலசிங்கத்திற்கும் பிரபாகரனிற்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்தது.
பேச்சுவார்த்தையின் இறுதிக்கால கட்டத்தில் அன்ரன் பாலசிங்கம் இணைக்கப்படவில்லை. அவரது உடல்நிலை காரணமாகவே கலந்து கொள்ளவில்லையென புலிகள் அறிவித்திருந்தாலும் உண்மை அதுவல்ல. பாலசிங்கம் பேச்சில் கலந்துகொள்ளாமல் விடுவதற்கு முன்னர் சில தடவைகள் வன்னிக்கு வந்து சென்றார். அப்போது பேச்சுக்கள் நெருக்கடியை நோக்கி நகர தொடங்கியிருந்தன.
வன்னியில் தங்கியிருந்த காலத்தில் தனக்கு நெருக்கமான தளபதிகளிடம் பிரபாகரனின் விடாப்பிடியான இயல்பு குறித்த கவலையை வெளியிட்டுள்ளார். கோபம், நகைச்சுவை இந்த சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை “ராஜமார்த்தாண்டன்“ என்றுதான் பாலசிங்கம் குறிப்பிடுவார். அதாவது முழுக்க முழுக்க யுத்தத்தின் நம்பிக்கை கொண்ட ஒரு வீரன் என்ற அர்த்தத்திலேயே அப்படி குறிப்பிடுவார். “ராஜமார்த்தாண்டனிற்கு நிலைமை விளங்குதில்லை“ என நெருக்கமானவர்களிடம் பலமுறை கவலைப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வரவு தமக்கு சாதமானதென நம்பியவர்களில் சொர்ணமும் முக்கியமானவர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற சமயத்தில் மணலாற்று காட்டுக்குள் நடந்த சந்திப்பொன்றில் சொர்ணம் இதை போராளிகளிடம் கூறியிருந்தார்.
சம்பூர் மீதான தாக்குதலை சுலபமானதாக சொர்ணம் கணக்கிட்டிருந்தார். சம்பூரில் மட்டுமல்ல, யாழ்ப்பாணம் மீதும் இலகுவாக தாக்கலாம் என தளபதிகளிடம் ஒரு கணக்கிருந்தது. ஆட்லறி செல் கொஞ்சம் அடித்தால் இராணுவம் ஓடிவிடும் என்ற அபிப்பிராயத்தை போராளிகள் சந்திப்பில் அடிக்கடி சொன்னார்கள்.
ஓயாதஅலைகள் 3,4 தாக்குல்களின் போது புலிகள் பாவித்த உத்திகளில் ஒன்று, இராணுவத்தின் காவலரணிண் எதிராக ஆட்லறியை நிறுத்தி, துப்பாக்கி சுடுவதை போல காலவரணை நோக்கி எறிகணையை செலுத்துவது. ஆட்லறி மட்டுமல்லாமல் வேறும் நவீன ஆயுதங்களை இதற்காக பாவித்தார்கள். கனோன்கள், உந்துகணை செலுத்திகளில் விதவிதமான மொடல்களை புலிகள் இறக்குமதி செய்திருந்தனர். இராணுவத்திடம் கூட அவை இருக்கவில்லை.
அதன் பின்னர் சமாதான காலப்பகுதியில் இராணுவம் செய்த முக்கிய மாற்றம், நிலமேல் காவலரண்களை அகற்றி, நிலக்கீழ் காலவரண்களை உருவாக்கியது. தரை உயரத்திலும் சற்று உயரமாக காவலண் இருந்தது. இது புலிகளின் பழைய உத்திக்கு வாய்ப்பில்லாமல் செய்தது.
சமாதான காலப்பகுதியில் இப்படி ஒவ்வொரு விடயத்தையும் இராணுவம் மாற்றி, தன்னை மெருகேற்றியது. அது புலிகளில் நடக்கவில்லை. ஆட்லறி அடிக்க, இராணுவம் ஓடும் என்ற அளவில் இருந்த கணக்கை, மாற்றாமல் வைத்திருந்தனர்.
சம்பூரை கைப்பற்றி திருகோணமலை துறைமுகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்தை பிரபாகரனிடம் சமர்ப்பித்தார் சொர்ணம். உண்மையில் இது சவாலான தாக்குதல் திட்டமென்பது பிரபாகரனிற்கும் தெரியும். ஏனெனில் கிழக்கில் இராணுவ முகாமை தகர்த்து, நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த சம்பவங்கள் ஏற்கனவே அவ்வளவாக நடந்திருக்கவில்லை.
ஆனால், பிரபாகரனின் கவலையை சொர்ணம் போக்கினார். தனக்கு 2,000 ஆட்லறி எறிகணைகள் தந்தால் சம்பூரை கட்டுப்பாட்டில் கொண்டு வருவேன் என வாக்களித்தார்.
அப்போது புலிகளின் ஆயுதக் களஞ்சியங்களில் ஆட்லறி எறிகணைகள் தட்டுப்பாடாக இருந்தது. ஆயுதக்கப்பல்களின் வரத்து இருக்கவில்லை. அதனால் தாக்குதல்களின் முன்னர் தேவையான ஆட்லறி எற்கணைகளை கணக்கு பார்த்தே திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். ஒவ்வொரு தளபதிக்குமான ஆட்லறி எறிகணை கணக்கை இறுதி செய்பவராக பிரபாகரனே இருந்தார்.
அவவ்ளவு நெருக்கடிக்குள்ளும், சொர்ணத்திற்கு 2,000 எறிகணைகள் வழங்கப்பட்டன. திருகோணமலையை கைப்பற்றுவதன் மூலம் கிடைக்கும் இராணுவ, அரசியல் பலம் என்பது, தட்டுப்பாடான
சொர்ணம் தனது அணிகளிற்கு தாக்குதல் கட்டளையை இட்டார். சம்பூரை விரைவில் புலிகளின் அணிகள் கைப்பறினாலும், திருகோணமலையிலிருந்து சிறிய படகுகளில் வநது தரையிறங்கிய கொமாண்டோக்கள் புலிகளிடமிருந்து சம்பூரை மீண்டும் கைப்பற்றின. இறுதியில் திருகோணமலையை விட்டே புலிகளின் அணிகள் பின்வாங்கி, வாகரை பகுதியில் நிலைகொண்டனர்.
இதன்பின்னர், மட்டக்களப்பில் பெருமெடுப்பிலான படைநடவடிக்கை செய்த இராணுவம், தொப்பிக்கல காட்டுப்பகுதியை முழுமையாக கைப்பற்றியது. பின்னர், வாகரையில் ஒரு பெரும் முற்றுகை செய்தது. வன்னியின் முள்ளிவாய்க்காலை போன்ற ஒரு மனிதஅவலம் அங்கும் நிகழ்ந்தது. ஆனால் கிழக்கில் நடந்ததால் அவ்வளவாக தமிழர்களாலேயே கவனிக்கப்படாமல் விடப்பட்டது.
கிழக்கில் நிலைகொண்ட புலிகளின் அணிகள் பானு தலைமையில் முற்றுகையிலிருந்து வெளியேறி வன்னியை நோக்கி நடக்க தொடங்கினார்கள். அடர்ந்த காட்டு பாதைதான் கிழக்கிற்கும் வன்னிக்குமிடையிலான தொடர்பு பாதை. அதில் இராணுவம் அடிக்கடி பதுங்கித் தாக்குதலும் செய்வார்கள். கிழக்கிலிருந்து வன்னிக்கு செல்வது உயிர் உத்தரவாதம் இல்லாதது.
இம்முறை பயணத்தில் புலிகளிற்கு புதிய எதிரியாக கொலராவும் சேர்ந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment