ஆனையிறவில் கருணாவை கொடியேற்ற விடாமல் புலிகள் தடுத்து விட்டனர், அது பிரதேசவாதம் என தீவிர புலியெதிர்ப்பாளர்கள் ஒரு கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் உள்ளது.
ஆனால் உண்மை அதுவல்ல.
அதற்கும் அப்பால், ஆழமான விசயங்கள் உள்ளன. விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் கையாளப்படும் விவகாரங்கள் வெளியில் வருவதில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் ஆளாளுக்கு கதைகட்டி விட்டு விடுகிறார்கள். அப்படி உருவான கதைகளில் ஒன்றுதான்- கருணாவை ஆனையிறவில் கொடியேற்ற அனுமதிக்கவில்லையென்பதும்.
அதற்கு முன்னர் வாசகர்களிற்கு ஒரு குறிப்பு. இந்த பாகம் நேற்று -புதன்கிழமை வெளியாகியிருக்க வேண்டியது. தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒருநாள் தாமதமாக பதிவேற்றப்படுகிறது. இதன் அடுத்த பாகம் வழக்கம்போல வரும் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றப்படும். தாமதத்திற்கு வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.
கடந்த அத்தியாயத்தில்- கருணாவின் படையணிகள் குழப்பம் விளைவிக்க தொடங்க, அதை கருணாவும் கட்டுப்படுத்தாமல் விட்டார். இதை பிரபாகரன் ரசிக்கவில்லை. பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்த கிழக்கு பொறுப்பாளரையும் புலிகள் விட்டுப்பிடித்தார்கள் என்பதையும், தனது பொறுப்பாளர்கள் புலிகளின் தளபதிகளுடன் முரண்படுவதை ரசித்த கருணா, அது விவகாரமாகும் போது, “கிழக்கு படையணிகள் இல்லாவிட்டால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது“ என்ற எண்ணத்தில் நடப்பதையும் புலிகள் புரிந்து கொண்டிருந்தார்கள் என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

கிழக்கு படையணிகளை யாழ்ப்பாணத்திற்கான சமரில் இறக்காமல் விட பிரபாகரன் முடிவெடுத்ததற்கு இரண்டு காரணமிருந்தது. முதலாவது- கிழக்கு போராளிகள் இல்லையென்றால் புலிகளால் எதுவும் செய்ய முடியாதென்ற அபிப்பிராயம் வரக்கூடாது. அப்படியான அபிப்பிராயம் கிழக்கு போராளிகளிடம் ஏற்படுத்தப்பட்டால், பின்னாளில் அமைப்பையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போய்விடும்.
இரண்டு- உண்மையிலேயே கிழக்கு போராளிகள் வடக்கில் அதிகமாக உயரிழப்பை சந்தித்துவிட்டனர். வடக்கை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தை மீட்கும் சமரில் ஈடுபடுவதே சரி என்பதாலேயே புலிகள் அந்த முடிவை எடுத்தனர்.
ஆனையிறவில் கொடியேற்றுவதற்கு யார் பொருத்தமானவர்?
கருணாவை ஆனையிறவில் கொடியேற்ற விடாதது புலிகளின் வடக்கு, கிழக்கு பாகுபாட்டின் காரணமாகவே என இன்று கருணாவின் ஆதரவாளர்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள். உண்மை அதுவல்ல. கிழக்கு இளநிலை தளபதிகள் வடக்கில் முரண்டு பிடிக்க ஆரம்பிக்க, புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட இராணுவ கட்டமைப்பின்படியே இந்த கொடியேற்றல் நடந்தது. இதன்மூலம், கருணாவிற்கு பிரபாகரன் தெளிவாக செய்தியொன்றையும் சொல்லியிருந்தார்.
யார் இல்லையென்றாலும் என்னால் எதையும் செய்ய முடியும்!
இதுதான் அந்த செய்தி. ஏனெனில் கருணா படித்த பாடசாலையில் ஹெட் மாஸ்ரரே அவர்தானே!
இதன் பின்னர் 2000 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் கருணா தலைமையிலான கிழக்கு படையணிகளை மீண்டும் கிழக்கிற்கே அனுப்பினார் பிரபாகரன். முள்ளியவளையில் இருந்த ஜெயந்தன் படையணி முகாமில் கிழக்கு போராளிகளின் பிரிவுபசார நிகழ்வில் பிரபாகரன் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய போது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் வன்னியில் கிழக்கு போராளிகள் செய்த அர்ப்பணிப்புக்களை நினைவுகூர்ந்து மெச்சினார். புலிகள் அமைப்பு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சிக்கியபோது, கிழக்கு போராளிகளே அந்த நெருக்கடியை தகர்த்தார்கள் என புகழாரம் சூட்டினார்.
கிழக்கு போராளிகளில் பிரபாகரனிற்கு எந்த அதிருப்தியும் இருக்கவில்லை. ஆனால் இளநிலை தளபதிகளை தூண்டி விட்டது யார் என்பதில் அவருக்கு சந்தேகம் இருக்கவில்லை.
கிழக்கிற்கு கருணாவை அனுப்பும்போது, அவரது நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்தவராகத்தான் அனுப்பி வைத்தார். இயக்கத்தின் ஒருங்கிணைந்த தன்மையை கருணாவின் நடவடிக்கைகள் பாதிக்கிறது என்பதை தெரிந்தும், கருணாவை தனது முகாமிற்கு அழைத்து பேசினார். கருணாவின் நடவடிக்கைகளில் பிரபாகரன் எவ்வளவு அதிருப்தியாக இருந்தார் என்பதை , அந்த சந்திப்பில் பிரபாகரன் எப்படி நடந்து கொண்டார் என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். “மட்டக்களப்பிற்கே போ… அங்கே எதையாவது செய்து கொள்“ என திட்டித்தான் அனுப்பினார். இதன் பின்னரே முள்ளியவளையில் ஜெயந்தன் படையணி போராளிகளின் பிரிவுபசாரம் நடந்தது.
கிழக்கிற்கு கருணா வந்த சிறிதுகாலத்தில் 2002 பெப்ரவரியில் அரசு-புலிகள் சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டு விட்டது. இதன் பின்னர் புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் கிழக்கிற்கு நகர்த்தப்பட்டன. காவல்துறை, நீதிமன்றம், நிதி கட்டமைப்புக்கள் கிழக்கிற்கு சென்றது கருணாவிற்கு பிடிக்கவில்லை. காரணம், அதுவரை இவை அனைத்தையும் கருணாவே கவனித்து வந்தார். நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், தனது பிடி நழுவிவிடும் என அவர் பயந்தார். இதனால் நிர்வாக கட்டமைப்புக்களிற்கு தொடர்ந்து இடையூறுகள் விளைவிக்க ஆரம்பித்தார். இதை கருணா நேரடியாக செய்ததை போல தெரியாது. அவரின் கீழிருந்த தளபதிகள்தான் நிர்வாக இடையூறுகளை நேரடியாக ஏற்படுத்துவார்கள். பின்னர் விசயம் கருணாவிடம் போகும். தனது தளபதிகளிற்கு சார்பாக கருணா முடிவெடுப்பார். இது மிக திட்டமிட்ட முறையில் நடந்து வந்தது.
வன்னியில் காவல்துறை விஸ்தரிக்கப்பட்டபோது, போராளிகளுடன் சிறிய முரண்பாடு ஓரிரண்டு வந்ததுதான். சிவில் குற்றங்களில் சம்பந்தப்பட்ட போராளிகளை காவல்துறையே விசாரிக்கும் என்ற நடைமுறை போராளிகளிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால், அது பொதுவான நடைமுறையென்றபோது அவர்கள் இதற்கு இணங்கி சென்றார்கள். பெரிய முரண்பாடுகள் இல்லாமல் வன்னியில் காவல்துறை செயற்பாடு விஸ்தரிக்கப்பட்டது.
ஆனால் கிழக்கில் அதற்கு கருணா முழுமையான தடையாக இருந்தார். இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் காவல்துறை உறுப்பினர்களை கருணாவின் போராளிகள் அடைத்து வைத்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.
இதன் உச்சக்கட்டமாக ஒருமுறை துப்பாக்கிச்சூடும் நடந்தது. காவல்துறையினர் தங்கியிருந்த வீட்டின் மீது கருணாவின் அணியினர் கைக்குண்டும் வீசி, துப்பாக்கியாலும் சுட்டனர். காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பிரபாகரனிற்கு தெரியவந்ததும் கருணாவை கண்டித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டார். ஆனால் அப்படியெதுவும் நடக்கவேயில்லை.
கருணா கிழக்கில் வரி அறவிடும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார். கிழக்கில் வகைதொகையில்லாமல் கருணா வரி அறவிட்டார். அதில் பெரும்பகுதி முறையான கணக்கு வழக்கிற்கு உள்ளாகவில்லை.
புலிகளின் நிதித்துறை இதில் தலையிட்டபோது, அவர்களிற்கும் இடையூறு விளைவிக்கப்பட்டது. புலிகளின் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்தவர்களும் வரி அறவிட்டு இயக்கத்தின் அன்றாட நடவடிக்கையை கவனித்தனர். 1980களின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் கிட்டு பொறுப்பாக இருந்தபோது, அவர் வர்த்தகர்களிடம் வரி அறவிட்டார். அதே சமயத்தில் வன்னி பொறுப்பாளராக இருந்த மாத்தையா, கிளிநொச்சியில் வரி அறவிட்டார். ஏ9 பிரதான வீதியால் செல்லும் லொறிகளும் வரி செலுத்தின. யாழ்ப்பாணத்தில் கிட்டுவிடமும், கிளிநொச்சியில் மாத்தையாவிடமும் வரி செலுத்த வேண்டிய நிலைமையும் வந்தது. பின்னாளில் வடக்கில் வரி அறவிடுவது ஒரே அலகான பின்னர், இந்த சிக்கல் எழவில்லை. வடக்கில் வரி ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரப்பட்டபோதும், கிழக்கில் கருணா வரி அறவிட அனுமதிக்கப்பட்டிருந்தார்.
2002 சமாதான உடன்படிக்கையின் பின் புலிகளின் வரி விவகாரம் முக்கிய விசயமாக அரசாங்கத்தால் பேசப்பட தொடங்க, வரி அறவிடுவதை நிறுத்தும்படி கருணாவிற்கு உத்தரவிடப்பட்டது. கிழக்கு போராளிகளிற்கு தேவையான பணம் வன்னியிலிருந்து அனுப்பபட்டது. ஆனால் கருணா வரி அறவிடுவதை நிறுத்தவில்லை.
புலிகளின் புலனாய்வுத்துறையையும் கருணாவிற்கு பிடிக்கவில்லை. மட்டக்களப்பு நிலவரத்தை உடனுக்குடன் பிரபாகரனிற்கு அறிவித்து கொண்டிருந்தது கருணாவிற்கு பிடிக்கவில்லை.
புலிகளை விட்டு கருணா பிரிந்த சமயத்தில், கருணா ஒரு பேட்டி வழங்கியிருந்தார். புலிகள் இயக்கத்தில் மீண்டும் இணைவதென்றால், காவல்துறை பொறுப்பாளர் நடேசன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி ஆகிய மூவரையும் இயக்கத்தை விட்டு நீக்க வேண்டுமென கூறியிருந்ததையும் கவனியுங்கள். இப்பொழுது கருணா பிளவின் அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளலாம்.
இதுகூட பரவாயில்லை. வன்னியிலிருந்து மட்டக்களப்பிற்கு கருணா தலைமையில் கிழக்கு படையணிகள் வந்த பின்னர் நடந்த கொலையொன்றுதான் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக அமைந்தது. இந்த கொலை 2001 நடந்தது. சமாதான உடன்படிக்கை ஏற்படக்கூட இல்லை. கருணா புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்த சமயம். அப்போது, புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் ஒருவர் மீது கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டது. க
அது இராணுவம் நடத்தியதாக கருணா தரப்பில் கூறப்பட்டது. உண்மையில் அதை இராணுவம்தான் நடத்தியதா? அல்லது, இராணுவம் தனியாக அதை நடத்தியதா? கருணா ஆட்கள் அதில் சம்பந்தப்பட்டிருந்தனரா?
யார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது?
இதையெல்லாம் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment