மட்டக்களப்பில் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை போராளிகளிற்குள் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களை தன்னுடன் இழுத்தெடுக்க கருணா முயற்சித்தார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
புலனாய்வுத்துறை அணியிலிருந்து விலகி, மட்டக்களப்பு மாவட்ட அணியுடன் செயற்படவிருப்பதாக அவர்கள் புலிகளின் தலைமைச்செயலகத்திற்கு கடிதம் எழுதினார்கள்.
இது புலிகளிற்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது தலைமைசெயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தேவன். பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். அவரை பற்றிய சிறு குறிப்பொன்றை தந்துவிட்டு, கிழக்கு பிரச்சனையை தொடர்கிறோம்.
இம்ரான் பாண்டியன் படையணி தளபதியாக இருந்தவர் கடாபி (ஆதவன்). இம்ரான் பாண்டியன் படையணிதான் அப்போது பிரபாகரனது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தது. (பின்னர்தான் ராதா படையணியாக மாறியது) அதனால் அந்த படையணியில் இரகசியம் பேணுவது முக்கியமானது. விடுதலைப்புலிகளிடம் புலனாய்வு அமைப்பொன்று இருந்தாலும், இம்ரான் பாண்டியன் படையணியும் தனியாக ஒரு புலனாய்வு அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து மரணமடைந்த மேஜர் கௌதமனின் (முல்லைத்தீவு ஓயாத அலைகள் 1 தாக்குதலில் மரணமானார்) பெயரை அந்த அணிக்கு சூட்டியிருந்தனர்.

இரட்ணம் மாஸ்ரர்தான் இதன் பொறுப்பாளர். பிரபாகரனின் பாதுகாப்பில் அக்கறையாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், இம்ரான் பாண்டியன் படையணியில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. பாதுகாப்பு பிரிவில் இருப்பவர்கள் தவறு செய்தால், வீடு செல்லப்போகிறோம் என்றால், இந்த புலனாய்வுத்துறையின் கீழிருந்த சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள். அங்கு கடுமையான நடைமுறைகள் இருந்தன. இதனால் போராளிகள் உடல்ரீதியாக கடுமையான பாதிப்புக்களை சந்திக்க ஆரம்பித்தனர்.
இதனால் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடுமையான பாதிப்பிற்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ பிரிவின் மருத்துவமனைகளிற்கு சென்று கொண்டிருந்தார்கள். தாக்குதலில் கடுமையான காயமடைந்து, உடல்பாதிப்பிற்குள்ளாகுவதுதான் வழக்கம். ஆனால், அப்படி இல்லாமல், ஒரு படையணியில் இருந்து கடுமையான பாதிப்புப்புடன் போராளிகள் வருகிறார்களே, என்ன விசயமாக இருக்கும் என டொக்ரர் அன்ரி (எழுமதி கரிகாலன்) தான் முதன்முதலில் இதில் கவனம் செலுத்தினார்.
(டொக்ரர் அன்ரி- புலிகளின் கிழக்கு அரசியல்துறை பொறுப்பாளராகவும், பின்னர் பொருண்மிய மேம்பாட்டு பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்த கரிகாலனின் மனைவி. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்தின் முதலாவது அணியில் கற்கையை பூர்த்தி செய்தவர். ஆரம்பகாலத்திலிருந்தே புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர். தலைவர் பிரபாகரனின் குடும்ப வைத்தியரும் இவர்தான். பிரபாகரன் குடும்பத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தையும் பேணினார். அதனால், எந்த விவகாரத்தையும் பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரால் முடிந்தது).

இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலைக்கு வரும் போராளிகளின் விபரங்களை ஆராய்ந்த டொக்ரர் அன்ரி, அது அவர்களின் புலனாய்வு பிரிவின் நடைமுறைகளின் விளைவு என்பதை புரிந்து கொண்டார். எந்த தயக்கமுமின்றி உடனடியாக, இது பற்றி பிரபாகரனிற்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அறிக்கையை படித்த பிரபாகரன், அந்த சிறைச்சாலையை உடனடியாக இடிக்க சொன்னார். அப்போது தலைமைசெயலக பொறுப்பாளராக இருந்த தேவனிடம் அதை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
தேவன், இம்ரான்பாண்டியன் படையணியிலிருந்து வளர்ந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராகவும் இருந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக வளர்ந்தவர்களை, அடுத்த கட்டமாக ஒரு மாவட்ட தளபதியாகவோ, அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ அனுப்பும் வழக்கமிருந்தது. பிரபாகரனின் கண் முன்னால் வளர்ந்தவர்களை, அவர்களின் திறமையை கண்டு பிரபாகரனே வளர்ந்துவர சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தவர்களை- முக்கியமான பொறுப்பில் வெற்றிடம் ஏற்படும்போது, அங்கு அனுப்புவார்.
1995 இல் மணலாறு மாவட்ட தளபதியாக குமரன் நியமிக்கப்பட்டபோது, அவரின் வயது இருபத்துகளின் ஆரம்பமாக இருந்தது. பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக இருந்தவர். மணலாறு தளபதியாக இருந்த வெள்ளை, மணலாறு தாக்குதலில் சறுக்க- அந்த இடத்திற்கு குமரன் நியமிக்கப்பட்டார். பிரபாகரனின் தெரிவு மிகச்சரி என்பதை குமரன் நிரூபித்தார். 1993 இல் லெப்.கேணல் அன்பு இருந்த சமயத்தில் மணலாறு காடு எப்படி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோ, அப்படியான நிலைமையை குமரன் ஏற்படுத்தினார்.
தேவனும் பிரபாகரனின் பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்தபோது, தலைமை செயலக பொறுப்பாளராக இருந்த பதுமன் திருகோணமலைக்கு தளபதியாக அனுப்பப்பட்டார். அந்த வெற்றிடத்திற்கு தேவன் நியமிக்கப்பட்டார்.

கடாபியை மீறி சிறையை உடைக்க தேவன் விரும்பவில்லை. கடாபியும் உடைக்க விரும்பவில்லை. அதனால் சிறை உடைக்கப்படாமலேயே இருந்தது. சிறையை உடைக்க சொன்ன பிரபாகரன், அதை மறந்திருப்பார் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், பிரபாகரன் அதை மறக்கவில்லை. சிறிய இடைவெளியின் பின், இருவரையும் அழைத்து, சிறை உடைக்கப்பட்டு விட்டதா என வினவினார். அது உடைக்கப்படவில்லை!
கடாபி, தேவன் இருவரையுமே அவர்களின் பொறுப்பிலிருந்து நீக்கினார். 2001 வரை விடுதலைப்புலிகள் அமைப்பின் மிக சக்தி வாய்ந்த நபராக இருந்தவர் கடாபி. பிரபாகரனது பாதுகாப்பு, விமான எதிர்ப்பு அணி, தரை கரும்புலிகள், விக்டர் கவச எதிர்ப்பு படையணி, ராங்கி அணி, விடுதலைப்புலிகள் வாங்கும் எந்த புதியரக கனரக ஆயுதமானாலும் அது கடாபியின் கீழ்தான் வரும், ஏனைய படையணிகளிற்கான கனரக ஆயுத பயிற்சி என பலபிரிவுகளிற்கு கடாபி பொறுப்பாக இருந்தார். இந்த சிறை சம்பவத்துடன் (வேறு சில சம்பவங்களும் இருந்தன) அவரை வேறு பொறுப்பிற்கு மாற்றினார் பிரபாகரன். புலிகளிற்குள் இந்தவகையான நடவடிக்கைக்கு ‘காற்று இறக்கல்’ என்ற சொல் பாவிக்கப்படும். புதிய போராளிகளிற்கு பயிற்சியளிப்பதற்கு பொறுப்பாக கடாபி நியமிக்கப்பட்டார். தேவன் திருகோணமலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த தேவன் தலைமைசெயலகத்திற்கு பொறுப்பாக இருந்த சமயத்தில்தான் மட்டக்களப்பில் இருந்து ரெஜினோல்ட் உள்ளிட்ட சிலரது கடிதம் வந்தது. இது புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விசயம். இந்த இடத்தில் புலிகளின் தலைமைசெயலகம் பற்றிய சிறு விளக்கம் தர வேண்டும். அனைத்து போராளிகளின் பதிவும், ஆயுதங்களின் பதிவும் தலைமைசெயலகத்தில் இருக்கும். சில இரகசிய செயற்பாட்டில் இருக்கும் போராளிகள் பற்றிய விபரம் தலைமை செயலகத்தில் இருக்காது. அதேபோல, புலிகள் புதிதாக ஏதாவது இரகசிய ஆயுதங்கள் இறக்குமதி செய்து பாவனையில் வைத்திருந்தால், அதுவும் பதிவிற்கு வராது. புலிகள் 1996 இல் SPG 9 என்ற ராங்கி எதிர்ப்பு ஆயுதத்தை இறக்குமதி செய்ததாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் தலைமைசெயலக பதிவிற்கு அது செல்லவில்லை. அதுபோல, ஆயுத களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்களின் விபரமும் இருக்காது. படையணி மாற்றப்படும் போராளிகள் தலைமைச்செயலகம் சென்று, அங்கிருந்தான் செல்வார்கள். ஆனால் தலைமைசெயலகமாக யாரையும் இடமாற்றம் செய்யவோ, படையணி மாற்றம் செய்யவோ முடியாது. அமைப்பிற்குள் நடக்கும் மாற்றங்களை பதிவு செய்வார்கள் அவ்வளவுதான். ஆனால் போராளிகளின் பிரச்சனைகளை, கருத்துக்களை தலைமைசெயலகத்திற்கு எழுதினால், சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து முடிவெடுப்பார்கள்.
மட்டக்களப்பு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர்கள் ரெஜினோல்ட் தலைமையில் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியதும், அது பெரிய குழப்பமாகியது. தலைமைசெயலகம் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. மட்டக்களப்பிலுள்ள தலைமைசெயலக பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, ரெஜினோல்ட் ஆட்களுடன் பேசி காரணத்தை அறிய சொன்னார்கள். மட்டக்களப்பு தலைமை செயலக பொறுப்பாளர் உடனே ரெஜினோல்ட் ஆட்களை அழைத்து என்ன பிரச்சனையென விசாரித்தார். ரெஜினோல்ட் ஆட்கள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்கள்- ‘நாங்கள் அம்மானின் கட்டளையின் கீழ் செயற்படவே விரும்புகிறோம்’ என.
தலைமை செயலகத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இப்படியான பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம்தான். ‘இந்த தளபதியின் கீழ் செயற்படமாட்டேன். அந்த தளபதியின் கீழ்தான் செயற்படுவேன்’ என போராளிகள் சொல்வது சகஜம்தான். ஆனால் மட்டக்களப்பில் நடந்தது வேறு வகை. ஒரு பின்னணி சக்தியின் துணையுடன் போராளிகள் ஆட்டுவிக்கப்பட்டனர்.

இந்த விடயம் பிரபாகரன், பொட்டம்மானிடமும் சென்றது. அவர்களிடம் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று- பிரச்சனையை கிளப்புகிறார்கள் என ஒரேயடியாக வீட்டுக்கே அனுப்பிவிடலாம். அப்படி நடந்தால் அது கருணாவையும் சீண்டும். கருணா நீண்ட நாளுக்கு ஒழித்து பிடித்து விளையாட முடியாது.
இரண்டாவது தெரிவு- விட்டு பிடிப்பது. ரெஜினோல்ட் ஆட்களின் விருப்பபடி, புலனாய்வுதுறை நிர்வாகத்திலிருந்து விலகி, கருணாவின் கீழ் செயற்பட அனுமதிப்பது. இப்படி செய்தால், கிழக்கு சிக்கல் உடனடியாக வளராது.
புலிகள் இரண்டாவதையே தெரிவு செய்தனர்.
ரெஜினோல்ட் ஆட்கள் விரும்பியபடி கருணாவின் கீழ் செயற்படலாமென புலிகள் அனுமதித்தனர். கிட்டத்தட்ட பதினேழு வரையான புலனாய்வுதுறை போராளிகள் இந்த சமயத்தில் கருணாவின் கீழ் சென்றனர். பதினேழு பேர் என்பது புலனாய்வு செயற்பாட்டில் பெரிய தொகை. ஆனால், புலிகளிற்கு அது பெரிதாக இடிக்கவில்லை. காரணம், அதில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். நீண்டகாலம் இயக்கத்தில் இருந்தவர்களும் புலனாய்வு செயற்பாட்டில் கில்லாடிகள் கிடையாது. புலனாய்வு செயற்பாட்டில் இரண்டு வகையானவர்கள் இருப்பார்கள். ஒன்று, நுணுக்கமாக திட்டமிட்டு பின்னணியில் இருந்து அதை செயற்படுத்தபவர்கள். மற்றையது, இப்படி நுணுக்கமான திட்டமிடும் திறமைகள் இல்லாவிட்டாலும், துணிந்து அதை செய்யும் ஆற்றல். புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலானவர்கள் இந்த வகையானவர்கள்தான்.
ரெஜினோல்ட் தலைமையில் புலனாய்வுத்துறையிலிருந்து ஒரு அணி வெளியேறியதும், பொட்டம்மான் நீலன் தலைமையில் புதிய நிர்வாக கட்டமைப்பொன்றை உருவாக்கினார். நீலன் எற்கனவே மட்டக்களப்பில் புலனாய்வுதுறையின் வேறொரு வேலையாக நின்றவர்.
ரெஜினோல்ட் தலைமையில் சென்றவர்களை வைத்து கருணா தனக்கு கீழ் இன்னொரு புலனாய்வு அணியை உருவாக்கினார். ஏற்கனவே ரமணனின் கீழ் ஒரு புலனாய்வு அணி இருக்க, ரெஜினோல்ட்டின் கீழ் இன்னொரு அணி உருவாக்கப்பட்டது. இரகசிய நடவடிக்கைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அணி அது!
2001ம் ஆண்டு. புல்லுமலையில் ஒரு கிளைமோர் தாக்குதல் நடந்தது. புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த அற்புதன் மாஸ்ரரின் மீது அந்த தாக்குதல் நடந்தது. அற்புதன் மாஸ்ரர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ரெஜினோல்ட் அணி வெளியேறிய பின்னர், அற்புதன் மாஸ்ரர்தான் மட்டக்களப்பு விவகாரங்களை கவனிக்க (நீலனின் கீழ்தான் செயற்பட்டவர்) பொட்டம்மானால் நியமிக்கப்பட்டவர். அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் நடத்தப்பட்டதென, புலிகளின் தலைமைக்கு கருணாவின் தகவல் மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.
புல்லுமலை புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசம். அங்கு அதற்கு முன்னரும் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதல் நடக்கவில்லை. பின்னரும் நடக்கவில்லை.
அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலின் பின்னணி என்னவென்பது புலிகளில் இரண்டு தளபதிகளிற்கு தெரியும். ஒன்று- கருணா. மற்றையது- பொட்டம்மான்!
(தொடரும்)
No comments:
Post a Comment