Friday, 22 February 2019

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 60 தளபதி சொர்ணத்தின் இறுதிக்கணங்கள்:

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 60 தளபதி சொர்ணத்தின் இறுதிக்கணங்கள்:

மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு வந்து சேர்வதற்குள் கிழக்கு படையணிக்கு போதும்போதுமென்றாகி விட்டது. கிழக்கை கைவிட்ட அழுத்தத்திற்கு அப்பால் வழியெல்லாம் இராணுவம் கொடுத்த தொல்லை, கொலரா பாதிப்பென போராளிகள் மரணத்தின் எல்லைவரை சென்றுவிட்டனர். பத்திற்கும் அதிகமானவர்கள் கொலராவினால் மரணமடைந்தார்கள். அவர்களை வழியில் புதைத்துவிட்டு அணிகள் நகர்ந்தன.
வன்னிக்கு வந்து சேர்ந்ததும் கிழக்கிலிருந்து வந்த அணிகளிற்கு விசேட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அந்த சமயத்தில் போராளிகள் மத்தியில் சொர்ணத்தின் நகர்வுகள் குறித்த நிறைய நகைச்சுவைகள் உலாவ ஆரம்பித்தன. மாவிலாற்றை பூட்டி யுத்தத்தை ஆரம்பித்து கைவசமிருந்த கிழக்கையும் கைவிட்டாயிற்று என்ற ரீதியில் அந்த நகைச்சுவைகள் இருந்தன.
இதன்பின்னர் மணலாறு கட்டளை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். வன்னிமீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தபோது இராணுவம் புதிய உத்தியொன்றை கையாண்டது. இதுவரையான நடவடிக்கைகளில் பிரதான வீதியை மையமாக கொண்டு நடவடிக்கையை செய்த இராணுவம், இம்முறை முதலில் காடுகளை கைப்பற்றியது. காடுகளை கைப்பற்றினாலே புலிகளை தப்பிக்க முடியாமல் வளைக்கலாமென்பது இராணுவத்தின் திட்டம்.
மேஜர் பசீலன்
மன்னாரில் நடவடிக்கையை ஆரம்பித்த படையினர், புலிகளின் ஆளணியை சேதமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், மணலாற்று நடவடிக்கையை ஆரம்பித்து விட்டனர். மணலாறு பெருங்காடு. புலிகளின் இதயம் ஒருகாலத்தில் அங்குதான் பேணப்பட்டது.
இந்தியப்படைகளுடனான மோதல் ஆரம்பிக்கவிருந்த சமயத்தில் பிரபாகரனை பாதுகாக்க மணலாற்று காட்டை புலிகள் தேர்வு செய்தனர். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்த மேஜர் பசீலன் மணலாற்று காட்டுக்குள் முகாம்களை அமைத்தார். பெண்புலிகளிற்கு செஞ்சோலை என்ற முகாமும், ஆண்களிற்கு ஜீவன், உதயபீடம் என பல முகாம்களும் அங்கு அமைக்கப்பட்டன.
இந்தியப்படைகளின் வெளியேற்றத்தின் பின் அங்கு இன்னும் நிறைய முகாம்கள் அமைக்கப்பட்டன. காட்டுக்குள் ஒரு குடியிருப்பு தொகுதியை போல அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட வலைப்பின்னலுடன் இருந்தன.
மணலாற்று காட்டுக்கு அப்பால் மண்கிண்டிமலை இராணுவ முகாமிருந்தது. அங்கிருந்து மணலாற்றின் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணி தாராளமாக வரத் தொடங்கியது. மணலாற்றின் காடு ஆழஊடுருவும் படையணியின் நகர்வுகளிற்கு வாய்ப்பாக அமைந்தது. மணலாற்றிற்குள் அடிக்கடி கிளைமோர் தாக்குதல்களை நடத்தி புலிகளிற்கு பேரிழப்பை ஏற்படுத்த தொடங்கினார்கள். மணலாறு காடு புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் ஆழ ஊடுருவும் படையணியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் இரண்டு பகுதியின் ஆதிக்கமும் நிறைந்த பகுதியென்றே அதை சொல்ல வேண்டியிருந்தது.
அந்த சமயத்தில் முழு வன்னியும் ஆழ ஊடுருவும் படையணியின் நெருக்கடியையும் உணர்ந்தது. மணலாறு மட்டும் தனித்து என்ன செய்ய முடியும்?
ஆழஊடுருவும் படையணி, அது ஏற்படுத்திய நெருக்கடிகளை அடுத்து வரும் வாரங்களில் விரிவாக பார்க்கலாம்.
சொர்ணத்தாலும் மணலாற்றை பாதுகாக்க முடியாமல் போனது. மணலாற்றை விரைவிலேயே இராணுவம் முழுமையாக கைப்பற்றிக் கொண்டது.
சொர்ணத்தின் சறுக்கிய இரண்டு தாக்குதல்கள் பற்றி சொல்வதாக குறிப்பிட்டோம். சம்பூரை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அடுத்தது மாங்குளம்.
இறுதி யுத்த சமயத்தில், மாங்குளத்தை கைப்பற்ற இராணுணுவத்தின் 57வது படையணி கடுமையான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. ஏ9 வீதி மற்றும் மல்லாவி வீதி, இரண்டுக்கும் இடையிலான காட்டுப்பகுதியென பலமுனை நகர்வை மேற்கொண்டது. அப்போது கிளிநொச்சியிலிருந்து ஏ9 வீதியூடான விநியோகத்திலும் புலிகள் சிக்கலை எதிர்கொண்டபடியிருந்தனர். மாங்குளத்திற்கு பின்பக்கமாக ஏ9 வீதியையும் இராணுவ அணிகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதிதான் புலிகளிடம் ஓரளவு பாதுகாப்பாக இருந்தது. அதை தவிர்ந்தால், சில சிறிய வீதிகள்.
மாங்குளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியென்பதால் அந்த பகுதி கட்டளை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். நீண்டகாலத்தின் பின்னர் உக்கிர மோதல் களமொன்றில் சொர்ணம் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது தளபதிகளை களமுனைக்கு கொண்டு செல்ல பவள் கவச வாகனங்களைத்தான் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த ஏற்பாடு.
சொர்ணம் பதவியேற்றதும் அந்த பகுதியில் நிறைய அதிரடி மாற்றங்களை செய்தார். வரையறுக்கப்பட்ட அணிகளே இருந்ததால் அவசியமில்லாத பகுதிகள் என கருதிய இடங்களிலிருந்து அணிகளை எடுத்து, சில இடங்களில் நிலைகளை பலப்படுத்தினார். அது பலனளிக்கவில்லை. மாங்குளம் நகரத்திற்குள் ஒரு விடிகாலை இராணுவம் நுழைந்து விட்டது.
இராணுவத்தின் இரகசிய நகர்வால் மாங்குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகளால் சுதாகரிக்க முடியவில்லை. கணிசமான பொருட்களை கைவிட்டு பின்வாங்க வேண்டியதாகிவிட்டது. அப்படி கைவிடப்பட்டவற்றில் ஒன்றுதான், சொர்ணத்தின் பயணத்திற்கு வழங்கப்பட்டிருந்த பவள் கவசவாகனம். வாகனத்தையும் கொண்டுவர முடியாத நெருக்கடி நிலை புலிகளிற்கு.
வாகனத்தில் போய், நடந்து திரும்பி வந்தார் என போராளிகள் மட்டத்தில் சொர்ணம் குறித்த ஒரு நகைச்சுவை உலாவ ஆரம்பித்தது. எவ்வளவு நெருக்கடியென்றாலும் நகைச்சுவைதானே போராளிகளை உயிர்ப்போடு வைத்திருந்தது. இப்படியான நகைச்சுவைகள் தமது தளபதிகள் குறித்த எதிர்மறை உணர்வுடன் பரவுபவை அல்ல. ஒரு சுவாரஸ்யமான “கலாய்ப்பு“ என்று எடுத்துக் கொள்ளலாம்.
யாழ்ப்பாண தாக்குதலின் பின்னர் சொர்ணம் இரண்டு தாக்குதலில்தான் கலந்து கொண்டார் என முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அவை இரண்டையும் மேலே குறிப்பிட்டு விட்டோம். ஆனால் இன்னொரு தாக்குதலும் உள்ளது. இதிலும் சொர்ணத்தின் முக்கிய பாத்திரம் உள்ளது. இந்த தாக்குதலை பற்றி இந்த பகுதியில் இன்னும் சற்று தாமதமாகத்தான் பேச வேண்டும். ஏனெனில், இதுதான் விடுதலைப்புலிகள் முழுமையாக ஒருங்கிணைத்து செய்த பெரிய தாக்குதல்களில் இறுதியானது. 1996 இன் பின்னர் களமுனையில் சொர்ணம் ஜொலிக்கவில்லை. மாறாக தீபன் பெருந்தளபதியாக வளர்ந்தார். அதைவிட லோரன்ஸ், குணம், ஆதவன், வேலவன், குமரன், கீர்த்தி, நாகேஸ், நகுலன் என இளநிலைத் தளபதிகள் பலர் வளர்ச்சியடைந்தனர். இதைவிட, பால்ராஜ் இருந்தார். யுத்தம் ஆரம்பித்த சமயத்திலேயே இவர் மரணமானார். இறுதிக்காலத்தில் பால்ராஜ் மற்றும் பிரபாகரன் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இருந்திருந்தால் பால்ராஜ் களமுனையில் பெரும் தளபதியாக இருந்திருப்பார். அவரது உடல்நிலையும் ஒத்துக்கொள்ளவில்லை.
இவர்கள் எல்லாம் இருந்தபோதும் சொர்ணத்தை முக்கிய களங்களிற்கு பிரபாகரன் அழைத்தார். சொர்ணம் மீது வைத்திருந்த நம்பிக்கை அவ்வளவு. பிரபாகரன் குடும்பத்தில் சொர்ணம் வைத்திருந்த விசுவாசமும் அப்படி. அதை நிரூபிப்பதை போலவே அவரது மரணமும் இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் தேவிபுரத்தின் மீது புலிகள் நடத்திய வலிந்து தாக்குதலில் சொர்ணம் கால் தொடையில் காயமடைந்தார். அவரது தொடை எலும்பு உடைந்து நடக்க முடியாத நிலைமைக்கு வந்தார். போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலையிலும் முள்ளிவாய்க்காலில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
மே மாதம் 14ம் திகதி. அவரது முகாமில் எறிகணையொன்று வீழ்ந்தது. அதில் மீண்டும் சிறிய காயமடைந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முடிவு அந்த திகதிகளில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பேராச்சரியங்கள் நடந்தாலும் புலிகளை யாரும் காப்பாற்ற முடியாதென்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
நடமாட கூடியவனாக இருந்தால் இறுதிவரை சண்டையிட்டு பிரபாகரனிற்கு முன்னதாக மரணமடைபவராக சொர்ணம் இருந்தார். அது முடியவில்லை. “அண்ணைக்கு ஒன்று நடக்கும்வரை உயிரோட இருந்து பார்த்துக் கொள்ள விரும்பவில்லை“ இதுதான் தன்னுடனிருந்த போராளிகளிற்கு சொர்ணம் சொன்ன இறுதி வசனம்.
மே 14ம் திகதியன்று சயனைட் குப்பியை அருந்தி சொர்ணம் மரணமானார். அவரது உடலை அந்த முகாமிலேயே போராளிகள் புதைத்தார்கள்.
(தொடரும்)


No comments:

Post a Comment