கடற்புலிகளினால் முல்லைத்தீவிற்கு ஒரு ஆயுதக்கப்பலையும் கொண்டு வர முடியாமலிருந்தது இயக்கத்திற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தளபதிகளின் சந்திப்புக்களின் போது, சூசை மௌனமாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் நிக்கோபர் தீவுகளிற்கு செல்லும் யோசனையை சிறீராம் முன்வைத்தார் என்பதை கடந்த வாரம் தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
2002 இற்கு பின்னர் பிரபாகரனில் ஏற்பட்டிருந்த முக்கிய மாற்றமொன்றை பற்றி இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இயக்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளித்து, தளபதிகளிடமே அதை விட்டு விட்டார். அதுவரை இயக்கத்தின் அனைத்து முடிவுகளையும் அவர் ஒருவர்தான் எடுத்தார். அந்த முடிவுகளை செயற்படுத்தும் வரை பக்கா இரகசியமாக வைத்திருப்பார். எவ்வளவு பெரிய தளபதியாக இருந்தாலும், அந்த விசயத்துடன் சம்பந்தப்படாதவர் என்றால், சம்பவம் நடக்கும் வரை அவருக்கு ஒன்றுமே தெரியாது.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம். யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி சென்றதன் பின்னர் முல்லைத்தீவு முகாமை தாக்க பிரபாகரன் முடிவெடுத்தார். அதற்காக சாள்ஸ் அன்ரனி, இம்ரான் பாண்டியன், ஜெயந்தன், விக்டர், மாலதி, புலனாய்வுத்துறை, சிறுத்தை படையணிகளில் இருந்து ஆட்களை திரட்டி விசுவமடு, முத்தையன்கட்டு, நெட்டாங்கண்டல் பகுதிகளில் ஒத்திகை பயிற்சி நடந்தது. இந்த தாக்குதலுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பொட்டம்மான், தீபன், பால்ராஜ், கடாபி, பானு, சூசை, விதுஷா போன்ற முக்கிய தளபதிகளிற்கு மட்டும்தான் விசயம் தெரியும். மற்றவர்கள் இயக்கம் ஏதோ திட்டமிடுகிறது என்றளவில் அறிந்து வைத்திருந்தார்களே தவிர, எங்கே… என்ன நடக்கப் போகிறது என்பதை அறியவில்லை.

தாக்குதலிற்கு மூன்று நாட்களின் முன்னர் அளம்பில், வற்றாப்பளை பகுதிகளில் அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டபோது, அவர்களிற்கான உணவை கொண்டு வந்து கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது குட்டியிடம். பின்னாளில் நிதித்துறையின் பாண்டியன் வாணிபத்திற்கு பொறுப்பாக இருந்து, புலிகளிற்கு அதிக வருவாயை ஈட்டிக்கொடுத்தவர் அவர். இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், தாக்குதலிற்காக முல்லைத்தீவு முகாமிற்குள் நுழைய தயாராக இருந்த அணிகளிற்கான இரவு உணவை எடுத்துக்கொண்டு, ரோஸா பஸ் ஒன்றை குட்டியே செலுத்திக் கொண்டு வந்தார். அவ்வளவு இரகசியம் பேணினார்கள்.
பின்னாளில் இந்த தன்மை குறைந்து விட்டது. 2004 இன் பின்னர் வாராந்தம் தளபதிகள் கூட்டம் நடக்க ஆரம்பித்தது. அதில்தான் இயக்கத்தின் நிர்வாக, நடைமுறைரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டன. தளபதிகளிடமே அந்த அதிகாரம் வழங்கப்பட்டு விட்டது. தளபதிகள் கூட்டத்தில் பிரபாகரன் பெரும்பாலும் கலந்துகொள்வார். சமாதான காலத்தின் முன்னரும் இடையிடையே தளபதிகள் கூட்டம் நடக்கும். அன்று பிரபாகரன் வர முடியாவிட்டால் கூட்டம் நடக்காது. ஆனால் 2004 இன் பின்னர் நிலைமை மாறியது. தளபதிகளிடம் பொறுப்பை பகிர்ந்து விட்டு, அதை கண்காணிப்பவராக பிரபாகரன் மாறினார். தளபதிகள் கூட்டத்திற்கு பிரபாகரன் வர முடியாவிட்டாலும், கூட்டம் நடக்கும். அப்போது பொட்டம்மானே கூட்டத்தை தலைமைதாங்கி நடத்துவார். 2003 இன் பின் இயக்கத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைவராக பொட்டம்மானே இயங்கினார். புலிகளின் தலைமையில் பின்னர் வந்த மாற்றத்தை இந்த தொடரில் பின்பகுதியில் சொல்கிறோம்.
தளபதிகளிடம் பொறுப்பை கொடுத்த பின் பிரபாகரன் ஒதுங்கியிருந்தார், முடிவுகள் கூட்டு முடிவுகளாக இருந்தன என்று சொன்னோம் அல்லவா, அதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. பொட்டம்மானையே உட்கார வைத்து பாடமெடுத்த சம்பவம் அது. அதற்கு முன்னர் கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக சிறீராம் பற்றி சொல்லிவிடுகிறோம்.

தளபதிகள் சந்திப்பில் ஆளாளுக்கு சூசைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படித்தான் அந்த குடைச்சல் இருக்கும். புலிகள் எப்படித்தான் மண் அணை அமைத்தாலும், கடுமையாக சண்டை பிடித்தாலும் மன்னாரில் இராணுவம் முன்னேறுவதை தடுக்க முடியவில்லை. முதலில் தளபதி ஜெயம் மன்னார் களமுனையை கவனித்தார். அவரால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லையென, பின்னர் தளபதி பானுவிடம் மன்னார் களமுனை ஒப்படைக்கப்பட்டது. அவராலும் இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை.
இராணுவத்தின் நகர்வை புலிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்- போதுமான எறிகணைகள் கைவசம் இல்லை. இருப்பில் இருந்த கொஞ்ச எறிகணையை ஒவ்வொரு களமுனைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து கொடுத்திருந்தார்கள். அனேகமாக மாதம் 50 செல் என்ற அளவில்தான் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
புலிகள் முன்னர் பிடித்த சண்டைகளில் எறிகணைகளை தாராளமாக பாவித்தார்கள். எந்த இராணுவமாக இருந்தாலும், மழைபோல எறிகணைகள் விழுந்தால் நிலைகுலைந்துவிடும். இராணுவம் முன்னேறி வரும்போது, களத்தில் இருந்து எறிகணை உதவி கேட்பார்கள். ஒவ்வொரு படிநிலையாக அந்த கோரிக்கை கடத்தப்பட்டு, கட்டளைதளபதியிடம் வரும். மோட்டார் அணியை பானுவோ, ஜெயமோ தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட இடத்திற்கு செல் அடிக்குமாறு உத்தரவிடுவார். உண்மையில் உத்தரவிடுவார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அப்படித்தான் நடக்கும். ஆனால் எறிகணை தட்டுப்பாடு வர, கட்டளைதளபதிகள் உத்தரவிட்டாலும் எறிகணை வராது!
எறிகணை இருந்தால்தானே அடிப்பதற்கு.
தப்பித்தவறி ஒன்றிரண்டு இருந்தாலும், மோட்டார் அல்லது ஆட்லறி படையணியின் அனுமதியெடுத்து விட்டு ஒன்றோ, இரண்டோதான் அடிக்கலாம். இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க இது போதாது.
தளபதிகள் சந்திப்பில், இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியாத விடயம் பேசப்படும்போது, களமுனை தளபதிகள் எறிகணை கேட்பார்கள். ஆயுத இருப்பில் எறிகணை இருக்காது. புதிதாக வந்திறங்கினால்தான் உண்டு. எல்லோரது பார்வையும் சூசையிடம் திரும்பும்.
ஆயுதம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாலே கப்பல்கள் அழிக்கப்பட்டு கொண்டிருந்த நெருக்கடியான சமயத்தில், என்ன செய்வதென தெரியாமல் சூசை திண்டாடினார். அந்த சமயத்தில்தான் சிறீராம் நிக்கோபர் தீவுகளிற்கு செல்லும் யோசனையை வைத்தார்.

நிக்கோபர் தீவுகளிற்கு கடற்புலிகளின் விநியோக கப்பல்களில் சென்று, அங்கு வைத்தே ராங்கர்களில் இருந்து ஆயுதங்களை மாற்றிக்கொண்டு வரலாம் என்பது சிறீராமின் திட்டம். அதை தானே பொறுப்பெடுத்து செய்கிறேன் என சூசையிடம் கேட்டார்.
ஆயுதம் ஏற்றிய ராங்கர்கள் முல்லைத்தீவிற்கு வர முடியாத நிலையில், சிறிய விநியோக படகுகளில் நிக்கோபர் கடற்பரப்பில் இருந்து ஆயுதங்களை கொண்டு வருவதுதான் புலிகளிற்கு இருந்த ஒரே வழி. ஆனால் ரிஸ்க் ஆன வேலை. முக்கியமாக பாதுகாப்பு பிரச்சனை. கடற்படை சுலபமாக தாக்கியழிக்கும். இரண்டு, விநியோக படகுகளின் எரிபொருள் தாங்கியின் கொள்ளளவு நிக்கோபர் கடற்பரப்பிற்கு போய்வர போதாது. எரிபொருள் விநியோகத்திற்காக இன்னொரு படகு பாவிக்க வேண்டும். சிலவேளை அந்த படகிற்கு ஏதும் ஆனால்?
எல்லா படகுகளின் நிலைமையும் ஆபத்தாகி விடும். இதைவிட இன்னொரு பெரிய சிக்கலிருந்தது.

2006 இன் பின் வெளிநாட்டிலிருந்து புலிகளிற்கு ஒரு செல் கூட வராமல் தடுத்து விட்டதாக கடற்படை கூறிக்கொண்டிருக்கிறது. அது உண்மையா? புலிகள் முகமாலையை கைவிடுவதற்கு முதல்நாள் முல்லைத்தீவிற்கு வந்த கப்பல் யாருடையது என்பதையும், பிரபாகரன் மிக இரகசியமாக திட்டமிட்ட நடவடிக்கை எதுவென்பதையும் அடுத்த பாத்தில்- நாளை- குறிப்பிடுகிறோம்.
(தொடரும்)
No comments:
Post a Comment