Friday, 22 February 2019

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 33 கருணாவிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்த பிரபாகரன்!

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 33 கருணாவிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்த பிரபாகரன்!

2004 மார்ச் 25ம் திகதி.

இந்த நாள் மிக முக்கியமான நாள். கருணா பிரிவை எப்படி கையாள்வதென சிந்தித்துக்கொண்டிருந்த புலிகள், பிளவு பகிரங்கமாக முன்னர் அதை சமரச முயற்சிகளின் மூலம் சரி செய்ய முயன்றதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். சமரச முயற்சிகளின் மூலம் பிளவை சரிசெய்ய முடியாதென்பதை தெரிந்த பின்னர், மார்ச் 25ம் திகதி அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

“எங்கள் தேசத்தையும், அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணைவிட்டு அகற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது“ என்பதே புலிகளின் அறிவிப்பு. அதாவது கடுமையான போரொன்று ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கான கட்டியமாக அது அமைந்தது.

அத்துடன் தமது பாணியில் இன்னொரு எச்சரிக்கையையும் இதில் இணைத்திருந்தனர். “கருணாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்க்கும் எவரும் எங்கள் பாதைக்கு எதிரான துரோகிகளாக கருதப்படுவார்கள்“ இதுதான் அந்த அறிவித்தல்.

கருணா குழுவிற்கு எதிரான புலிகளின் போர் ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பித்தது என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

கருணாகுழுவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், அவர்களின் பலத்தை புலிகள் மதிப்பிட்டனர். தலைமை செயலக புள்ளிவிபரங்களின்படி 5,750 வரையான போராளிகள் இருந்தனர். ஆனால் இதில் 2,000 பேர் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்கள். இவர்கள் இதுவரை துப்பாக்கியால் ஒரு உயிருள்ள மனிதனை குறிவைத்து சுட்டே இருக்க மாட்டார்கள்.

ஏற்கனவே 200 வரையானவர்கள் வன்னிக்கு தப்பி சென்றுவிட்டனர். இவர்களைவிட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள், இரண்டு பக்கத்தையும் சாராமல் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்ளை ஒன்றாக்கி சந்திப்பொன்றை நடத்தினார் கருணா. ஆனால் அவர்கள் யாரையும் ஆதரிக்க தயாராக இருக்கவில்லை. அவர்களை வைத்து போரிட முடியாது, முக்கியமான கட்டத்தில் காலைவாரி விடுவார்கள் என்பது கருணாவிற்கு தெரியும். அதனால் அவர்களை வீட்டுக்கே அனுப்பி வைத்தார்.

இப்பொழுது 2,500 பேர்தான் கருணாவின் கட்டுப்பாட்டில் உருப்படியாக இருந்தவர்கள். இதைவிட, கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இளையவர்கள், காயமடைந்தவர்கள் என 500 பெண்களை ஏற்கனவே வீட்டிற்கு அனுப்பியிருந்தார்கள். தேவை ஏற்பட்டால் மீண்டும் அழைப்போம், எம்மிடம் வரவேண்டுமென்றுதான் அவர்களிற்கு கூறப்பட்டிருந்தது.

கருணாவின் போரிடும் ஆட்களின் எண்ணிக்கை 2,000 ஆக சுருங்கியது.

இதில் 500 வரையானவர்களை நம்ப முடியாத நிலையில் இருந்தார்கள். தனக்கு விசுவாசமான தளபதிகளின் மூலம் செய்த கணக்கெடுப்பில் இவர்களை அடையாளம் கண்டிருந்தார்கள்.

கடும் நெருக்கடியான கட்டத்தில், தன்னிடமிருந்த படையணிகளை கருணா ஏன் குறைத்தார்?

இதற்கு இரண்டு காரணம். முதலாவது- விசுவாசமாக செயற்படுவார்கள் என்ற உத்தரவாதமில்லாத படையணிகளை கூடவே வைத்திருப்பது ஆபத்தானது. அவர்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து வீடுகளிற்கு அனுப்பிவிட்டால் சிக்கலிருக்காது. எப்பொழுதும் அவர்களில் ஒரு கண் வைத்திருந்தால் போதும். புலிகள் மட்டக்களப்பிற்குள் புகுந்து திடீரென அவர்களை ஒழுங்கமைக்க முடியாது. அவர்களால் உடனடி ஆபத்து ஏற்படப்போவதில்லை.

ஆனால், இதில் கருணா கவனிக்காமல் விட்ட விசயம் ஒன்றுள்ளது. கருணாவுடன் இணைந்திருக்க விருப்பமில்லாமல் வெளியேறியவர்கள், புலிகளின் இரகசிய அணிகள் உள்நுழையும்போது, அவர்களிற்கு இரகசியமாக உதவ வாய்ப்பிருந்தது. புலிகளின் இரகசிய அணிகளை உள்ளே விடாமல் தடுக்கலாமென கருணா நம்பினார். ஆனால், அதை சில நாட்கள் மட்டுமே செய்யலாமென்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியாக இருந்தும், புலிகளின் ஆற்றல் எப்படியானதென்பதை கருணா புரிந்து கொள்ளவில்லை. பொட்டம்மானுடன் இருந்த தனிப்பட்ட தகராற்றினால், புலனாய்வுத்துறையின் ஆற்றலை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிற்கு ஏற்படாமல் போயிருக்கலாம்.

கிழக்கு பிரிவு நடந்ததும், கருணாவின் பேட்டிகள் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. எல்லா பேட்டிகளிலும் கருணா தவறாமல் சொன்ன ஒரு விசயம்- “புலிகளின் போர் வெற்றிகளிற்கு நான்தான் காரணம். நான் இல்லையென்றால் புலிகளால் அவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது“ என்பது.

இதன்மூலம், புலிகளின் போர்த்தந்திர மூளை பிரிந்துவிட்டதென்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. புலிகளால் கருணாவுடன் மோத முடியாதென்ற அபிப்பிராயமும் சிலரிடம் இருந்தது. கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றப்போகிறோம் என புலிகள் அறிவித்ததும், கருணாவுடன் மோதி புலிகள் மூக்குடைபட போகிறார் என்று ஒரு பகுதியினர் நினைத்தனர். ஒருவேளை புலிகள் தோற்றுவிட வாய்ப்பிருக்குமோ என்று பதற்றப்பட்டவர்கள் இன்னொரு சாரர்.

அதனால்தான் போர்த்தந்திரத்தில் சிறந்தவர் யார் என்ற கேள்வியெழுந்தது. இந்த கேள்விக்கு, அந்த மோதல் பதில் தந்துவிடுமென்பதால், எல்லோரும் உச்சக்கட்ட டென்ஷனில் மோதலை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மோதலில் வெல்பவரே ஈழ யுத்தத்தில் புலிகள் பெற்ற வெற்றிகளின் உண்மையான கதாநாயகன் என்று அர்த்தமாகும் என்றுதான் ஆய்வாளர்களும் எழுதினார்கள்.

புலிகள் மட்டக்களப்பிற்குள் எப்படியெல்லாம் ஊடுருவ வாய்ப்புள்ளதென, தனது தளபதிகளுடன் உட்கார்ந்து கருணா ஆலோசனை நடத்தினார். திருகோணமலையில் நிலைகொண்டுள்ள சொர்ணம் தலைமையிலான அணி, வெருகல் ஆற்றை கடந்து வர முயலும், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பொலன்னறுவ பிரதான வீதியால் வருவார்கள், அடர்ந்த காட்டுக்குள் இருந்த பெய்ரூட் பாதையால் (மட்டக்களப்பிற்கும் வன்னிக்குமான இரகசிய காட்டுப்பாதைக்கு புலிகள் வைத்திருந்த பெயர் பெய்ரூட் பாதை) இரகசியமான பதுங்கி வருவார்கள் என்று கருணாவின் தளபதிகள் ஆளாளுக்கு சொன்னார்கள். அத்தனை பாதைகளையும் கவனமாக பார்க்கும்படி கருணா உத்தரவிட்டார்.

கருணாவிடம் சில ஆட்லறிகளும், 120 mm மோட்டார்களும் இருந்தன. அவற்றையும் வெருகல் ஆற்றை குறிவைத்து நிறுத்தினார்கள்.

மட்டக்களப்பிற்கு வரும் பிரதான வீதிகள் அனைத்திலும் கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல கடற்புலிகளின் முகாம்களான வாகரை, பால்சேனை, சாலைத்தீவு ஆகியவற்றிலும் கருணா தனது படையணிகளை நிறுத்தினார்.

சிலநாளில் அந்த முகாம்களை அகற்றினார். கடல்வழியாக புலிகளின் பெரும் படையணிகள் நகர முடியாது, அது போர்நிறுத்த மீறலாக அமையும் என்பதால் புலிகள் அப்படியொரு முடிவை எடுக்கமாட்டார்கள் என நினைத்தார். அதேபோல பிரதான வீதிகளாலும் புலிகள் வர முடியாது, ஆயுதங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள்ளால் நுழைய முடியாதென கணக்கு போட்டார். தனது படையணிகளை, மட்டக்களப்பின் வடக்காக உள்ள கோரளைப்பற்று பகுதியில் நிறுத்தி, கடுமையான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கினார். செங்கலடிக்கு வடக்காக உள்ள பகுதிகள், கடலேரியின் மேற்கு கரை பிரதேசங்கள், தரவை-குடும்பிமலை பகுதிகளை வலுப்படுத்தினால், கிழக்கை தக்கவைக்கலாமென நினைத்தார்.

ஆனால் புலிகள் போட்டது வேறு திட்டம்.

புலனாய்வுத்துறை, மற்றும் கிழக்குடன் பரிச்சயமுள்ள போராளிகளை இரண்டு, மூன்று பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாக்கி, மட்டக்களப்பிற்குள் அனுப்பி வைத்தனர். அவர்கள் கிழக்கிற்குள் குழப்பங்களை ஏற்படுத்தினர். மட்டக்களப்பில் முக்கிய பொறுப்புக்களில் இருந்த யாழ்ப்பாணத்தவரை இலக்கு வைத்து கருணா குழு தாக்குதலை ஆரம்பித்திருந்தது. இப்படி இரகசியமாக ஊடுருவி சென்றவர்கள், கருணா அணிக்கு பதிலடி கொடுத்தார்கள். தாக்குதல், பதிலடியென இருதரப்பும் மாறிமாறி தாண்டவமாடியதில் கிழக்கில் பெரும் உயிரனர்த்தங்கள் ஏற்பட்டன.

இந்த ஆடுபுலியாட்டத்தை தொடர விடாமல், புலிகள் கிழக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் படை நடவடிக்கையை ஆரம்பித்தனர். அது ஏப்ரல் 09ம் திகதி.

திருகோணமலையில் ஒழுங்கமைக்கப்பட்ட அணிகள், வெருகல் ஆற்றை சிறு தோணிகளில் கடந்து, முகத்துவாரத்தில் இறங்கினார்கள். இந்த தாக்குதலின் முன்னர் புலிகள் இன்னொரு ஏற்பாட்டை செய்திருந்தனர்.

கருணாவின் இரண்டாம் மட்ட தளபதிகள் பலர் புலிகளுடன்தான் இணைந்திருந்தனர். அவர்கள் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் கருணா அணியினரை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த பிரிவு கொள்கையினடிப்படையில் ஏற்பட்டதல்ல- தனிநபர் பலவீனங்களால் ஏற்பட்டது, அமைப்பை பலவீனப்படுத்தாமல் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள், மீண்டும் இணைபவர்களிற்கு மன்னிப்பு உண்டு என பேசினார்கள். இதற்கு நல்ல பதில் கிடைத்தது.

கருணா அணியிலிருந்த கீழ்மட்ட போராளிகளில் பலர் தவிர்க்க முடியாமல் அங்கிருந்தவர்கள். தளபதிகளை போல அவர்களால் நினைத்த நேரத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளியேற முடியாது. வசதியில்லை. அதைவிட முக்கிய காரணம், பலருக்கு கிளிநொச்சி தெரியாது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள்ளால் செல்வதில் எப்படியான ஆபத்திருக்குமென்பது அவர்களிற்கு தெரியாமலிருந்தது. அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், கருணா ஆதரவாளர்களை போல தம்மை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

தமது பொறுப்பாளர்கள் பலர் கிளிநொச்சிக்கு தப்பி சென்றதை அவர்கள் அறிந்திருந்தனர். தப்பிச்சென்ற பொறுப்பாளர்கள், இப்பொழுது தமக்கு எதிர்முனையில் படையணிகளுடன் வந்து நிற்கிறார்கள் என்றதும், கருணா அணியிலிருந்த பலரின் மனது மாறியது. “உங்களிற்கு எதிராக எம்மால் சண்டைபிடிக்க முடியாது. எந்த முனையில், எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் உங்களுடனேயே இணைந்து கொள்கிறோம்“ என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்.

வெருகல் முகத்துவாரத்தை புலிகள் கடந்ததும், கருணா அணியிலிருந்த ஒரு தொகுதி போராளிகள் புலிகளுடன் இணைந்து கொண்டனர். புலிகளை எதிர்த்தவர்கள் சிறு தொகையினரே. அவர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்த, மரணமானவர்கள் போக, எஞ்சியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

வெருகலில் ஊடுருவும் புலிகளை குறிவைத்து பத்து 120 MM பீரங்கிகளை காட்டுப்பகுதியொன்றில் கருணா அணியினர் மறைத்து வைத்திருந்தனர். புலிகளுடன் இணைந்த கருணா அணியினர், அந்த பீரங்கி நிலைகளை பற்றிய தகவல்களை சொல்லிவிட்டனர்.

கருணாவின் அதி தீவிர விசுவாசிகளே பீரங்கி அணியில் இருந்தனர். தாக்குதல் கட்டளைக்காக காத்திருந்தார்கள். அவர்களிற்கு தெரியாமல், அவர்களின் நிலைகளின் பின்பக்கத்தால் இரகசியமாக சென்ற புலிகள், எந்த எதிர்ப்புமில்லாமல் பீரங்கிகளை கைப்பற்றினர். இதற்கு பின்னர்தான் பல்சேனையில் தரையிறக்கம் நடந்தது.

வாகரையை அண்டிய பகுதிகளை புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், கருணா அணியினர் ஏ 11 வீதியை கடந்து தொப்பிக்கல காட்டுப்பக்கமாக பின்வாங்கினர்.

வாகரையை இழந்தாலும் பரவாயில்லை, புலிகளை சமாளிக்க முடியுமென கருணா நினைத்தார். அதற்கு போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் உதவுமென நினைத்தார். கருணாவின் பிரதான மறைவிடங்களாக மீனகம், தேனகம், மருதம் மற்றும் தொப்பிக்கல காட்டு பகுதிகளிற்கு புலிகளின் படையணிகள் செல்வதென்றால், மட்டக்களப்பு- பொலன்னறுவ வீதியான ஏ 11 வீதியை கடந்து செல்ல வேண்டும். பெருந்தொகையான ஆயுதங்களுடன், அதிகளவான போராளிகள் வீதியை கடப்பது போர்நிறுத்த மீறலாகும், புலிகளால் வீதியை கடக்க முடியாது. அதையும் மீறி கடக்க முயன்றாலும், இராணுவம் அதை அனுமதிக்காது என கருணா கணக்கு பண்ணினார். கருணாவின் கணக்கை உறுதிப்படுத்தும் விதமாக இராணுவமும் ஒரு நகர்வை செய்தது. ஏ 11 வீதியில் அதிகளவான இராணுவம் குவிக்கப்பட்டது.

ஆனால் புலிகள் ஏ 11 வீதியை கடக்க முடிவெடுத்தார்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை வீதியை கடப்பதென புலிகள் தீர்மானித்தனர்.

உடனடியாக அரச உயர்மட்டத்திற்கு ஒரு தகவல் அனுப்பினார்கள். “எங்கள் அமைப்பிற்குள் ஏற்பட்ட உள்வீட்டு பிரச்சனையொன்றை சரி செய்துகொண்டிருக்கிறோம். இதில் இராணுவம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டால் விளைவு பாரதூரமாக இருக்கும். அது போர் நிறுத்த உடன்படிக்கையை முறித்துக்கொண்டாலும் பரவாயில்லை“. இதுதான் புலிகள் அனுப்பிய மெசேஜ்.

கருணா விவகாரத்தை புலிகள் எவ்வளவு சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பது அரசாங்கத்திற்கும் தெரிந்திருந்தது. தமது உள்வீட்டு சிக்கலை தீர்ப்பதில் இராணுவம் குறுக்காக நின்றால், அதை வைத்தே புலிகள் சமாதான உடன்படிக்கையை முறித்துவிடலாமென அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசு நினைத்தது. அதனால், ஏ 11 வீதியை கடக்கும் புலிகளை தடுக்காதீர்கள் என்ற உத்தரவை இராணுவத்திற்கு பிறப்பித்தார்கள்.

முகாம் காவலில் கருணா குழு

இந்த சமயத்தில் புலிகளின் இன்னொரு அணி, அம்பாறையின் திருக்கோவிலில் தரையிறங்கியது. அதில் கிழக்கில் முக்கியஸ்தர்கள் பலர் இருந்தனர். திருக்கோவிலில் ஒருநாள் தங்கியிருந்தபடி, மட்டக்களப்பின் கஞ்சிகுடிச்சாறில் இருந்த கருணாவின் தளத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினார்கள். அங்கிருந்த தளபதிகளிற்கு, இந்த பிளவின் அடி முதல் நுனி வரை புரிய வைத்தனர். வீணாண சகோதர யுத்தம் எப்படியான விளைவை ஏற்படுத்தும் என்பதையும், கருணா இனி தமிழர்களின் விடுதலைக்காக செயற்படும் வாய்ப்பில்லையென்பதையும் புரிய வைத்தனர். கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில், கஞ்சிகுடிச்சாறு முகாமில் இருந்த அனைவரும் புலிகளுடன் இணைந்தனர்.

கருணாவின் அரசியல்துறை செயலகமான தேனகம், கரடியனாற்றில் இருந்தது. இராணுவ அணிகள் நிலைகொண்டிருந்த மீனகம், தரவையில் இருந்தது. கருணாவின் தங்குமிடமான மருதம் முகாம், குடும்பிமலையில் இருந்தது. கஞ்சிகுடிச்சாறு முகாம் புலிகளிடம் வீழ்ந்ததையடுத்து, இத்தனை முகாம்களும் புலிகளின் நேரடி தாக்குதல் இலக்கிற்குள் வந்தன. ஆனால் கஞ்சிகுடிச்சாறு விவகாரம் கருணாவின் காதிற்கு போகவில்லை. காரணம், அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாக புலிகளுடன் இணைந்து விட்டனரே!

கஞ்சிகுடிச்சாறு முகாமிலிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களினடிப்படையில், கருணாவின் மிக முக்கியமான இரண்டு முகாம்களை புலிகள் குறிவைத்தனர். ஒன்று தரவை. மற்றையது, வடமுனையிலிருந்த முகாம். இந்த வடமுனை முகாமில்தான், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாமென புலிகள் நம்பினார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment