சிவராம் கொலை இரகசியம்- தொடர் 04

                                           புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொலையில் சிவராமின் பங்கு என்னவென்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதெனில், இந்தியாவின் உதவி தேவையென்ற நிலையில் உமா மகேஸ்வரன் இந்திய உதவியை பெற தயாராக இருக்கவில்லை. உமாமகேஸ்வரன் தலைமையி லிருந்து இல்லாமல் போனால் மாத்திரமே நாங்கள் தப்பிக் கலாமென அவர் தொடர்ந்து செய்து வந்த பிரசாரம், கொலையை தூண்டியது என பின்னர் கைதானவர்கள் கூறியிருக்கிறார்கள்.
உமாமகேஸ்வரனை கொன்றதும், தாக்குதலாளிகள் தலை மறைவாகி விட்டனர். பலர் இந்தியாவிற்கு ஓடிவிட்டனர். சுவிற்சர்லாந்து வரை சிலர் ஓடி, அவர்களையும் புளொட் தேடிச் சென்று கொலை செய்ததையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டதும், இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை புளொட் தேட தொடங்கியது. அப் போது சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் மூலமே கொலை யின் பின்னணி வெளிப்பட தொடங்கியது.
எல்லோரது வாக்குமூலத்திலும் சிவராமின் பிரச்சாரம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வாக்குமூலங்கள் இன்றும் புளொட் அமைப்பினால் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பது கூடுதல் தகவல்!
உமா மகேஸ்வரன் கொலையுடன் சம்பந்தப்பட்ட மற்றவர்களிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, சிவராமிற்கும் மரணதண்டனை விதிக்க வேண்டுமென புளொட்டிற்குள் குரல்கள் எழுந்தன. புளொட்டின் இராணுவ பொறுப்பாளராக இருந்த மாணிக்கதாசன் இதில் முக்கிய மானவர். சிவராமிற்கு மரணதண்டனை விதித்தே தீர வேண்டுமென இறுதிவரை விடாப்பிடியாக நின்றார். எனினும், புளொட்டின் ஏனைய சில முக்கியஸ்தர்கள் அதை தடுத்து விட்டார்கள். சிவராம் இந்த கொலையில் நேரடியாக தொடர்பு பட்டிருந்தார் என்ற வாக்குமூலங்கள் எதுவும் கிடைக்கவி ல்லையென்பதால், இந்த விசயத்தில் அவசரப்பட தேவையி ல்லையென்று அவர்கள் தடுத்து வந்தார்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். உமாமகேஸ்வரன் கொலையின் பின் புளொட் உயர்மட்ட கூட்டங்கள் நடக்கும்போது, கொலையுடன் சம்பந்த ப்பட்ட அனைவருக்கும்- சிவராம் உட்பட- மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்ற வலியுறுத்தல்களே அதிகமாக இருந்தது. யார் தடுத்தாலும், சிவராமை சுடுவேன் என மாணிக்கதாசன் கட்சிக்கு அறிவித்து, சிவராம் தலைமறை வாக இருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது.
அப்போது, சிவராமை காப்பாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர்கள் யார் தெரியுமா?
சிவராம் கொலையுடன் தொடர்புடையவர் என யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் அநாமதேய பெயர்களில் எழுதப்படும் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் ஆட்கள்தான். அதைப்பற்றி இந்த தொடரின் பின்பகுதியில் குறிப்பிடுகிறோம்!

வரலாறு எவ்வளவு பெரிய முரண்பாட்டு மூட்டையென்பதை பாருங்கள்.
மாணிக்கதாசன் அப்பொழுது வவுனியாவில் தங்கியிருந்தார். புளொட்டின் தலைமைபீடம் கொழும்பில் இருந்தது. பின்னா ளில் புளொட்டில் இருந்து வெளியேறி ஊடகவியலாளராக சிவராம் செயற்பட தொடங்கிவிட்டார். எனினும், கொழும்பிலு ள்ள புளொட் அலுவலகத்தில் அடிக்கடி நிற்பார். சிவராமை சுடுவேன் என மாணிக்கதாசன் கூறியிரக்கிறாரே, பிறகெ ப்படி புளொட் அலுவலகத்தில் சிவராம் இருக்க முடியுமென நீங்கள் யோசிக்கலாம்.
சிவராம் முன்னெச்சரிக்கையில்லாமல் கொழும்பு புளொட் அலுவலகத்திற்கு செல்லமாட்டார். மாணிக்கதாசன் ஏதாவது அலுவலாக கொழும்பு அலுவலகத்திற்கு வந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திவிட்டுத்தான் அங்கு செல்வார். நேருக்குநேரே எதிர்ப்பட்டால் மாணிக்கதாசன் தன்னை சுட்டுவிடலாமென சிவராம் இறுதிவரை அச்சப்பட்டார்.
ஆயுத இயக்கங்களின் நீதியில் மரணதண்டனையும் சாதா ரணமான விசயமென்பதை வாசகர்கள் தெரிந்திருப்பார்கள். அமைப்பின் பணத்தில் சிறிது தொகையை எடுத்தாலே மரணதண்டனை எல்லா இயக்கங்களிலும் வழங்கப்படும் நடைமுறையிருந்தது. ஆனால் சிவராமிற்கு புளொட் மரணதண்டனை அறிவிக்கத்தக்க வேறும்சில சம்பவங்களும் நடந்தன. அப்போதெல்லாம் புளொட் பொறுமை காத்திரு க்கிறது. அதாவது சிவராமை போட்டு தள்ளுவதென்றால், அதற்கான காரணங்களை புளொட் கண்டறியத்தக்க சில சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் புளொட் அவரை போடவில்லை.
தமிழ் நெற் என ஒரு இணையத்தளத்தை வாசகர்கள் பலர் அறிந்திருப்பார்கள். அது விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதென்றுதான் இன்றுவரை பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பினாமி பணத்தில் உருவாகி, இயங்கிக் கொண்டிருக்கிறதென நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அந்த இணையம் ஆரம்பிக்கப்ப ட்டதன் பின்னால் இருந்தது புளொட் . இந்த தகவல் பெரும்பா லான வாசகர்களிற்கு அதிர்ச்சியை கொடுக்கும்.
அந்த சம்பவத்தையும் சொல்லிவிடுகிறோம்.
1990களின் மத்தியில், இணையத்தள பாவனை அதிகரிக்க தொடங்க, இணையத்தளம் ஒன்றை ஆதரிக்கலாமென புளொட் விரும்பியது. சொந்தமாக இணையத்தளம் ஒன்றை நடத்தினால், பின்னாளில் பிரசார திட்டங்களிற்கும் உதவும் என நினைத்தார்கள். அப்பொழுது புலிகள் சார்பான இணையங்களும் ஒன்றோ இரண்டோ இயங்க ஆரம்பித்திருந்தன. அப்படியொன்றை புளொட்டும் விரும்பியது. அப்பொழுது புளொட் தொடர்பில் சிவராம் இருந்ததால், இணையம்- ஊடகம் என்றதும் புளொட்டின் முதலாவது தெரிவாக சிவராமே இருந்தார்!.
சிவராமை அழைத்து பேசினார்கள். கொழும்பிலிருந்து புளொட் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இணைய ஊடகம் ஆரம்பிக்கப்படுவதை சிவராமும் வரவேற்றார்.
இணையத்தை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டுமென புளொட் கேட்டது. இணைய ஊடகத்தின் இயக்கம் பற்றி கொஞ்சம் பேசிவிட்டு, அண்ணளவாக மூன்று இலட்சம் ரூபா வரை தேவைப்படுமென ஒரு கணக்கை சொன்னார். நன்றாக கவனியுங்கள். இது 1996 இல் நடந்தது.
இணைய ஊடகத்தை ஆரம்பித்து, நடத்துவதற்கான ஆரம்பகால செலவாக புளொட் 3 இலட்சம் ரூபாவை வழங்கியது. சிவராம் ஒரு இணையத்தை ஆரம்பித்து, அதற்க தமிழ் நெற் என பெயரிட்டார்.
மாணிக்கதாசன்
ஆனால் வேடிக்கையென்னவென்றால், புளொட் 3 இலட்சம் ரூபா வழங்கியதே தவிர, அது புளொட்டின் இணையத்தளமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் ஆதரவாக காண்பித்தாலும், சிறிது காலத்திலேயே அது தன்னை மாற்றிக் கொண்டு விட்டது. புலிகளிற்கு ஆதரவான நிலைப்பாட்டையெடுத்த சமயங்களில், புளொட் அது குறித்து சிவராமிடம் கேள்வியெழுப்பியிருக்கிறது. “புளொட் ஆதரவு போல காண்பித்தால் யாரும் கவனிக்கமாட்டார்கள். புலிகள் பாணியில் பயணித்து, முக்கியமான சமயத்தில் உங்களிற்கு கைகொடுப்பேன்“ என அப்பொழுதெல்லாம் சிவராம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. புலம்பெயர்ந்துள்ள தனது நண்பர்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் வலையமைப்பிற்குள் அந்த இணையத்தளத்தை கொண்டு வந்தார். தமது காசில் உருவான இணையத்தளத்தை தமது கைக்கு கிடைக்காமல் போன ஆத்திரம், புளொட்டிடம் இறுதிவரை இருந்தது. ஆனால், அதை கண்டும்காணாமலும் விடுவதை போல சிவராமிடம் காண்பித்தார்கள்.
தமிழ் நெற்றிற்காக தந்த பணத்தை புளொட் மறந்துவிடும் என நினைத்தோ என்னவோ, மீண்டும் புளொட்டிடம் பணத்திற்கு சென்றார் சிவராம். இம்முறையும் ஊடகம்தான், ஆனால் இணையத்தளம் இல்லை. ஒரு பத்திரிகை!
(தொடரும்)



No comments:

Post a Comment