புளொட் மோகன் தொடர்பான தகவல்களை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். மட்டக்களப்பில் புலிகளின் பகுதியில் முதலாவது தாக்குதலை புளொட் மோகன்தான் வெற்றிகரமாக நடத்தியிருந்தார், அதன் பின்னர், இராணுவ புலனாய்வுத்துறை வட்டாரத்திற்குள் அவரது புகழ் கிடுகிடுவென ஏறியிருந்தது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
புளொட் மோகன் பற்றி மேலும் சில தகவல்களை வாசகர்களிற்கு சொல்ல வேண்டும்.
புளொட் மோகன் மட்டக்களப்பை சேர்ந்தவர். புளொட் அமைப்பின் ஓரளவு முக்கியஸ்தர் ஆகி விட்டார். இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் நிலை கொண்டிருந்த சமயத்தில், அவர்களுடன் ஈ.என்.டி.எல்.எவ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல் ஆகியன இணைந்து செயற்பட்டன.
புலிகளிற்கு இலங்கை இராணுவம் இரகசிய உதவிகள் சில செய்தார்கள்.
உமாமகேஸ்வரனின் சில நிலைப்பாடுகளால் இலங்கை, இந்தியாவிடம் உதவி பெறாமல் விட்டதையும், அதனால் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டதையும் இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
புளொட்டிடம் அப்போது ஆயுதங்களும் அவ்வளவாக கிடையாது. இலங்கை, இந்திய இராணுவங்கள், புலிகளுடன் முத்தரப்பு மோதலை நடத்துவது சாதாரண விடயமல்ல. இதனால் புளொட் போராளிகள் மனதளவில் களைக்க ஆரம்பித்தனர். 1989இல் புலிகள் முள்ளிக்குளம் புளொட் முகாமை தாக்கினார்கள். அதற்கு சற்று முன்னர், பண்டிவிரிச்சானில் உள்ள முகாமொன்றை தாக்கினார்கள். இந்த இரண்டு தாக்குதலின் பின்னர், புளொட் மோகன் அமைப்பிற்குள் ஒரு கலகத்தை கிளப்பினார். மட்டக்களப்பை சேர்ந்தவர்களாகிய தாம், மட்டக்களப்பிற்கே செல்லப் போவதாக அமைப்பிற்குள் நெருக்கடி கொடுத்தார்.
வேறு வழியின்றி புளொட் அதை அனுமதிக்க, சுமார் 30 பேருடன் மட்டக்களப்பு சென்று இயங்கினார்.
பின்னர், புளொட் அமைப்பிலிருந்து மோகன் எப்படி வெளியேறினார் என்பது பற்றியும், அந்த காலத்தில் நடந்த- வெளியில் வராத- சில சம்பவங்களையும் அடுத்த பாகத்தில் குறப்பிடுகிறோம்.
சிவராம் கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை அறிக்கைகளை வாசகர்கள் பலர் படித்திருக்கவோ, அறிந்திருக்கவோ மாட்டார்கள். அதிலிருக்கும் சில தகவல்களை குறிப்பிடுகிறோம்.
சிவராமின் சிம் அட்டை, புளொட் அமைப்பின் பீற்றரிடம் இருந்து மீட்கப்பட்டதல்லவா. அந்த சிம் அட்டை விவாரத்தை வைத்தே, புளொட்டிற்கும் இந்த விடயத்திற்கும் முடிச்சு போடப்பட்டது.
நீதிமன்ற விசாரணை அறிக்கைகளின்படி, அந்த சிம் அட்டைகளை பீற்றரிடம் கொடுத்தவர்கள் மண்டைப்பீஸ் சுரேஷ், பாலா என்கிற பாலச்சந்திரன். அப்படித்தான் சம்பவம் நடந்தது என்பதை ஏற்கனவே, சம்பவ ஒழுங்கின்படியும் குறிப்பிட்டிருந்தோம்.
மண்டைப்பீஸ் சுரேஷை பற்றி கடந்த பாகங்களில் ஓரளவு குறிப்பிட்டிருந்தோம். அவர் கொல்லப்பட்ட விவகாரத்தையும் சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அப்போது தவற விட்ட வாசகர்களிற்காக, கொல்லப்பட்ட சம்பவத்தை மேலோட்டமாக குறிப்பிடுகிறோம்.
மண்டைப்பீஸ் சுரேஸ் புலிகளில் இருந்த காலப்பகுதியில், மட்டக்களப்பில் ஒரு பெண்ணை காதலித்தார். பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை, புலிகள் அமைப்பை விட்டு வெளியேறி, மட்டக்களப்பையும் விட்டு வெளியேறி, அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார்.
அவர் இராணுவ புலனாய்வுத்துறையுடன் இணைந்து தமக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடுவதாக புலிகள் கருதினார்கள். அதேநேரம், அவரை தமது ஆளாக இராணுவம் எப்போதும் உரிமைகோரவில்லை. புலனாய்வு விடயங்களில் இதற்கு மேல், ஆழமாக சொல்ல வேண்டிய அவசியமில்லையென கருதுகிறோம்.
கொழும்பில் அத்துகிரிய மிலேனியம் சிற்றி சம்பவம் வாசகர்களிற்கு நினைவிருக்கலாம். அங்கு இரகசியமாக இயங்கி வந்த இராணுவப் புலனாய்வு பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் வெளியானதையடுத்து, வரிசையாக பல இராணுவ புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டனர். அப்போதைய ஐ.தே.க அரசு மீது இந்த சம்பவத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போது விசாரணைகளுடன் தொடர்புடைய பொறுப்பான பதவியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர், ஓய்வின் பின்னர் அண்மையிலும் இந்த சம்பவம் தொடர்பான மீள் விசாரணை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
சுரேஷூம் அந்த அணியுடன் இயங்கியிருக்கலாம். அதனாலேயே அவரது அடையாளம் வெளிச்சத்திற்கு வந்திருக்க வேண்டும்.
மட்டக்களப்பில் சுரேஷிற்கு காதலி இருந்த விடயத்தை கண்டுபிடித்த புலிகள், அவரை அணுகி, தாக்குதலிற்கு தயார்செய்தனர். சுரேஷை சுட அவரும் சம்மதித்து, அதற்கான பயிற்சிகள் பெற்று, சாதாரண பெண்ணைப் போல கொழும்பிற்கு வேலை தேடி வந்தார். நுகேகொட பகுதியில் அப்போது சுரேஷ் தங்கியிருந்தார். அவருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தினார்.
இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். காதலி கொழும்பில் தனிமையில் தங்கியிருக்கிறார். சுரேஷூம் தனிமையில் இருக்கிறார். அவரது மனம் கொஞ்சம் அப்படி இப்படி அலைபாய்வது இயற்கைதானே. காதலியை தனிமையில் சந்திக்க அழைத்திருக்கிறார். கொஞ்சம் போக்குகாட்டி, பின்னர் சம்மதித்தார்.
போக்குக்காட்டியது எதற்கென்றால், தகவலை இந்த ஒப்ரேஷனின் பின்னாலிருந்த புலிகளின் அணிகளிற்கு தெரிவித்து, சுரேஷை போடும் ஒப்ரேசனை திட்டமிடும் அவகாசத்தை பெறவே. அதன்படி, குறிப்பிட்ட நாளொன்றில்- அனேகமாக நுகேகொடவிற்கு அண்மித்த பகுதியாகத்தான் இருக்க வேண்டும்- சுரேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். முச்சக்கர வண்டியொன்றில் வந்த காதலி, சுரேஷின் அறைக்கு சென்றார். வெளியே முச்சக்கரவண்டி தாயராக இருந்தது. உள்ளே போனதும், “விசயத்தை முடித்து விட்டு“ ஓடிவந்து முச்சக்கர வண்டியில் ஏறினார். தப்பி சென்று விட்டார்.
பீற்றரிடம் சிம் அட்டையை கொடுத்தவர்களில் ஒருவர் இல்லை.
அதாவது, விசாரணையை மேற்கொண்டு நடத்துவதில் உள்ள ஒரு வழி அடைபட்டது.
சிம் அட்டையுடன் சம்பந்தப்பட்ட, அடுத்தவர் பாலச்சந்திரன். அவர் உயிரோடு இருந்தார். இப்போதும் இருக்கிறார்!
ஆனால்….
(தொடரும்)
No comments:
Post a Comment